
மண் தரை வீடு, சாணி போட்டு மெழுகி இ௫க்கும். ஒரே நேரத்தில் 10 பேர் அமர்ந்து சாப்பிடுவோம்.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
இன்று காலை ஆப்பச் சட்டியில் மாவை ஊற்றி என் துணைவி சுழற்றிய சுழற்று என்னைத் தூக்கிக்கொண்டு போய் 25 வருடங்கள் முன்னால் விட்டது. தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜைக்குப் பிறகு எங்கள் வீட்டில் திட்டமிட்டு, மிகுந்த பொருள்செலவில் நடந்த விசேஷம் ஆப்பம் சுட்ட நாளாகத்தான் இருக்கும். மிகப் பெரிதும் மிகச் சிறிதும் அல்லாமல் மீடியம் சைஸ் குடும்பம் எங்களுடையது (அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வரும்).

செக்கையே சுற்றிவரும் மாடு போல, பாட்டியையே மையமாகச் சுற்றி வந்த குடும்பம் இது. (பாட்டியை அவ்வா என அழைப்போம்)! அனைவரும் ஒன்று கூடி 30 நாள்கள் திருவிழாவாகக் கோடை விடுமுறைகளை இனிமையோடு அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அனைவரும் கூடி ஒருவாரம் ஆன பிறகு, அறிவிப்பு வரும் அவ்வாவிடமிருந்து... பொதுவாகத் திங்கள், செவ்வாயில் அறிவித்துவிடுவார் - இந்த வெள்ளி ஆப்பம் என்று! எப்போது மாவு அரைப்பார், புளிப்பு கூட்டுவார், ஆப்பசோடா போடுவாரா இல்லையா என்றுகூடத் தெரியாது. ஆனால், வெள்ளி காலை சில்வர் தட்டில் தேங்காய் பாலில் ஆப்பம் மிதக்கும்! அதைப் பார்த்த எனக்கு, இன்று கடை மாவு வாங்கி பரபரப்பு தோசை சுடுவதைப் பார்ப்பதே வேடிக்கை... லாட்ஸ் ஆஃப் ஸ்ட்ரெஸ் அண்டு சேலஞ்சஸ்.
மண் தரை வீடு, சாணி போட்டு மெழுகி இருக்கும். ஒரே நேரத்தில் 10 பேர் அமர்ந்து சாப்பிடுவோம். தாத்தா, அப்பா, சித்தப்பாக்கள், மாமா, தம்பி, மச்சான் அனைவரும். பல நேரம் பக்கத்து மற்றும் எதிர் வீட்டு தம்பிகளும். விறகு அடுப்புதான்; ஆனால், ஒருவர்கூட ஆப்பத்துக்கு காத்திருந்த நினைவில்லை. அவ்வா சுட்ட ஆப்பம், குளத்தில் பூத்த தாமரை போல் இருக்கும். வெள்ளைத்தாமரை! தேவதைகள் கொண்டு வடும் பரிசுப்பொருள்கள் போல, அம்மாவும் சித்திகளும் ஆப்பம் எடுத்து வருவதும் உள்ளே போவதுமாயிருப்பார்கள்...

ஆப்பத்தில் இருந்து வரும் ஆவி போல சந்தோஷப் பேச்சுகளும், ஒருவர் மணம் புண்படாத கேலிகளும் நிறைந்தருந்த உலகம் அது! முதல் ஆப்பம் அப்பெடைசர் போல கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இரண்டாவது ஆப்பத்தில் மயக்கம் வரும், மூன்றாவதில் தெளிந்துவிடும். மூன்றோடு தேங்காய்ப்பால் போதும் என நினைக்கும்போது மிச்சமிருக்கும் பாலில் பாதி ஆப்பம் சாப்பிடலாம் என ஆரம்பித்து இரண்டு வரை காணாமல் போன கதைகள் நிறைய உண்டு. என் அப்பா சானிட்டைசர் போட்ட கையால் சாப்பிடுவதுபோல் ஆப்பத்தை பாலில் தொட்டுக் கொள்வார்.
ஆப்பத்தையும் ஸ்ட்ரிக்டாக டீல் செய்த ஜீவன் அவர். நானோ போர் வாட்டர் மோட்டாரில் நனைந்த கோழிபோல ஆப்பத்தை ஊறவைத்து அடிப்பேன். தம்பியோ ஆப்பத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டைச் சாப்பிடும்போதும் மறுபடி பால் எடுக்க வேண்டுமோ என சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டே இருப்பான். ஆனால், எந்த ஒரு முறையும் பாதியில் தேங்காய்ப் பால் தீர்ந்து போனதாய் ஞாபகமே இல்லை. நினைவடுக்கை ஆழக்கீறினால் குழல் ஊதும் கண்ணகியாய், புகை மண்டலத்தின் ஊடே ஆப்பம் சுட்டுக்கொண்டிருக்கும் என் அவ்வாவே தெரிகிறார்..!

தேங்காய்ப்பாலுடன் எழ விடமாட்டார், கடைசி ஆப்பம் சிவப்பு சட்னியோ, மிளகாய்ப் பொடியோ வைத்துச் சாப்பிட வேண்டும். பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் போடும் பீடா போல்... நல்லெண்ணெய் ஒழுக, பாலோடு வழித்து எடுத்து சாப்பிட்ட கடைசிவாய் ஆப்பம் இன்னும் நாவடுக்கின் ஈரங்களில் பத்திரமாய் ருசித்திருக்கிறது... வாயில் வழிந்து தீர்ந்த எண்ணெய்போல, கூடியே வாழ்ந்து தீர்த்த வாழ்க்கையைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் கடந்த 10 கோடைகளாக!
- செந்தில்குமார்.எஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.