Published:Updated:

காவிரி ஆத்து குளியல்... காய்ந்த வாழை சருகின் வாசம்..! - மகேந்திரமங்கலம் மண்ணின் கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

அந்த மணம் குப்பென்று நம் நாசியை நிறைக்கும், அந்த மணத்தை நுரையீரலில் நிரப்பிக் கொண்டு மெத்தென்ற அந்தப் புழுதி நிறைந்த மண்ணில் கால்கள் புதைய புதைய நடப்பதே ஒரு அலாதியான அனுபவம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கேந்திரமங்கலம் காவிரிக்கரை ஓரம் மிகச்செழிப்புடன் இருந்த ஓர் ஊர் (இன்றும் ஓரளவு செழிப்புடன் இருக்கிறது). முப்போகம் விளையும் இந்த ஊரின் முக்கிய விவசாயப் பயிர்கள், நெல், வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை. எங்கும் பசுமையான வயல்களுடன் தென்னை மரங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரம் முழுவதும் பனை மரங்களுமாக பார்ப்பதற்கே குளிர்ச்சியான ஊர் அது. பழங்காலத்தில் இந்த ஊரின் ஆற்றுப் படுகையில் இரு மன்னர்களுக்கு இடையே போர் நிகழ்ந்ததாக எதோ ஒரு வரலாற்று புதினத்தில் படித்ததாக நினைவு.

Representational Image
Representational Image

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய (ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று நினைக்கிறேன்) புத்தகத்தில் மகேந்திரமங்கலத்திலுள்ள ஒரு பெரியமனிதர் அவரை தத்து கேட்டதாகவும், எதோ காரணத்தினால் அது நடைபெறவில்லை என்றும் அதனாலேயே அவர் எழுத்தாளராக ஆக முடிந்தது என்றும் இல்லையேல் ஒரு பண்ணையாராக இந்த ஊரில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதாக எழுதியிருக்கிறார்.

மகேந்திரமங்கலம்தான் என்னுடைய தாத்தாவின் ஊர். என் அம்மா பிறந்த ஊர். நாங்கள் சிறுவர்களாக இருந்தபொழுது எங்களுடைய தாத்தாவினுடைய ஆண்டு நினைவு தினம் (திவசம் என்று கூறுவார்கள்) அன்றும், பிறகு மாரியம்மன் திருவிழாவிற்கு என்று வருடத்திற்கு இரண்டு முறை மகேந்திரமங்கலத்திற்கு தவறாது செல்வோம். அந்த நாள்கள் மிக இனிமையானவை.

Representational Image
Representational Image

இந்த அழகான சிறுவயது நினைவுகள் அனைவருக்கும் பொதுவானவை. நிறைவோ குறைவோ வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வாறான உறவினர்களின் வீட்டுக்குச் சென்று சில நாள்கள் தங்கி சந்தோசமாக அனுபவித்த நாள்கள் உங்களுக்கும் இருக்கும். அது உங்கள் பாட்டி தாத்தா வீடாகவோ, உங்கள் சித்தி, பெரியம்மா, மாமா வீடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இன்றும் நினைத்து அசைபோடும் இனிமையான நாள்களாக அது இருப்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

வ்வொரு ஊருக்கும் ஒரு மணமிருக்கும். இது போன்ற ஆற்றங்கரையோர வாழை, நெல் அதிகம் விளையும் ஊர்களுக்கென்று ஒரு மண்வாசனை உண்டு. காய்ந்த வாழை சருகுகளின் மணத்துடன் புழுங்கிய வைக்கோல்களின் மணமும், கால்நடைகளின் மணமும் கலந்த கலவையாக இருக்கும். பேருந்தை விட்டு இறங்கி அந்த மண்ணில் கால் வைத்தவுடன் அந்த மணம் குப்பென்று நம் நாசியை நிறைக்கும், அந்த மணத்தை நுரையீரலில் நிரப்பிக் கொண்டு மெத்தென்ற அந்தப் புழுதி நிறைந்த மண்ணில் கால்கள் புதைய புதைய நடப்பதே ஓர் அலாதியான அனுபவம்.

காவிரி ஆத்து குளியல்... காய்ந்த வாழை சருகின் வாசம்..! - மகேந்திரமங்கலம் மண்ணின் கதை #MyVikatan

எங்களுடைய அம்மாச்சி (அம்மாயி, அம்மாச்சி, அம்மத்தா, ஆச்சி அனைத்தும் அம்மாவின் அம்மாவை குறிக்கும் வார்த்தைகளே, நாங்கள் அம்மாயி என்றே கூப்பிடுவோம்) வீட்டுக்கு யார் முதலில் செல்வது என்று பேருந்தை விட்டு இறங்கியவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவோம்.

வீட்டின் நுழைவாயிலின் இருபுறமும் காகிதப் பூ செடி வைக்கப்பட்டிருக்கும். உள் நுழைந்தவுடன் வலதுபுறம் ஒரு குடிநீர்குழாய் மற்றும் ஒரு நீர் தொட்டியுடன் திறந்த வெளி குளியலறை. சற்று முன்னே சென்றால் ஒரு பெரிய திண்ணை வெப்ப மரத்தின் கிழே கட்டப்பட்டு இருக்கும். எங்களுக்கு உட்கார்ந்து காற்று வாங்கவும் விளையாடவும் வசதியாக. மற்றும் பெரிய காலியிடம் வாசலுடன் இருக்கும்.

உள்ளே காம்பவுண்டு செய்யப்பட்டு ஒரு பெரிய வீடு நெடிய திண்ணையுடன் நடுவில் வாசற்படியுடன், உத்திரம் மிக உயரத்தில் அமைக்கப்பட்டு மேற்புறம் வைக்கோல்தாள் வேய்ந்தும் உட்புறம் தென்னை ஓலையால் நெருக்கமாக வேயப்பட்டு மழைநீர் உட்புகாத வண்ணம் இருக்கும். கோடை காலத்தில் கூட உள்ளே மிக குளிர்ச்சியாக இருக்கும். இடதுபுற திண்ணையில் ஒரு மண் பானையில் எப்பொழுதும் குளிர்ந்த நீர் நிரப்பப்பட்டிருக்கும். அந்தப் பானையிலிருந்து நீர் அருந்தாமல் நாங்கள் உள்ளே சென்றதே கிடையாது.

ஒரு பெரிய சமையற் கட்டு இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் கீற்று வேயப்பட்டு மூன்று புறம் சுவர்களும் ஒருபுறம் மட்டும் தூண்களுடன் திறந்த வெளியாக வெளிச்சம் வரும்படி தனியாக இருக்கும்.

Representational Image
Representational Image

விசேஷ நாள்களில் குறைந்தது ஐம்பது பேருக்கு சமைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் என் அம்மாவுடன் உடன் பிறந்தவர்கள் ஓர் அண்ணா, ஐந்து அக்கா, இரண்டு தங்கைகள் ஒரு தம்பி. என் அம்மாவின் அண்ணா மற்றும் தம்பி இருவரும் அந்த ஊரிலேயே இருந்த காரணத்தினால் அவர்கள் பிள்ளைகள் தவிர மற்ற அனைவரும் இங்குதான் சாப்பிடுவோம்.

எங்கள் வயதொத்த பிள்ளைகள் என்று மூன்று நான்கு பேர் இருப்போம். இதுபோல ஒரு குறிப்பிட்ட வயதுடைய பையன்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற வயதில் பிள்ளைகள் இருப்பார்கள். நன்றாக விளையாடுவோம் சண்டை போடுவோம் சாப்பிடுவோம். இரவு உறங்குகையில் கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வோம். ஒரே ஒரு மின்விசிறி மட்டுமே இருக்கும்.

இரவில் எப்பொழுது விழித்தாலும் யாராவது இரண்டுபேர் எதாவது கதை பேசிக்கொண்டிருப்பார்கள், நாங்களும் அதை சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தூங்கி விடுவோம். பெரும்பாலும் அந்தக் கதைகள் அவர்களுடைய உள்ளக் குமுறலாகவே இருக்கும்.

காலை எழுந்தவுடன் எங்கள் அம்மாக்களிடம் நச்சரித்து ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பரோட்டா சாப்பிட செல்வோம் (இல்லையென்றால் வீட்டில் உப்புமா சாப்பிட வேண்டும்). அந்த ஊரில் உள்ள சிறு ஹோட்டல்களில் காலை இட்லி, தோசை பரோட்டா கிடைக்கும். லேட்டாக சென்றால் பரோட்டா தீர்ந்துவிடும். ஒரு பரோட்டா ஐம்பது பைசா என நினைக்கிறேன். ரெண்டு பரோட்டாவும் நிறைய குருமாவும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு சந்தோசமாக திரும்பி வருவோம்.

Representational Image
Representational Image
Vikatan team

மதியத்திற்கு மேல் காவேரி ஆற்றுக்கு குளிக்கச் செல்வோம். சென்றால் ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும். துணிகளைத் துவைத்து அங்கேயே காய வைத்துவிட்டு நன்றாக காயும் வரை குளித்துக்கொண்டிருப்போம். காய்ந்த பிறகு எடுத்து உடுத்திக்கொண்டு திரும்ப வீட்டிற்கு வருவோம்.

இது அந்த ஊரில் இருக்கும் வரை எங்களுடைய தினசரி நடைமுறை.

எப்போதாவது பக்கத்தில் இருக்கும் நகரமான தொட்டியத்திற்கு சினிமா பார்க்க வயல்களினூடே குறுக்கு வழியில் செல்வோம். 50 பைசா தரை/பெஞ்சு டிக்கெட்டில் அமர்ந்து படம் பார்த்துவிட்டு இரவில் மூன்று கிலோமீட்டர் சாலை வழியாக எந்த பயமுமின்றி நடந்து வருவோம்.

எப்படி நாள்கள் சென்றது என்றே தெரியாது. அனைத்தும் முடிந்ததும் ஒவ்வொருவராக ஊருக்கு கிளம்புவார்கள். எங்களது முறை வரும் வரை அனைவரையும் வருத்தத்துடன் அனுப்பிவைத்து விட்டு எங்கள் முறை வரும்போது அடுத்து எப்போது விடுமுறை வரும் எப்போது இங்கு வருவோம் என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நாங்களும் விடை பெறுவோம்.

நானும் விடை பெறுகிறேன்.

-ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு