Published:Updated:

`ஒன்னாங்கிளாஸ் நட்பு!' -Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Balaji )

அந்த அறையின் வாயில் கதவில் 1-D என எழுதப்பட்டிருந்தது. ஆம், அது எங்களது பள்ளியின் முதல்நாள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாற்பது பேர் கலங்கிய கண்களும் உருண்டு ஓடும் கண்ணீருமாய் ஒன்றும் புரியாத சூழலில், திடீரென விட்டுச் செல்லப்பட்டு அமர்ந்திருந்தோம். எங்களின் முன் நின்றுகொண்டிருந்த பெண், எங்களை அமைதியாய் இருக்கும்படி மிரட்டிக்கொண்டிருந்தார்.

அந்த அறையின் வாயில் கதவில் 1-D என எழுதப்பட்டிருந்தது. ஆம். அது எங்களது பள்ளியின் முதல்நாள், அது ப்ளே குரூப் ப்ரீகேஜி போன்ற தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள பல வகுப்புகள் இல்லாத காலம். நேரடியாக 5 வயதானாலே போதும், ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக்கொள்வார்கள்.

Representational Image
Representational Image
Hariharan.T

எங்களை மிரட்டுவது போன்று கெஞ்சிக்கொண்டிருந்த எங்களது வகுப்பாசிரியர், ஒரு குச்சியை எடுத்து டேபிளின் மேல் தட்டியதும் அனைவரும் சில நிமிடங்கள் அமைதியானோம்.

எனக்கு எல்கேஜி, யுகேஜி படித்த அனுபவத்தால் அங்குமிங்கும் பார்த்தேன். என்னைப் போன்றே அழாமல் பார்த்துக்கொண்டிருந்த மேலும் நான்கு அனுபவசாலிகள் அங்குமிங்குமாய் அமர்ந்திருந்தோம். முதல்நாள் காலை மட்டுமே பள்ளி. மீண்டும் அடுத்தநாள்... இன்று நாங்கள் நால்வரும் ஒன்றாய் அமர்ந்தோம்.

எங்களுக்குள் அழுவோரைப் பற்றிய கிண்டலாக நட்பாக ஆரம்பித்தோம். இடைவேளைகளில் இலந்தைப்பழம், மாங்காய் மோதிர வத்தல்கள், பாக்கு மிட்டாய், கல்கோனா மிட்டாய் என எப்போதாவது கிடைக்கும் பத்து இருபது பைசாக்களில் கொண்டாடிய பார்ட்டிகள், வகுப்பறையின் கரும்பலகைக்கான கரியும் ஊமத்தங்காயையும் சேர்த்து அரைத்துப் பூசுவது, வயதான வாட்ச்மேன் தாத்தாவுடனான சிறுசிறு குறும்பு என நட்பும் வளர்ந்தது.

மூன்றாம் வகுப்பு மாடியில் வகுப்பறை. ஏதோ பெரியவர்களானதாய் உணர்ந்தோம். எங்கள் பள்ளியின் முறைப்படி A,B&C மாணவிகளுக்கும் D&E மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. எங்களது வளர்ச்சி, தற்போது கேங்வாராக உருவெடுக்க ஆரம்பித்திருந்தது. இரண்டு வகுப்புகளுக்கும் இடையில் இருக்கும் தடுப்பின் கீழ்ப்பகுதியில் இடைவெளி இருக்கும்.

மதிய உணவு இடைவேளையின்போது, அந்த இடைவெளி அருகே வரும் யாரும் தப்ப முடியாது, பிரச்னை என ஒன்றும் இல்லாவிட்டாலும். ஆம். அந்த இடைவெளி வழியாக கால்களைப் பிடித்து தத்தம் வகுப்புகளுக்குள் இழுத்து, எல்லோரும் சேர்ந்து அவர்கள் மேல் விழுவதும் அடிப்பதுமாய் இருப்போம். அடுத்த வகுப்பின் காவலர்களாய் இருக்கும் நான்கைந்து பேர் வந்து மீட்டுச் செல்வார்கள். இதேபோல இருபுறமும் நடக்கும். எங்களது வகுப்பின் காவலர்களாக நாங்களாகவே உருவெடுத்திருந்தோம்.

Representational Image
Representational Image

எங்களுக்குள்ளான விளையாட்டின் உக்கிரத்தில், ஒருவனின் மூக்கில் ஸ்லேட்டால் வெட்டிக்கொள்வது வரை சென்றது. மதிய உணவைக் கொண்டுசென்று ஒரே இடத்தில் அமர்ந்து உண்பதும், அதற்காக அருகில் உள்ள சர்ச்சுக்கு செல்வதும் எங்களது வீட்டுக்குச் செல்வதுமாய் வளர்ந்தோம்.

ஐந்தாம் வகுப்பு. நாங்கள் மேலும் வளர்ந்திருந்தோம். மதிய உணவு இடைவேளையில் சண்டைகள் நின்றிருந்தது. யார் சொல்லி ஆரம்பித்தோம், யார் சொல்லி நிறுத்தினோம் தெரியாது.

நண்பர்கள் என்ற உணர்வே புரியாத தருணத்தில் பிரிந்தோம்.

வேறு வேறு பள்ளி... புதிதாய் நண்பர்கள். இருப்பினும் மற்ற மூவரில் ஒருவனான அவன், மீண்டும் வரவும் நட்பு மீண்டும் துளிர்த்தது. நட்பின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

துரத்திக்கொண்டு ஓடுவதும், ஒரே சைக்கிளில் தூரத்தை அறியாமல் சுற்றுவது, கண்மாய்களில் நீச்சல். ஒரு தூண்டிலை மட்டும் போட்டு பலமணி நேரம் காத்திருப்பில் கிடைத்த ஒரே மீனையும் எடுக்கத் தெரியாமல் கையில் குத்துப்படுவதும் கவன் வில்லால் ஓணாணை அடிப்பதும் குருவிகளை அடிக்க முயன்றதுமாய் அந்த நாள்களை நினைக்க நினைக்க மகிழ்ச்சி. செய்தவை தவறோ சரியோ, கவலையின்றி மகிழ்ந்த அந்த நிமிடங்கள் இன்றளவும் மகிழ்வாக புரியாத சிரிப்பை முகத்தில் தவழவிடும்.

Representational Image
Representational Image
Credits : Nandakumar.E.J

பத்தாம் வகுப்பு முடிவுகளைப் பார்க்க, எங்களுடைய பயணம் எங்களுக்கான நகைமுகத்தை எப்பேர்ப்பட்ட சோகத்திலும்கூட தருவது நிச்சயம். இரண்டு சைக்கிளில் பயணித்த எங்கள் மூவரின் பயணம், இருவராய் வந்த சைக்கிள் சகதிக்குள் மாட்டி ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்ததும் அதை கழுவக்கூட தண்ணீரின்றி சகதியின் தெளிந்த நீரை பயன்படுத்த விழுந்த நினைவு மறைந்து நாங்கள் சிரித்துக் கொண்டதும், எப்பேர்ப்பட்ட நிலையிலும் பிரிந்துவிடாத நட்பாய் மட்டுமே இருக்கத் தெரிந்த எங்களுக்கு நினைத்துப் பார்த்துக்கொள்ள இருப்பது மகிழ்ச்சி மட்டுமே.

-சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு