Published:Updated:

மறக்க முடியுமா அந்த குரங்காரஸ் தியோரத்தை? 8-ம் வகுப்பு நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Church of the King / Unsplash )

ஒருவன் டேபிளில் தாளம் போட, இன்னொருவன் பாட ஆரம்பித்தான். ஒருவன் பிளாஸ்டிக் பையில் காத்தை ரொப்பி, அதை ‘டுமீல்’ என்று உடைத்தான்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துவந்தேன். வகுப்பின் வானர கோஷ்டியின் முக்கியமான அங்கத்தினராகவும் விளங்கினேன்.

ஒருநாள் இப்படித்தான் கணக்கு வாத்தியார், ‘பித்தோகரஸ் தியரம்’ நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் – அவன் நிஜப்பெயர் முருகன், மணி அடிக்கும் வேலைபார்ப்பதால் காரணப்பெயராக மணிகண்டன் வந்து,

“பிரின்ஸிபல், வாத்தியாரை அழைத்துவரச் சொன்னார்” என்று தெரிவித்தான்.

Representational Image
Representational Image

வகுப்பை விட்டுவிட்டு எப்படிப் போவது என்று யோசித்தார் வாத்தியார்.

“அவசரமாகக் கூப்பிட்டு வரச்சொன்னார்” என்றான் மணிகண்டன். கிளாஸ் மானிட்டர் கோபியிடம் டிஸிப்ளின் மெயின்டெய்ன் பண்ணச் சொல்லிவிட்டு, மணிகண்டனுடன் சென்றார் கணக்கு வாத்தியார் சண்முகம். ஆனால், மானிட்டர் பேச்சை யார் கேட்பார்கள்... ஒரே அமர்க்களம்தான்.

ஒருவன் டேபிளில் தாளம் போட, இன்னொருவன் பாட ஆரம்பித்தான். ஒரு மகானுபாவன் ப்ளாஸ்டிக் பையில் காத்தை ரொப்பி, அதை ‘டுமீல்’ என்று உடைத்தான்.

மற்றொரு மாணவன், சால்க் பீஸையெல்லாம் பொடியாக்கி மற்றவர்கள் தலைகளில் தூவுகிற கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தான். இந்த மாதிரி நிலையில்தான், வைஸ்-பிரின்ஸிபல் ரவுண்ட்ஸில் வந்து எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் தலையிலும் சால்க் பொடி விழுந்தது.

“டேய்! வைஸ்-ப்ரின்ஸிபல்டா...”

மானிட்டர் கோபி கத்தினான். அவ்வளவுதான், கிளாஸில் கப்சிப் நிசப்தம்.

“என்ன நடக்குது இங்கே... டீச்சர் எங்கே?”

வைஸ் பிரின்ஸிபல் கேட்டார்.

மானிட்டர் கோபி உடனே எழுந்து, “டீச்சரை ப்ரின்ஸிபல் கூப்பிட்டு இருக்கார். நான்தான் க்ளாஸ் மானிட்டர். ஆனால், யாரும் என் பேச்சை கேட்கலை. குரங்கு மாதிரியே பண்ணறாங்க சார்!” என்றான்.

Representational Image
Representational Image
Unsplash

“என்ன, குரங்கு மாதிரியா... நான் ஒரு குரங்குக் கதை சொல்றேன் கேட்குறீங்களா?” என்றார் வைஸ் பிரின்ஸிபல்.

எங்களுக்கு அவர்மீது எப்போதுமே பயம் கலந்த மரியாதை உண்டு. அவர் ஒரு சம்ஸ்கிருத மேதை வேறு. கதையோடுவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு, அனைவரும் “கேட்கிறோம் சார் “ என்று உற்சாகத்துடன் கூவினர்.

உடனே அவர், “குரங்கால் எப்போதும் ஒரு இடத்தில் அமைதியாக இருக்கவே முடியாது. அங்கேயும் இங்கேயும் தாவிக்கொண்டும், கையில் கிடைத்ததை பிய்த்துப் போட்டுக்கொண்டும் இருக்கும். ஒரு குரங்கு எப்படியோ கள்ளுக்கடையில் நுழைந்து கள்ளைக் குடித்துவிட்டது. அங்கே இருந்த ஒரு தேள் குரங்கைக் கொட்டிவிட்டது. அந்தக் குரங்கு, எப்படி குதித்துத் தாவி ஆரவாரம் செய்யும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். சம்ஸ்கிருதத்தில் குரங்குக்கு என்ன சொல்வார்கள்?”

Representational Image
Representational Image

அவர் கேட்பதே அதட்டும் தொனியில்தான் இருந்தது. எல்லோரும் திருதிருவென்று விழித்தார்கள்.

“மர்கடம் என்றால் குரங்கு. ஸுரா என்றால் கள். வ்ருஷ்சீகம் என்றால் தேள். இப்போது இந்த ஸ்லோகத்தை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள்..

‘மர்கடஸ்ய ஸுரா பானம், மத்யே வ்ருஷ்சீக தம்ஷணம், தன் மத்யே பூத ஸந்சாரோ, யத்வா தத்வா பவிஷ்யதி’

``ஏதாவது புரிகிறதா?” என்றார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

முதல் வரிசை மாதவன் மட்டும் புரிந்த மாதிரி தலையை ஆட்டினான்.

“எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றார் வைஸ் பிரின்ஸிபல்.

“சார்! ஒரு குரங்கு கள் குடிக்கும்போது அதை தேள் கொட்டி, ஒரு பூதமும் பிடித்து ஆட்டியது. அந்த நிலைதான் எங்களுக்கும்” என்றான் மாதவன்.

“பரவாயில்லையே! கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்” என்றார் வி.பி.

எல்லோரும் கை தட்டினார்கள்.

Representational Image
Representational Image

“இப்போது இந்த ஸ்லோகத்தை நாலு பாகமாகப் பிரிக்கலாம்:

1. மர்கடஸ்ய ஸுரா பானம் 2. மத்யே வ்ருஷ்சீக தம்ஷணம் 3. தன் மத்யே பூத ஸந்சாரோ 4. யத்வா தத்வா பவிஷ்யதி.

இப்போது நான் ‘ஒன்’ என்று சொன்னால், அந்த பாகத்தை உரக்கச் சொல்லணும். அதே மாதிரி 2, 3, 4 ஏன்றால், அந்தந்த பாகத்தை உரக்கச் சொல்லணும். சரியா?”

“சரி சார்!” எல்லோரும் ஒன்றாகக் கூவினர்.

வி. பி. 1, 2, 3, 4 சொல்லச் சொல்ல எல்லோரும் அந்த ஸ்லோகத்தை ஒன்றாக உரக்கச் சொன்னோம்.

குரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

“இப்போது, எனக்குப் பதிலாக மானிட்டர் கோபி 1, 2, 3, 4 சொல்வான்.”

என்று கோபியை நிறுத்திவைத்துவிட்டு வி. பி அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்.

கோபி 1, 2, 3, 4 சொல்லச் சொல்ல, க்ளாஸ் முழுக்க ஸ்லோகம் எதிரொலித்தது. திரும்பி வந்த கணக்கு வாத்தியார் சண்முகம் இதைப்பார்த்து அதிர்ந்தார்.

வி. பி அவரிடம் கேட்டார், “என்ன பாடம் நடத்திக்கொண்டி ருந்தீர்கள்... இன்னும் எவ்வளவு டைம் மீதி இருக்கு?”

கணக்கு வாத்தியார் உடனே, “பித்தோகரஸ் தியோரம் நடத்திக்கொண்டு இருந்தேன். பிரின்ஸிபல் சார் கூப்பிட்டார், அதான். பரவாயில்லை இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன” என்றார்.

“நான் மாணவர்களுக்கு ‘குரங்காரஸ் தியோரம்’ சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஐந்து நிமிடங்கள் இதையே எல்லோரும் சொல்லட்டும் “ என்றார் வி. பி.

கணக்கு வாத்தியார் தலையை ஆட்டினார்.

Representational Image
Representational Image

ஐந்து நிமிடங்கள் கோபி 1, 2, 3, 4 சொல்லச் சொல்ல, அந்த ஸ்லோகத்தை எல்லோரும் ஒன்றாக உரக்க கூறிக்கொண்டே இருந்தோம்.

பித்தோகரஸ் தியோரம் ஞாபகம் இருக்கோ என்னவோ, இந்த குரங்காரஸ் தியோரம் வாழ்நாளில் எங்கள் யாருக்கும் மறக்கவே மறக்காது. பல வருடங்களுக்குப் பிறகு, இன்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது, இந்த குரங்காரஸ் தியோரத்தை-ஸாரி, ஸ்லோகத்தைக் கண்டேன்.

இந்த ஸ்லோகம், ‘யோக வாஸிஷ்டம்’ என்கிற நூலில், வசிஷ்டர் ராமனுக்கு மனநிலை மற்றும் தியானத்தைப் பற்றி விளக்கும்போது உபதேசித்ததாகத் தெரியவந்தது. அந்த வி. பி-க்கு மனதார நன்றி தெரிவித்து வணங்கினேன்.

-சீனிவாசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு