Published:Updated:

காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்த நடிகர் திலகத்தின் குரல்....! - ஒரு நெகிழ்வனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image ( Ben Vorneweg on Unsplash )

"தம்பி கிஸ்தி கொடுக்காட்டி பரவால்ல... டோக்கனை (மாறுவேட போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு துண்டு சீட்டில் ஒரு எண்னை எழுதி கொடுப்பார்கள்) கொடுத்துட்டு போ ...!"

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சில திரைப்பட வசனங்களை கேட்கும்போது நீங்களும் அந்த கதாப்பாத்திரமாகவே உணர ஆரம்பித்துவிடுவீர்கள். உங்கள் உடலிலும் அந்த உத்வேகம் ஊற்றெடுக்கும். என்னுடைய பால்ய வயதுகளில் எப்போது இந்த காட்சியை பார்க்கும்போதும் ஒவ்வொரு முறை இந்த வசனங்களை கேட்கும்போதும் என் உடலை புல்லரிக்க வைத்திருக்கிறது.

நான் சிறுகாம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டபோது, நான் போட்ட வீர பாண்டிய கட்டபொம்மன் வேடத்திற்காக நான் பேசி, எனக்கு முதல் பரிசை பெற்று தந்த வசனம் அது.

 கட்டபொம்மன்
கட்டபொம்மன்

"கிஸ்தி திரை வரி வட்டி....

வானம் பொழிகிறது பூமி விளைகிறது.... உனக்கேன் கொடுப்பது கிஸ்தி....

எங்களுடன் வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இறைத்தாயா....

நீர் பாய்ச்சி நெடுவயல் நிறைய கண்டாயா....

நாற்று நட்டாயா.. களை பறித்தாயா....

கழனி வாழ் உழவருக்கு காஞ்சி கலயம் சுமந்தாயா...

அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு...

மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா....

அல்லது நீ மாமனா... மச்சானா...மானங்கெட்டவனே....

எதற்கு கேட்கிறாய் திரை..யாரை கேட்கிறாய் வரி... "

என்று உணர்ச்சி பொங்க பேசிவிட்டுக் கட்டபொம்மனாக நினைத்து வேகமாக அந்த போட்டி நடந்த திறந்தவெளி அரங்கைவிட்டு வெளியேற எத்தனிக்கையில் அந்த போட்டிக்கு நடுவாராயிருந்த எங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள், "தம்பி கிஸ்தி கொடுக்காட்டி பரவால்ல... டோக்கனை (மாறுவேட போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு துண்டு சீட்டில் ஒரு எண்னை எழுதி கொடுப்பார்கள்) கொடுத்துட்டு போ ...!" என்று சொல்ல அங்கே அமர்ந்திருந்த மாணவர்களும் பிற நடுவர்களும் சிரித்தது எனக்கு இன்றும் நினைவிலிருக்கிறது. அதுதான் என்னுடைய முதல் மேடை அனுபவம்.

மேலே சொன்ன முழு வசனத்தையும், என்னால் முழுவதும் நினைவுப்படுத்தி அப்பொழுது சொல்ல முடியவில்லை ஆனால் ஒருவாறாக மானங்கெட்டவனே என்று முடித்து அனைவரின் கைத்தட்டலையும் பெற்றுப் பரிசு வாங்கிவிட்டேன்.

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் தன்னுடைய கோட்டையை அமைக்க காரணமாக ஒரு கதை சொல்வார்கள். வேட்டைக்கு சென்றபோது வேட்டை நாய்கள் முயல்களை துரத்தியதாகவும் ஓரிடத்திற்கு சென்றதும் முயல்கள் நாய்களை விரட்ட ஆரம்பித்ததாம். கட்ட பொம்மன் அந்த இடத்தை தேர்வு செய்து தன்னுடைய கோட்டையை நிர்மாணித்ததாக எங்கோ படித்த நினைவு. அதுபோல, மேடை பயம் (stage fear) இல்லாமல் பிற்பாடு பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது இந்த கட்டபொம்மன் வேடம் என்றால் அது மிகையாகாது.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

நீங்கள் சற்று யோசித்து பார்த்தீர்களானால் இந்த வேஷம் உங்களுடைய பள்ளி காலத்தில் மிக பரிச்சயமான வேடமாக இருந்திருக்கும். நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ கட்டாயம் இந்த வேஷத்தைப் போட்டிருப்பார்கள். அதற்காக முதல் பரிசையும் வென்றிருப்பார்கள்.

இந்த வேடத்திற்காக தலை கிரீடம் போர்வாள் போன்றவற்றை வீட்டிலேயே அட்டையில் வரைந்து என்னுடைய அப்பாவும் அண்ணாவும் வடிவமைத்து கொடுத்தார்கள். என்னுடைய அம்மாதான் இந்த வசனங்களை பேப்பரில் எழுதிக் கொடுத்து அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள்.

பொட்டலம் மடிக்கப்பட்ட பேப்பரால அரசு வேலை கெடச்சது! - நியூஸ் பேப்பர் தலைமுறையின் மெமரீஸ் #MyVikatan

பின்பு பலவருடங்கள் கழித்து அதே வேடத்தை என்னுடைய அக்கா பையனுக்கும் போட்டுவிட்டு வசனங்களை சொல்லி கொடுக்க அவனும் பரிசு பெற்றான்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் சுதந்திர பிரகடனத்தை தொடங்கிய வீர பாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வரலாற்றை பிற்பாடு விலாவாரியாக தெரிந்து கொள்ளும் வரை பலருக்கு சொல்லின் செல்வர் மா.போ. சி அவர்கள் எழுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "வீர பாண்டிய கட்டபொம்மன்" திரைப்படமே ஒரு மாதிரி கையேடாக (Reference Guide) இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இன்றும் கட்டபொம்மனை கற்பனையில் உருவக படுத்தினால் நடிகர் திலகம் அவர்களின் கம்பீரமான தோற்றமே என் நினைவுக்கு வருகிறது.

கட்டபொம்மன் கோட்டை
கட்டபொம்மன் கோட்டை

அந்த கட்டபொம்மன் ஜாக்சன் துரை பகுதியை எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை முறைக் கேட்டாலும் எனக்கு எப்பொழுதும் சலிப்பு ஏற்பட்டதே இல்லை. இது போன்ற பலவிதமான வேடங்களை பள்ளிக் காலத்தில் நாம் போடுவதற்கு நடிகர் திலகம் அவர்களே காரணம்.

பிற்பாடு ஒரு பள்ளி சுற்றுலாவின் போது பாஞ்சாலங்குறிச்சிக்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது புனரமைக்கபட்ட அந்த சுற்றுலா தலத்தை கட்டபொம்மனின் நினைவுகளுடன் சுற்றி வந்தோம். காதுக்குள் நடிகர் திலகம் அவர்களின் குரல் ஒலித்து கொண்டே இருந்தது.

பாரதியார் வேடமாகட்டும், வ. உ. சிதம்பரனார் வேடமாகட்டும் அல்லது ராஜராஜ சோழனாகட்டும் அதற்கு நடிகர் திலகத்தின் ஏதேனும் ஒரு திரைப்படம் உதாரணமாக இருக்கும். அதிலிருந்து நாம் ஒரு ஐம்பது சதவிகிதம் எடுத்து அப்படியே நடித்து காட்டினால் போதும் பரிசு நிச்சயம்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் அவர்களின் தலைமுறைக்கு பின்பு வந்த அனைத்து நடிகர்களுக்கும் எங்கேனும் ஏதேனும் ஓரிடத்தில் அவருடைய சாயல் வெளிப்படாது இருந்ததில்லை. நடிப்பில் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு பல்கலை கழகம் போன்றவர். அந்த பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்களே மற்ற நடிகர்கள். அது ஒரு துறை சார்ந்த பட்டமா அல்லது பல பட்டங்கள் பெற்றிருக்கின்றார்களா என்பதில்தான் வேறுபாடு உண்டு.

நடிகர் திலகம் அவர்கள் என்னுடைய அப்பாவின் தலைமுறை நடிகரானாலும் இது போன்ற சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் வேடத்தில் முழுமையாக அவரை பார்க்க முடியும். என்னுடைய முந்தைய தலை முறை சேர்ந்த நடிகரானாலும் நான் அவரை நினைவு கூற காரணம் என்னதான் வரலாற்று புத்தகத்தில் கட்ட பொம்மனை பற்றி படித்திருந்தாலும் ஆசிரியர்கள் சிறப்பாக வகுப்பு எடுத்தாலும் அந்த திரைப்படமே கட்ட பொம்மனை பற்றி புரிந்து கொள்ள இன்றும் உதவியாக இருக்கிறது.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு