Published:Updated:

எங்கள் அண்ணன்..! - வாசகி பகிரும் பாசமலர் பக்கங்கள் #MyVikatan

Representational Image
Representational Image ( Jude Beck / Unsplash )

அவனுக்கு மட்டும் ஏன் இப்பேர்பட்ட கவனிப்புகள் என்று நினைக்கவைக்கும் எங்கள் வீட்டு செல்ல பிள்ளையின் கதை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"ஊர்ல இருந்து நாளைக்கு செல்வா வரானாம்... ரெண்டு நாள்தான் இருப்பானாம். நம்ம வீட்ல ஒரு வேலை சாப்பிடச் சொல்லணும்.. அவனுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் அதே செஞ்சிடறேன்" என் அம்மாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

பத்து நாளுக்கு முன் சென்னை சென்ற என் பெரியம்மா மகன் சென்னையில் இருந்து வருவதற்குதான் இத்தனை அலப்பறை. அவன் ஊரில் உண்ணப் போகும் ஆறு வேலையும் ஆறு வீட்டில் ஆறு விதமான உணவுகள்!

அவனுக்கு மட்டும் ஏன் இப்பேர்பட்ட கவனிப்புகள் என்று நினைக்க வைக்கும் எங்கள் வீட்டுச் செல்ல பிள்ளையின் கதை.

அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லா உறவுகளும் நமக்கு கிட்டுவதில்லை. அந்தக் குறையைத் தீர்க்கத்தான் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள் அவதரிப்பதாய் தோன்றுகிறது.

என்னுடன் பிறந்தவள் தங்கை மட்டும்தான் என்றாலும் எனக்கு எல்லா உறவுகளும் இவர்களால் கிட்டியது.

Representational Image
Representational Image
Kelly Sikkema / Unsplash

ஓ இதுவும் பாச மலர் கதையா என்றால்! எத்தனை பாச மலர் கதைகள் வந்தாலும் இன்னும் இன்னும் சிலாகிக்க ஏதாவது எஞ்சி இருக்கத்தான் செய்கிறது.

எனக்கும் செல்வாவிற்கும் ஆறு மாத இடைவெளிதான். அவனை அண்ணன் என்பதைவிட எனக்கு அவன் தோழன். சிறு வயதில் இருந்தே நானும் அவனும் செய்த சேட்டைகள் ஏராளம். மண், புழுதி, புல் என எதிலும் வெயில் மழை எனப் பாராமல் விளையாடி தீர்த்துள்ளோம்.

வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்து எனக்கு அவனும் அவனுக்கு நானும் ஓட்டச் சொல்லிக் கொடுத்து கற்றோம். பாண்டி விளையாட்டில் கோட்டை மிதித்தாலும் எப்படியோ ஏமாற்றி வென்றுவிடுவான். காலண்டர் அட்டையில் கிரிக்கெட் கற்றுக் கொடுத்தான்.

கேரம் போர்டு வேண்டும் என அடம்பிடித்து வாங்கியதை பவுடர் போட்டு இன்னும் பத்திரமாக வைத்துள்ளான்.

பிசினஸ், செஸ், கார்ட்ஸ்யையும் விட்டு வைத்ததில்லை.

தாயம் விளையாடும்பொழுது அவனுக்கு ஏதுவாய் விழ வேண்டும் இல்லையெனில், தங்கைகளாகிய எங்களுக்கு தலையிலே கொட்டுவிழும்.

எங்களோடு வளர்ந்துகொண்டு இருந்தாலும், எத்தனை சேட்டைகள் செய்தாலும் எங்களை விட பாசக்காரனாகவும் பொறுப்புள்ளவனாகவும் ஆனான் அவன்.

செல்வா அம்மாவிற்கு அசைவம் சமைக்க தெரியாது. எனினும் சித்தி, அத்தை, பெரியம்மா, அக்கா என யார் வீட்டில் அசைவம் சமைத்தாலும் அவன் இல்லாமல் அவர்களுக்கு உணவு இறங்காது.

Representational Image
Representational Image
Pixabay

அவன் இருக்கும் இடம் கலகல வென இருக்க வேண்டும். எத்தனையோ குடும்ப சண்டைகளைச் சரி செய்திருக்கிறான். யாரையும் பிரிய விடாமல் இழுத்துப் பிடித்து தாங்கிக்கொள்வான்.

படிப்பு முடித்து வேலை கிடைத்துச் சென்னைக்குச் சென்றான். வழி அனுப்பி வைக்க குடும்பமே திரண்டது. அனைவரின் கண்ணிலும் கண்ணீர் தேங்கி நிற்க, மனம் இல்லாமல் அவன் புறப்படுவான். சரி முதல் முறைதான் என்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் அப்படித்தான் அழுகிறார்கள் என்பதுதான் எனக்கு விளக்கம் தெரிந்த ஆச்சர்யம்.

எப்படியும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வந்துவிடுவான். அவன் இல்லாமல் தீபாவளி, பொங்கல், திருவிழாக்கள் கிடையாது.

"பையன் எங்க... இன்னும் வரலையா" என்று துடித்துவிடுவார்கள்.

அவன் ஊரில் இருக்கும் அத்தனை நாள்களும் எங்களுக்கு பண்டிகைதான்.

அவனைச் சார்ந்த அனைவருக்கும் நிச்சயம் ஏதாவது நெகிழ்ச்சி தருணம் அவனால் ஏற்பட்டிருக்கும்.

ஒருமுறை எனது அலைபேசியைக் காணவில்லை என்று நடுத்தெருவில் நின்று கதற ஆர்மபித்துவிட்டேன். சில நிமிட வருத்தம் என்றாலும், நமக்கு இஷ்டமான ஒன்று தொலையும் பொழுது அனுபவக்கும் வேதனை மிக கசப்பானது.

தொலைந்ததற்காக என்னைத் திட்ட வேண்டாம் என்று என் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டிருந்தது கண்ணீரின் ஊடே கண்கள் கண்டது.

Representational Image
Representational Image
Pixabay

சில நிமிடங்களுக்கு பின் பெரியம்மா என்னிடம் வந்தார்.

"இன்னுமா நீ அழற... திங்கள்கிழமை சாயங்காலம் உனக்கு புது போன் கைல இருக்கும்... அழாதடி" என்றார்.

ஆம். செல்வாதான் புது போன் ஆர்டர் செய்திருந்தான். அதற்காக ஆறு மாதம் அவன் தன் செலவைக் குறைத்துக்கொண்டு இ.எம்.ஐ கட்ட வேண்டும். அதெற்கெல்லாம் அவன் வருந்தவில்லை. அந்த நொடி என் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும். என் மனம் நோகக் கூடாது. அவ்வளவே அவனுக்கு வேண்டும்.

எனக்கு மட்டும் இல்லை எந்தத் தங்கைகளும் எந்த உறவுகளும் கலங்கக் கூடாது.

இரண்டு மாதங்களாகக் குடும்பத்தில் யார்க்கும் பெரிதாக வருவாய் இல்லை. நாங்கள் பாட்டி வீட்டில் இருந்த சமயத்தில் தன் சம்பளம் முழுவதையும் பிரித்து அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிட்டான்.

அவன் அப்பாவிற்கும் வேலை போய்விட்டது. அவனுக்கும் அடுத்த மாதம் சம்பளம் போடுவார்களா என்பது தெரியாது. ஆனால், தனக்கு என்று இதுவரை எதையும் சேமித்து வைக்கவில்லை. எப்பேர்பட்ட பேரிடர்கள் வந்தாலும் எங்களை நிலை குலைய விடமால் தாங்கிக்கொண்டு நிற்கிறான் எங்கள் வீட்டு செல்ல பிள்ளை.

ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்வேன், அக்கா, தங்கைகளுடன் வளரும் ஆண் மகன் எந்தச் சூழ்நிலையிலும் உறவுகளுக்கும் பாசத்துக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பான். அதற்கு என் அண்ணன் சான்று!

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு