Published:Updated:

`இயற்கை தந்த லாக்டெளன் அது!’ - ஜவ்வாது மலைவாசியின் மழை நாள் அனுபவம் #MyVikatan

Jawadhu hills
Jawadhu hills

நான் சொல்லப்போவது இயற்கையாக நடந்த லாக்டௌன் பற்றித்தான். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஜவ்வாது மலையில் நாங்கள் வாழ்ந்த மழை நாள்கள் அவை.

இன்றைய லாக்டௌன் நாள்களை நாம் எப்படிக் கழிக்கிறோம்?

நம்மிடம் ஸ்மார்ட் போன்களும் தொலைக்காட்சிகளும் இணைய வசதிகளும் இருக்கின்றன. நாம் அனைவரும் வீட்டுக்குள்ளே அமர்ந்திருந்தாலும் 24 மணிநேரமும் உலகோடு தொடர்பில் இருக்கிறோம். சமூக வலைதளங்கள் மூலமாகப் பேசிக்கொண்டோ, திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டோ, நாம் விரும்பும் இசையைக் கேட்டுக்கொண்டோ இருக்கிறோம்.

நான் சொல்லப்போவது இயற்கையாக நடந்த லாக்டௌன் பற்றித்தான்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஜவ்வாது மலையில் நாங்கள் வாழ்ந்த மழை நாள்கள் அவை.

Representational Image
Representational Image
向前 岳 on Unsplash

மழைக்காலங்களை நீங்கள் மலைப்பகுதிகளில்தான் பார்க்க வேண்டும். காடும் மலையும் மரமும் இலையும் சிறு கல்லும் மண்ணும் முழுமையாய் மழையில் நனைந்து எங்கும் நீர் நிறைந்து இருக்கும். எங்கள் மலையில் மழைக்காலம் 10 முதல் 20 நாள்கள் தொடரும் அடைமழை நாள்கள் அவை. புயல் வந்துவிட்டால் எங்களுக்குத் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று வாரங்கள் மழை பெய்யும்.

மழை என்றால் 24 மணிநேரமும் ஒரு சிறு இடைவெளியும் இன்றி பெய்யும். வானிலிருந்து இறங்கும் நீர்த்தாரைகள் பெரிய சுவர்கள் போல் சூழ்ந்திருக்கும். பத்தடி தொலைவில் இருப்பதுகூட என்னவென்று தெரியாது. காற்றில் மரங்களும் கிளைகளும் விழுந்து பாதையே தெரியாமல் போயிருக்கும். மழைநீரில் புதிய புதிய வாய்க்கால்கள் தோன்றி மேட்டுப்பகுதிகளிலிருந்து பள்ளங்களுக்கும் புதர்களுக்கும் தண்ணீர் அடித்துச் செல்லும் ஓசை நிறைந்திருக்கும். திடீரென ஊரே உடைந்துவிட்டது போன்ற சப்தத்துடன் இடிஇடிக்கும். அதன்பிறகு மழை நீர், அருவி போன்று கொட்டும். அப்படியான மழைக் காலங்கள் இன்று ஜவ்வாது மலையில் இல்லை எனலாம்.

Representational Image
Representational Image
Will Swann on Unsplash

அப்போதெல்லாம் எங்கள் மலைக்கு ஆலங்காயத்திலிருந்துதான் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும். மின்பகிர்மான நிலையங்கள் மலையில் இல்லை. எனவே லேசாக இடி இடித்தாலே கரன்ட் போய்விடும். அதுவும் இப்படி தொடர் மழைக்காலத்தில் காட்டில் எங்காவது மரம் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். அதைச் சரி செய்வதற்கு பல நாள்கள் ஆகும். அவையெல்லாம்தான் எங்களுக்கு லாக்டௌன் நாள்கள். உலகத்தோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத நாள்கள்.

தொலைபேசி தொடர்பு என்பது அப்போது மலை போன்ற இடங்களை அடையவேயில்லை. மின்சாரம் இல்லை. பஸ் வரும் வழியில் மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டால் சில நாள்கள் பேருந்துகள்கூட வராது. எனவே, செய்தித்தாள்கள் இருக்காது.

பேட்டரியில் இயங்கும் சிறிய டிரான்சிஸ்டர்கள் மட்டுமே அப்போது எங்களுக்கு வெளி உலகோடு தொடர்புக்கு. கொட்டும் மழையில் அவையும் சரியாகக் கேட்காது. மழை சத்தத்தோடு சேர்ந்து கரகரவென்று வரும் செய்திகளில் புயல் இன்னும் எத்தனை நாளுக்கு என்பதை மட்டும் கேட்டுக்கொள்வோம் அவ்வளவுதான். அதுவும் இடி இடித்து அதிக மழை பெய்தால் ரேடியோ ஸ்டேஷன் எடுக்காது. எனவே, அது எப்படிப்பட்ட லாக்டௌன் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்.

Representational Image
Representational Image
Rachel C on Unsplash

அந்த அடை மழைக்காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவது மிகவும் கடினம். காய்கறிகள், பால் என்று எதுவுமே கிடைக்காது. அம்மா எங்களுக்கெல்லாம் கடுங்காப்பிதான் போட்டுக் கொடுப்பார். இட்லி மாவெல்லாம் அரைக்க முடியாது. எனவே, அரிசி உப்புமா, புளி சோறு, பயத்தங்கஞ்சி என்றெல்லாம் சாப்பிடுவோம்.

ஜவ்வாதுமலையில் அப்போது இன்னும் காடுகள் அடர்ந்திருந்தன. எங்கள் ஆசிரியர் குடியிருப்பு அங்கிருந்த பெரிய ஏரிக்கரைக்கு 50 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. இதுபோன்ற அடர் மழை நாள்களில் வீட்டின் பின்வழியாகத் தவளைகள், ஆமைகள் ஏன் சில சமயம் பாம்புகள்கூட எங்களை நலம் விசாரிக்க வரும். அது தவிர ஏராளமான பூச்சிகள் புழுக்கள் மரவட்டைகள் எல்லாம் நிறைந்து கிடக்கும். அந்த மழை இரவுகளில் மின்சாரமின்றி ஹரிக்கேன் லைட்டுகளை ஏற்றி வைத்துக்கொண்டு நாங்கள் எல்லாரும் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம்.

Representational Image
Representational Image
Pixabay

இரவும் பகலும் மாறிமாறி மழை பெய்யும் நாள்களில் வீடுகளில் பொழுதுபோக என்ன செய்வது? பகல் முழுவதும் தாயக்கட்டம் ராஜா ராணி சீட்டாட்டம், சினிமா பெயர் கண்டுபிடிப்பது என்று விளையாடுவோம்.

மாலை இரவு எல்லாம் கதை சொல்லும் நேரம். அப்போது எனக்கு 8 அல்லது 9 வயதுதான்.

என் சிறிய தம்பி, தங்கை, குட்டி, குட்டிமா அப்புறம் அக்கம்பக்கத்து சிறு பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து கதை பேசுவோம். அப்போதே நான் சிறந்த கதைசொல்லிதான். மற்றவர்களெல்லாம் அவர்கள் கேட்ட கதைகளைச் சொல்வார்கள். நான் மட்டும் எல்லா கதையிலும் என் சொந்தச் சரக்கை கொஞ்சம் சேர்த்துச் சொல்வேன். என் கதைகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Representational Image
Representational Image
Rachel C on Unsplash

அப்படி நான் சொல்லிய ஒரு கதைதான் ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்தால் 90 முட்டை இது ஒரு விடுகதை. அதற்கு விடை தென்னைமரம். அதை வைத்து நான் ஒரு கதையாகவே டெவலப் செய்து சொல்வேன். ஒரு குழி தோண்டி அதில் ஒரு பொருளைப் போட்டால் நமக்கு தேவையான இனிப்புகள், பழங்கள் பலகாரங்கள், பொம்மைகள் எல்லாம் காய்க்கும் என்பேன்.

அந்த நாள்களில் நான் கூறிய கதைகளில் சிங்கங்களும் யானைகளும் எருமைகளும் மயில்களும் மைனாக்களும் குருவிகளும் எறும்புகளும் பூச்சிகளும் புழுக்களும் வலம்வரும். அத்துடன் ரத்தக்காட்டேரிகளும் பிசாசுகளும் நீலக் கண்களும் நீண்ட வாலும் இறகுகளும் கொண்ட பாம்புகளும், கூர்மையான மூக்கும் கொம்புகளும் கொண்ட காக்காமூக்கு மனிதர்களும் பனிபடர்ந்த மலைகளிலும் பாலை நிலங்களிலும் சுழன்று ஓடும் நதிகளிலும் சுற்றிப்பறக்கும் புஷ்பக விமானங்களும் ரத்தினக் கம்பளங்களும் இடம்பெறும்.

Representational Image
Representational Image
Ankhesenamun on Unsplash

இரவுகளில் போர்வையை இழுத்துக் போர்த்திக்கொண்டு வெளியில் பெய்யும் மழை ஓசை, மழையில் நனைந்த பறவைகளின் சிறகடிப்புகள், காற்றின் ஓலம், காடுகளில் கேட்கும் அமானுஷ்ய சப்தங்கள், பூச்சிகளின் ரீங்கரிப்புகள் என்றெல்லாம் கேட்டவாறு படுத்திருந்த அக்காலம் என் வாழ்வில் மறக்கவே இயலாத இனியது.

பெரியவர்களுக்கு வேண்டுமானால் அவை பல சங்கடங்களைத் தந்திருக்கலாம். எனக்கெல்லாம் அவை குதூகலமான நாள்களே!

- மோனிகா மாறன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு