Published:Updated:

வியாழக்கிழமை பூஜை ரகசியம்..! - ஒரு ப்ளாஷ்பேக்#MyVikatan

Representational Image
Representational Image ( pexels )

ஒரு பத்து வருடத்திற்கு முன்பு ஒரு ஆகஸ்ட் மாதத்தில் ஒருவாரம் விடுப்பு எடுத்து கொண்டு என் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்த ஊர் பேருந்து நிறுத்தத்தை பிள்ளையார் கோவில் ஸ்டாப் (Stop) என்று சொல்வார்கள். ஊரை ஊடறுத்து மத்தியில் செல்லும் சாலையின் இடது புறம் இருக்கும் பெரிய கல் மேடையின் நடுவே நூறு வருடம் கடந்த ஒரு வேப்பமரம் இருக்கும். வெயில் நேரத்தில் அந்த கல் மேடை முழுவதும் நிழல் பரப்பி கீழே அமர்ந்தால் மிக குளுமையாக இருக்கும்.

கோடையில் பலரும் இரவில் துண்டை விரித்து காற்றோட்டமாக உறங்கி காலை எழுந்து செல்வார்கள். நான் சிறுவனாயிருந்த காலகட்டத்தில் இரண்டு பேர் கை கோர்த்தால் மட்டுமே அந்த மரத்தை கட்டி பிடிக்க முடியும். அவ்வளவு பெரிய மரம் அது.

Representational Image
Representational Image

அந்த மேடையின் வலது புறத்தில் ஜம்மென்று எங்கள் ஊர் பிள்ளையார் ஒரு சிறிய கோவிலின் உள்ளே அமர்ந்திருப்பார். அது ஒரு சிறிய கோவில். சுமார் ஐந்துக்கு ஐந்து அளவில் ஒரு கனசதுரமாக பழைய கட்டிடம். மேலே அரை வட்டமாக ஒரு அமைப்பு. உச்சியில் ஒரு சிறிய உருண்டையான பந்து இருக்கும். சுற்றிலும் வெள்ளையடித்து (எப்போதாவது) இருப்பார்கள். உள்ளே விளக்கு புகையாலும் கற்பூர புகையாலும் புகைபடிந்து கருப்பாக இருக்கும். எப்பொழுதும் எண்ணெய் மினுமினுப்புடன் விளக்கு வெளிச்சத்தில் ஆஜானுபாகுவாக அவரை பார்க்கும்போதே ஒரு நம்பிக்கை ஏற்படும். இடுப்பில் ஒரு ஈரிழை துண்டு சிகப்பு கலரில் அணிந்திருப்பார்.

கோயில் வாசல் மிக குறுகலாக இருக்கும். குறுகல் என்றால் மூன்று அடிக்கு இரண்டடி அளவில். உள்ளே நுழைய வேண்டும் என்றால் எங்களுடைய சிறு வயதில் நன்றாக குனிந்து செல்ல வேண்டும். பிற்பாடு குத்துக்காலிட்டு அமர்ந்து உள்ளே சென்று நின்று கொள்வோம். ஒரு ஆள் சற்று வசதியாக நிற்க முடியும். உள்ளே ஒரு சிறிய மேடையில் சற்றே பெரிய உருவமாக எங்களுடைய பால்ய வயதில் நாங்கள் எங்களுடைய வேண்டுதலை அவர் காதுக்குள் நேரடியாக சொல்ல கூடிய உயரத்தில் இருப்பார். பல சமயம் அம்மாவின் வேண்டுதலுக்காகவோ அல்லது ஏதேனும் துன்பம் தீர வேண்டுமென்றாலோ வாரமிருமுறை அவருக்கு விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வருவோம். மக்கள் ஊரை விட்டு வெளியில் செல்கையிலும் ஊருக்கு திரும்பி வந்து பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும் முன்பும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வீற்றிருக்கும் அவரை பார்த்து ஒரு சிறிய கும்பிடு போடாமல் செல்பவர்கள் மிக சொற்பம்.

Representational Image
Representational Image

அந்த கல் மேடையில் தான் கிராமத்தின் பல திருவிழாக்கள் நடத்துவதற்காக ஊர் கூடி முடிவெடுப்பார்கள். பிரசிடெண்ட் பெரியப்பா அந்த காலத்திலேயே பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தவர். காலை உணவு முடித்து பலமுறை அந்த கல்மேடையில் வந்து அமர்ந்து ஊர் மக்களுடன் பேசி கொண்டிருப்பார்.

ஒரு பத்து வருடத்திற்கு முன்னாள் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் ஒருவாரம் விடுப்பு எடுத்து கொண்டு என் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. சாயங்காலம் எப்பொழுதும் எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் பூசை மணிச்சத்தம் கேட்கும். அன்று ஏனோ கேட்கவில்லை. என்னவென்று என் அம்மாவிடம் விசாரித்த போது

"கெண்டி சோசியர் போனவாரம் தவறிட்டாருப்பா...." என்று சொன்னார்கள்.

யார் அந்த கெண்டி சோசியர்? அவருக்கும் பிள்ளையார் கோவில் பூசைக்கும் என்ன சம்பந்தம்?

கெண்டி சோதிடரை ஊரில் அனைவரும் அய்யர் என்று சொல்வார்கள். அவர் பிராமணர் இல்லை. ஊரில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்தான். பிறகெப்படி அவருக்கு அந்த பெயர் வந்தது. அவர் அவருடைய சிறுவயதில் சிலோனிலிருந்த (அப்படித்தான் என் அம்மா கூறியதாக நினைவு) பொழுது எப்படியோ சில மந்திரங்களும் சோதிட வித்தையையும் யாரிடமோ கற்றுக் கொண்டிருக்கிறார். பின்பு அவர் தன்னுடைய சொந்த ஊரான எங்கள் கிராமத்திற்கு வந்த பொழுது விவசாயத்துடன் சோதிடத்தையும் திருமணம் மற்றும் பிற விசேஷங்களை நடத்தி வைக்கும் ஒரு ஆச்சாரியார் போலவும் இருக்கவே அவருக்கு அந்த பெயர் ஏற்பட்டது.

Representational Image
Representational Image

மேலும் எங்கள் ஊரில் அது போன்ற வைபவங்களை நடத்தி கொடுக்கும் பிராமணர்கள் இல்லாத காரணத்தாலும் அப்படியே அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து அவர்களை அழைத்து வருவதற்கான பொருளாதார மற்றும் போக்குவரத்துக்கு வசதி குறைவாலும் இவர் எங்கள் ஊர் மற்றும் அருகிலுள்ள ஊர்களுக்கும் குறைந்த சம்பாவனையில் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி கொடுக்கும் தவிர்க்க முடியாத ஒரு நபராக எங்கள் ஊரில் இருந்தார். அவருடைய வாழ்நாளில் அவர் இது போன்ற பல எண்ணிலடங்கா திருமணங்களை நடத்தியிருக்கிறார்.

பிரசிடெண்ட் பெரியப்பாவுக்கும் கெண்டி சோதிடருக்கும் இடையேயான நட்பு எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் நீண்ட கால நண்பர்கள். ஒரு நாள் இருவரும் சேர்ந்து முடிவு செய்து எதற்காகவோ ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் அந்த பிள்ளையாருக்கு மாலை வேளையில் பூசை செய்ய முடிவெடுத்தார்கள். ஊர் நன்மைக்கா அல்லது சுய காரணமா என்று தெரியவில்லை. வியாழக்கிழமை பூசை பல வருடங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் பிரசிடெண்ட் பெரியப்பா இறந்து விட்டார்.

Representational Image
Representational Image

கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரின் நட்பு பற்றி நாம் படித்திருக்கிறோம், பிசிராந்தையார் எவ்வளவு நாட்கள் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று தெரியவில்லை. ஆனால் கெண்டி சோதிடர் 90 நாட்கள் கழித்து இறந்து விட்டார். அதன் பின் வியாழக்கிழமை பிள்ளையார் கோவில் பூசையும் நின்று போனது.

அந்த பூசை ரகசியம் இதுவரை யாருக்கும் தெரியாது. பிரசிடெண்ட் பெரியப்பா, கெண்டி சோதிடர் மற்றும் இன்றும் எவ்வித கவலையுமின்றி அனைவருக்கும் ஆசி வழங்கும் அந்த வேப்ப மரத்தடி பிள்ளையார் தவிர.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு