Published:Updated:

ஊருக்காக ஆடும் கலைஞன்..! - ரெட்டியாரூர் நாடக சபா நினைவுகள் #MyVikatan

தெருகூத்து
தெருகூத்து

மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காதவரிடம் அருவியாக வசனங்கள் கொட்டியது. அதிலும் குறிப்பாக அவர் பேசிய ஆங்கிலத்திற்க்கு அங்கே பந்தோபஸ்த்திற்க்கு வந்திருந்த காவல்துறை உயர் அதிகாரியிடமிருந்து வெகுவான பாராட்டுகளைப் பெற்றார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று சற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டார் பெருமாள், " எங்க இந்த வெங்கிடு பயல இன்னும் காங்கல, சைக்கிள எடுத்திட்டு வரேன்னு சொன்னான் இம்புட்டு நேரமாயும் காங்கலயேனு, " புலம்பியவாறே வெங்கிடுவின் வீட்டை நோக்கி நடந்தார்.

"ஏலே வெங்கிடு என்னத்த மாட்ட புடிச்சு நோண்டிட்டு இருக்கவன். வக்காளி நேரமாயிட்டு இருக்கு . எப்ப போயி சேர்ரது அங்க " என கடிந்து கொண்டார். "இல்ல மாமா மாட்டு மூக்குல காயம் ஆகிருச்சு போல ரெண்டு நாளா சரியா மேச்ச எடுக்கல அதான் பார்த்துட்டு இருந்தேன்,

தள்ளு இங்கிட்டு என பெருமாளை நகர்த்திவிட்டு மாட்டை பார்த்தார், எலே கிறுக்கா மாட்டு மூக்கானங்கயிற நூல் கயிறுல போட்றானு உனக்கு எத்தன தடவ சொல்றது. உம்பாட்டுக்கு நைலான் கயிறுல போட்ட மாட்டு மூக்குல காயமாகாம என்ன பண்ணுமாம், போயி கொஞ்சுண்டு வேப்பெண்ணெயும், மஞ்சளையும் கொண்டா" என கூறி அதைக் குழைத்து மாட்டின் மூக்கில் இதமாக தடவினார். இனி ஒண்ணும் பண்ணாது. நாளைக்கு இத இன்னொருவாட்டி தடவவி விடு, மொத வேலயா அந்த நைலான் கவுத்த அத்தெரிஞ்சுட்டு நூல்கவுத்த மாத்திவிடு என்றார். வெங்கிடுவும் சரி என்றுவிட்டு புறப்பட தயாரானார்கள்.

மாடு
மாடு

ஆடு, மாடு வளர்ப்பில் மிகவும் கைதேர்ந்தவர் பெருமாள். மாடுகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர் கொடுக்கும் பச்சிலை மருந்திலே சரியாகிவிடும்.

ஏய் மாமா என்னமோ சின்ன கொழந்தையாட்டம் இந்த பற பறக்குற நாடகம் (கூத்து) பாக்குறதுக்கு, அதுவும் பக்கத்துல இருக்கிற புதூர்க்கு போறதுக்கு என கூறிக்கொண்டே சைக்கிளை மிதித்தார் வெங்கிடு. போடா அங்கிட்டு புதூர் உனக்கு பக்கமா? 3 மையிலு தூரம் போவனும் அதுவும் ராத்திரில, அந்த பெரியகொளத்து கரைய கடக்கவே அந்தாந்தான்னு ஆகிப்புடும். ஒழுங்கா வழிய பாத்து சைக்கிள ஓட்டுறா என்று வெங்கிடுவிடம் கூறிவிட்டு தனது காதருகே வைத்திருந்த காஜா பீடியை பற்ற வைத்தார் பெருமாள். பெரியகுளத்தின் கரையானது சற்று பெரிய மேடாகவும் கரடுமுரடாகவே இருக்கும். ஆனால் அந்த பெளர்ணமி இரவில் பாதை தெளிவாக தெரிந்ததால் வெங்கிடுவிற்க்கு சைக்கிளை ஓட்டுவதற்கு இலகுவாகவே இருந்தது.

புதூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் அங்கு நாடகம் ஏற்பாடு செய்திருந்தார்கள். புதூரில் நாடகம் என்றாலே சுத்துப்பட்டு ஊர்காரர்களெல்லாம் மிகுந்த குஷியாகிவிடுவார்கள்.

ஏலே வெங்கிடு இன்னிக்கு என்ன நாடகம் தெரியுமா? என்று கேட்டார் பெருமாள். எனக்கென்ன தெரியும் நீதான் நாடகம்னாலே பைத்தியம்பிடிச்சு அலைவ என்றார் வெங்கிடு. அட இன்னிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்டா. அதுவும் ரெட்டியாரூர்க்காரங்க நாடகக் கோஷ்ட்டியாம்டோய் என்றார் பெருமாளு.

தெருக்கூத்து
தெருக்கூத்து

1980 களில் ரெட்டியாரூர் திருமுருகன் நாடக சபா மிகப்பெரிய அளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதுவும் அவர்களின் மிகவும் பிரசித்திபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்க்கு அமோக ஆதரவு கிட்டியது. அந்த அளவிற்கு அதன் தரத்தை உயர்த்த இயக்குனர் , வசனகர்த்தா என எல்லாவாகவும் திகழ்ந்த அய்யாதுரை அவர்கள் மிகுந்த மெனக்கெடலுடன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வடிவமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற நடிகர்களும் தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினர்.

வெங்கிடு கொஞ்சம் துருசா(வேகமாக) சைக்கிள மிதி. அங்க இன்னேரம் பப்பூன் & டான்ஸ் (கோமாளிகள்) வந்திருப்பாங்க என்றார் பெருமாள்.

அங்கே நாடகத்தை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடைபெற்றது. தபேலா, ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா போன்ற இசைக்கலைஞர்கள் அனைவரு‌ம் தங்களது வாத்தியக் கருவிகளை வாகாக்கிக் கொண்டிருந்தனர் . ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுகொண்டிருந்தது இவ்வாறாக.

அலோ.. அலோ..1 மைக் டெஸ்டிங் 1,2,3,..அலோ,, அலோ,மைக் டெஸ்டிங் 1,2,3. புதூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடக்க உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு விழா கமிட்டியார் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என முழங்கியது. இரவு நேரம் என்பதால் அந்த சத்தம் 1 மைலுக்கும் அப்பால் உள்ள இவர்களுக்கும் கேட்டது. பெருமாள் உடனே வெங்கிடு கொஞ்சம் சீக்கிரம் போட என அனத்தினார். இவர்களும் சரியாக 9:45 மணிக்கு நாடகமேடை அருகே வந்தனர். அங்கு பார்த்தால் திரளான மக்கள் கூட்டம்.

வெங்கிடு பார்த்தியா எவ்ளோ சனம் வந்திருக்குன்னு. போய் சைக்கிள ஒரு ஓரஞ்சாரம கொஞ்சம் சூதனாமான எடத்துல வச்சுட்டு வா, நான் போய் எடம் பிடிக்கிறேன் என்றார் பெருமாள். சரி மாமோய் என கூறிவிட்டு சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு பெருமாளின் அருகில் வந்தமர்ந்தார் வெங்கிடு. அரங்கத்தைச் சுற்றிலும் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு வந்தவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், காவல்துறையினர், கூட்டத்தின் நடுவே தேநீர் மற்றும் நொறுக்குத்தீனி விற்பவர்கள் என ஏராளமான மனித தலைகள் தென்பட்டது.

சரியாக 10 மணியளவில் வாத்தியக்காரர்கள் அனைவரும் தங்களது வாத்தியங்களை இசைக்கத்தொடங்கினர்.

திரைச்சீலை திறக்கப்பட்டவுடன் உள்ளேயிருந்து வெள்ளாட்டுக்குட்டி போல் "ஜல்லென்று குதித்து மேடைக்கு வந்தார் பப்பூன் (ஆண் கோமாளி) மற்றொரு பக்கத்திலிருந்து சுழற்றிவிட்ட பம்பரம் போல் வந்தார் டான்ஸ் (பெண் வேடமிட்ட ஆண் கோமாளி) இருவரும் இணைந்து தங்களது கட்டை குரலில் "வந்தனம் வந்தனம் வந்தசனமெல்லாம் குந்தனம் குந்தனமென்று "பாட்டு பாடி மக்களை வரவேற்றனர்.

Representational Image
Representational Image

கோமாளிகள் மேடையில் இருக்கும் நேரத்தில்தான் மற்ற கலைஞர்கள் தங்களின் ஆடை அலங்காரங்கள் மற்றும் ஒப்பனைகளை முடித்துக்கொள்வர். சரியாக 11 மணியளவில் சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டு வெளியே வந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வெளியே வந்து தனது பாசுரங்களை பாட தொடங்கினார்

" எட்டு திசையயும் 16 கோணலும்

வெற்றி ஜெயம் கொண்ட வீராணம்

கட்ட பொம்மன்,

கட்ட பொம்மன் பேரை சொன்னால் காகம் பறவாது

கருங்குருவி நகராது.

ஆண்டவளே குலதேவதையே ஆதரிப்பாய் ஜக்காதேவி. "

என்று பாடி முடித்தவுடன் மக்களிடையே கரகோசங்களும், கைத்தட்டல்களும், விசில் சத்தங்களும் விண்ணைப் பிளந்தன.

வீரபாண்டிய கட்டபொம்மானாக வேடமிட்டவர் நல்ல ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான உடலமைப்பு, முட்டைக்கண்கள், முரட்டுத்தனமான மீசை என பார்ப்பவரையே கிலி பிடிக்கும் அளவிற்கு தோற்றமுடையவர். அவரை பார்ப்பதற்காகவென்னவோ அவ்வளவு மக்கள் கூட்டம் .

பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்தை தன் பாசுரங்கள் வழியாக அறிமுகப்படுத்தினார்,

ஊமத்துரை - தம்பி ஊமதுரை பேர சொன்னால் உற்றத்தோர் கருகலங்கும். ஊர்குருவியும் பறவாது

பகதூர் வெள்ளையத்தேவன் - தளபதி பகதூர் வெள்ளையத்தேவன் பேர சொன்னா பட்சியும் பறவாது, பாஞ்சாலமும் நடுநடுங்கும்.

என்று அறிமுகப்படுத்தி. இறைவாழ்த்து பாடினார்

“ஒன்பது கம்பளமும் பதினெட்டு தொட்டியமும்

தொட்டிய குலம்காக்கும் துரைமகளே

ஜக்காதேவி காத்தருள்வாயே” எங்களை.

என்று பாடி முடித்தார். இவ்வாறாக கதை நகர்ந்து கொண்டிருக்க அடுத்ததாக தம்பி ஊமத்துரை வருகை.

"பாதம் பணிந்து என் அண்ணா

பாண்டிய நானும் ஊமத்துரை

வாருமே வாரும் என் தம்பி

வாகுடனே சந்தோஷம்

கோடி நமஷ்காரம் என் அண்ணா

கோமகன் நானே ஊமத்துரை"

என்று தன்னைஅறிமுகப்படுத்தினார். ஊமத்துரையும் நல்ல உடல்வாகும், கலையான முக அமைப்பையும் கொண்டவர்.

வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், ஊமத்துரையாகவும் வேடமிட்டுருப்பவர்கள் இருவருமே நிஜத்திலும் உடன் பிறந்தவர்கள். அதனாலே அவர்களிருவர் தோன்றும் காட்சிகளில் மெய்சிலிர்க்க வைப்பார்கள். அதுவும் அவர்களிருவரும் ஒப்பாரி சொல்லி அழும் காட்சியில் மக்களனைவரின் கண்களும் குளமாகிவிடும்.

தெருக்கூத்து கலைஞர்
தெருக்கூத்து கலைஞர்

அடுத்ததாக தனயன் சுந்தரலிங்கம் வருகை

" பாரகாவலை விட்டு பாண்டியநானும் சுந்தர லிங்கம் ஓடி வந்தேன்.

தந்தை அழைக்கிறார் என்று தனயன் நானும் ஓடி வந்தேன்.

சீக்கிரம் அழைக்கிறார் என்றும் செல்லக் குழந்தை ஒடி வந்தேன்."

என்று பாடி முடித்தார் சுந்தர லிங்கம்

கூத்து இவ்வாறாக நடந்துகொண்டிருக்க மக்களனைவரும் சற்றும் தொய்வடையாது மிகுந்த ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தனர். மேலும் பெருமாளும், வெங்கிடுவும் நாடகத்திலேயே மூழ்கித் திளைத்தனர்.

தூக்கம் கண்களை நெருங்காமல் அவ்வப்போது தேநீர் அருந்திக்கொண்டும் , நொறுக்குத்தீனிகளை சுவைத்துக் கொண்டும் நாடகத்தை ரசித்தனர்

ஜாக்சன்துரையாக வேடம்பூண்டவர் ,நல்ல உயர்ந்த மனிதர் ஒருவர் , தன்னை ஆங்கிலேயராக காட்டிகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் பவுடரை அப்பிக்கொண்டும், சுருள் முடியை தலையில் மாட்டிக்கொண்டும் வந்து நின்றார், ஒரு வாகாய் பார்த்தால் ஆங்கிலேயரைப் போலவே தோற்றமளித்தார்.

தனது ஆங்கிலம் கலந்த தமிழ் வசனங்களை பேச ஆரம்பித்தார்.

மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காதவரிடம் அருவியாக வசனங்கள் கொட்டியது. அதிலும் குறிப்பாக அவர் பேசிய ஆங்கிலத்திற்க்கு அங்கே பந்தோபஸ்த்திற்க்கு வந்திருந்த காவல்துறை உயர் அதிகாரியிடமிருந்து வெகுவான பாராட்டுகளைப் பெற்றார்.

ஜாக்சன்துரையிடம் கட்டபொம்மன் உரையாடும்

" யாரைக்கேட்கிறாய் வரி

எதற்குக்கேட்கிறாய் திரை

எங்களுடன் வயலுக்கு வந்தாயா?

நாற்று நட்டயா?

கழனி வாழ் உழவர்க்கு கஞ்சி கலயம் சுமந்தாயா?

அங்கே கொஞ்சி விளையாடும் என் குலப்பெண்களுக்கு

மஞ்சளரைத்து கொடுத்தாயா?

இல்லை நீ மாமனா? மச்சானா?

எட்டி உதைப்பதற்க்குள் ஒழுங்காய் ஓடி விடு "

என்ற வசனத்தை கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க, உதடுகள் துடிக்க கட்டபொம்மன் பேசியதைக் கேட்டு மக்களிடையே வரவேற்பு அனல் பறந்தது.ஒவ்வொரு காட்சியையும் பிரமாதமாக வடிவமைத்திருந்தார் கதாசிரியர் அய்யாதுரை.

தெருக்கூத்து நாடகம்
தெருக்கூத்து நாடகம்

இறுதியாக கட்டபொம்மன் தூக்கிலிடும் காட்சியில் மக்களனைவரும் கண்ணீர் கடலில் முழ்கினர். அப்படியொரு தத்ரூபமான நடிப்பு. நாடகம் முடியவும் காலை விடியலும் ஒரு சேர இருந்தது. கிட்டத்தட்ட 7 மணிநேரமென்றாலும் மக்களின் கூட்டம் சற்றும் குறையவில்லை. நாடகம் முழுதும் முடிந்த பின்னரே பெருமாளும், வெங்கிடுவும் அரைத்தூக்கத்துடன் தேநீர் கடைக்குச்சென்று தேநீர் அருந்திவிட்டு பயணத்தை தொடங்கினர். இருவரும் ஒருவழியாக அந்த பெரியகுளத்தின் கரையேறி வீட்டைச்சென்றடைந்தனர்.

அந்த நாடகக் கலைஞர்களும் தங்களது கூலியையும் பெற்றுக்கொண்டு புறப்பட தயாரானார்கள். மக்கள் மிகுந்து ரசித்து பார்த்த கட்டபொம்மன் வேடமிட்டிருந்தவருக்கு நாடகக்கூலியாக கிட்டிய பணம் ரூபாய் 100 மட்டுமே மேலும் ரசிகர்களிடமிருந்து 50 ரூபாய் வெகுமானம் கிடைத்தது. அந்த கலைஞர் அந்த 150 ஐ பலமுறை எண்ணியவாறு “ மொதல்ல செட்டியாருக்கு 70 ரூவா வட்டிய குடுத்துபுடனும் , வீட்டுல மளியச்சாமனுக்கு ஒரு 30 ரூவா,வெதநெல்லு வாங்க 50 ரூவா, பையன் வேற புஸ்தகம் கேட்டுட்டு இருந்தான் அதுக்கு ஒரு 10 ருவா வேணுமே என்று புலம்பிக்கொண்டே கையில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நகர்ந்தார் “ நாடகத்தில் நாட்டையே ஆண்ட ராஜா, நிஜத்தில் ஒரு நாளை கடத்துவதற்கு மிகவும் சிரமப்படடார்.

“ ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்"

ஆம் கவிஞர் கூறிய வரிகள் அனைத்தும் முற்றிலும் உண்மையே.


இவண்

ஜெயராமன் சந்தோஷ் பாலாஜி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு