Published:Updated:

ராமபிரானும் திப்பு சுல்தானின் வாளும்! - சமத்துவம் பெருக்கெடுத்த பொற்காலம் #Nostalgic #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

3 முறை புனித ஹஜ்யாத்திரைக்குச் சென்றுவந்த ஹாஜியார் மாமா, அரசலாற்றாங்கரை ரிக்சா தொழிலாளர் குடும்பங்களுக்காக ராமாயணத்தை ஒளிபரப்பியதோடு அவரும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ரசித்தது இன்றும் நினைவிலிருக்கிறது!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக் டவுண் நாள்ட்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அதன் கிளாசிக் ஹிட்டான ராமாயண தொடரை மறுஒளிபரப்பு செய்யப் போகிறது என்ற செய்தி என் பால்யத்தின் பழைய பக்கங்களை நினைவு காட்சிகளாய் மனத்திரையில் மறுஒளிபரப்பு செய்யத்தொடங்கியதில் சில லாக் டவுண் நாள்களும் சீக்கிரமாய் ஓடிவிட்டன!

எண்பதுகளின் தொலைக்காட்சி வசதிகளைக் கணக்கில் கொண்டால், அன்று ராமானந்த சாகரின் ராமாயணம் தொடருக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இன்றைய பாகுபலியை விடவும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும் !

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு மக்கள் தீபாராதனை காட்டியது, ராமன் வேடத்தில் நடித்த அருண் கோவிலை அவரின் மனைவியுடன் பொது இடங்களில் கண்ட சிலர் ஹனுமான் எங்கே, நீங்கள் சீதையுடன் அல்லவா வர வேண்டும் என்றெல்லாம் கேட்டது போன்ற வடநாட்டுச் செய்திகளெல்லாம் தினசரிகளில் அடிபட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மத வித்தியாசமின்றி அந்தத் தொடரைப் பார்த்து ரசித்ததாகத்தான் தோன்றுகிறது !

Representational Image
Representational Image

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பான ராமாயணத்தைக் காணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த ஒன்றிரண்டு வீடுகளில் தெரு முழுவதும் கூடியது! மூன்று முறை புனித ஹஜ்யாத்திரைக்குச் சென்றுவந்த எங்கள் தெருவின் பெரிய வீட்டு ஹாஜியார் மாமா, ``அவங்க சாமி, அவங்க நம்பிக்கை" என்றபடி அரசலாற்றாங்கரை ரிக்சா தொழிலாளர் குடும்பங்களுக்காக ராமாயணத்தை ஒளிபரப்பியதோடு அவரும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ரசித்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல கிறிஸ்துவ குடும்பங்களும் அடக்கம்!

சஞ்சய் கானின் ``ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்" தொடரும் எண்பது, தொண்ணூறுகளின் ஹிட் தொடர்களில் ஒன்று. தொழில்நுட்ப வசதிகளும் கிராபிக்ஸ் தந்திரங்களும் இல்லாத காலகட்டத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்டமான போர்க்காட்சிகளும், பிரபல இசையமைப்பாளர் நெளசாத்தின் பிஜிஎம்மும் இன்றும் பிரமிக்க வைக்கும்!

இத்தொடரின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பல்வேறு விபத்துகளின் உச்சமாய் கூடாரங்களில் தீப்பிடித்து 62 பேர் உயிரிழந்த சம்பவம், தொடரில் பயன்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உண்மையான வாளுடன் இணைத்துப் பேசப்பட்டது. அவரது ஆவியின் கோபம்தான் அனைத்து விபத்துகளுக்கும் காரணம் என்றெல்லாம் ஜல்லியடிக்கப்பட்டது.

ராமாயணம் தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்காலியா என்ற நடிகைதான் திப்பு சுல்தான் தொடரில், திப்பு சுல்தானுக்குத் தாயாகவும் நடித்தார் என்ற செய்தி மதங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் நடக்கும் சரமாரி தகவல் சண்டைகளைக் கண்டு சிண்டை பிய்த்துக்கொள்ளும் இன்றைய நல்லிணக்க வாதிகளுக்கு எந்தவகையிலாவது உதவுமெனில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

திராவிட மண்ணின் மதநல்லிணக்க மதிற்சுவர் திட்டமிட்டுத் தாக்கப்படும் வேகத்துக்கு அது இன்னும் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை. ஐந்து வருடங்கள் பேசி தீர்த்துவிட்டு தேர்தலன்று ஓட்டு போடாத அறிவுஜீவிகளைப் போல் இருந்துவிடாமல் மதச்சார்பற்றவர்களும் மதசகிப்புத்தன்மை கொண்டவர்களும் தங்கள் கருத்தை முன்வைக்க வேண்டிய தருணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் !

ந்த இரண்டு தொடர்களுக்கு ஈடான ஆர்வத்துடன் அன்றைய ஞாயிற்றுக்கிழமைகளை எதிர்பார்க்க வைத்த தமிழ் தொலைக்காட்சி தொடர் நீலா மாலா. மாறுபட்ட கதை மற்றும் பின்னாள்களில் தலைவாசல் விஜய் என அறியப்பட்ட நடிகரின் வித்தியாசமான குரல், உடல் மொழி ஆகிய காரணங்களுக்காக வெற்றிபெற்ற நீலா மாலா தொடரைத் தயாரித்த சோழா கிரியேசன்ஸ் மற்றும் அதன் இயக்குநர் செல்வாவுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்...

இன்று குறும்படத்திலிருந்து ஒரே குழுவாய் வெள்ளித்திரைக்கு வரும் இயக்குநர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவராக இயக்குநர் செல்வாவை குறிப்பிடலாம். நீலா மாலா தொடரின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என அதே குழுவின் தயாரிப்பில் வெளியான தலைவாசல் திரைப்படம், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று.

இப்படத்தின் மூலம் தலைவாசல் விஜய் என்ற பெயரோடு தமிழ் சினிமாவினுள் நுழைந்தார் நீலா மாலா தொடரின் நாயகன். மிகச் சிறப்பான இந்த குணச்சித்திர நடிகரின் நடிப்பாற்றலைக் கோலிவுட் இன்றளவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

Representational Image
Representational Image

சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி வரிசையில் தமிழ் சினிமாவின் `சபலிஸ்ட்' ரசிகர்களைச் சிறிது காலம் சிறை வைத்திருந்த விசித்ரா, மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் !

இளையராஜா மட்டுமே ஆக்கிரமித்திருந்த இசைத்தராசை சமன் செய்ய விரும்பியவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாய் அறிமுகமாகி, எரிகற்களாய் உதிர்ந்த தேவேந்திரன், முராரி வரிசையில் தலைவாசல் படத்தின் இசையமைப்பாளரான பாலபாரதியும் ஒருவர். தலைவாசல் விஜய் ஏற்ற கானா பாபு பாத்திரத்தின் மூலம் தேவாவுக்கு முன்பாகவே சென்னை மண்ணின் கானா கீதத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் பாலபாரதி.

இத்தனை சிறப்புகளுடன் நூறு நாள்கள் ஓடிய தலைவாசலுக்கு பிறகும், சோழா குழுவினரின் மிகப்பெரிய நன்றிக்கடன் சாதனை yet to come in their next movie … !

அதே சோழா கிரியேசன்ஸ் குழுவுடன் செல்வா இயக்கிய இரண்டாவது வெற்றிப்படமான அமராவதியில் அஜித்குமார் என்றொரு சாக்லெட் பாய் அறிமுகமானார் !

ரு முப்பது வருட இடைவெளியில், கும்பகோணம் டிகிரி காபியின் புகழை டல்கோனா காபி முந்தும் அளவுக்கு எத்தனையோ மாற்றங்கள். நீலா மாலா தொடரில் ஆரம்பித்த தலைவாசல் விஜய், இருநூறு படங்களுக்கும் மேல் நடித்து முடித்து மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார்...

Representational Image
Representational Image

அவர் வழியில் " மடிப்பு அம்சா " விசித்ராவும் !

நிகழ்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராய், நின்றால் செய்தி நடந்தால் செய்தி என்பதையெல்லாம் தாண்டி சிலபல சூழல்களில் அவரின் மௌனம் கூட செய்தியாகும் செல்வாக்கு பெற்ற `தல அஜித்தின்' ரசிக பெருமக்கள் அமராவதி படத்தின் இயக்குநர் செல்வாவுக்கு நிச்சயம் ஆயுள்கால நன்றிக்கடன் பட்டவர்களே !

மாற்றங்களையும் ஏற்றங்களையும் நோக்கி ஓடுபவர்களை மட்டுமே கவனிக்கும் சூழலில், மாறாமலேயே சாதிக்கும் சிலரின் சாதனைகள் அதிகம் பேசப்படுவதில்லை...

ராமாயணமும், ஸ்வார்ட் ஆப் திப்புசுல்தானும், நீலா மாலாவும் வெளியான அதே காலகட்ட தூர்தர்ஷனில் கோகுலம் காலனி தொடரின் மூலம் தன் முதல் இன்னிங்சை ஆரம்பித்த இயக்குநர் திருமுருகன் இன்றும் அதே ஹேர் ஸ்டைல், ராமராஜன் கெட்டப்புடன் கல்யாண வீட்டிலும் நின்று விளையாடிக்கொண்டிருப்பது சாதனை என்பதையும் தாண்டிய, A visual media miracle !

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு