Published:Updated:

`ஆரோக்கியமான சமூகம் எங்கே?' - மூன்று தலைமுறைகளைக் கடந்த பெண்ணின் Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, கல்வியைப் பொறுத்தவரை செலவு நூற்றுக்கணக்கில்தான். அதுவும் கல்லூரி சென்ற பின்புதான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான காலத்துக்கு இடையே என்ன செய்தோம், எப்படி எல்லாம் பிறருக்கு உதவிகள் செய்து வாழ்ந்தோம் என்பதில்தான் இருக்கிறது, நம் வாழ்க்கைக்கான முழுமையான அர்த்தம்.

representational image
representational image

அந்த வகையில், கடந்த மூன்று தலைமுறைகளைக் கண்டதுடன் வாழ்வின் பல்வேறு இடர்களையும் சோதனைகளையும் வென்று இன்பத்தை ரசித்து தற்போது லாக்டௌன் காலத்து அனுபவத்தையும் தன்னுள் சேமித்துக்கொண்டிருக்கும் வாசகியின் அனுபவ பகிர்வு இது.

இளமைக் காலம் முதல் இப்போதைய காலம் வரை தன் வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை அசைபோட்டபடியே என் நினைவுகளைப் பகிர்கிறேன். ``என்னுடன் பிறந்த எட்டு சகோதர சகோதரிகளுடன் கவலைகளோ எதிர்பார்ப்புகளோ ஏக்கங்களோ இல்லாமல் குழந்தையாக உற்சாகமாகச் சுற்றித் திரிந்த வசந்த காலத்தை அசைபோட்டுப் பார்க்கிறேன்.

துள்ளித் திரியும் குழந்தைகள்
துள்ளித் திரியும் குழந்தைகள்

விடுமுறைக் காலமென்றால் உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதும் அவர்கள் நம் இல்லத்துக்கு வருவதும் ரொம்பவே மகிழ்ச்சியான தருணங்கள். விடுமுறைக் காலத்து வீடுகள், குழந்தைகளில் குரல்களால் நிறைந்திருக்கும்.

நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களோ, ரொம்பவே முன்னேறியவர்களோ கிடையாது. நடுத்தர வர்க்கம். ஆனால், ஆரோக்கியத்தில் மட்டும் நாங்கள் செல்வந்தர்கள். எங்களுக்கு, குழந்தைகள் முதல் முதியவர் வரை யாருக்கும் மருத்துவச் செலவு என்பது மருந்துக்குக்கூட கிடையாது என்று நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

`லாக்டெளன் என் குழந்தைப் பருவத்தில் வந்திருந்தால்..!’ - வேதனைப்பட்ட `ஃப்ளிப்கார்ட்' சச்சின் பன்சால்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பயிர் தோட்டத்தில் விளைவதுண்டு. அதுவே எங்களுக்கு உணவாகவும் இருந்து உண்டு. இயற்கை கொடுக்கும் உணவே எங்களின் இல்லங்களில் ருசியாகச் சமைக்கப்படும்.

சில நாள்களின் அதிகாலையில், மூன்றடி நீளம் உள்ள பெரிய பலாப்பழத்தை எட்டுத் துண்டுகளாக்கி கூடவே ஒரு கிண்ணத்தில் மலைத்தேனையும் வைத்து விடுவார் அப்பா. அவரவர் பங்கையும் அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்வோம்.

குழந்தைகளின் கனவு உலகம்
குழந்தைகளின் கனவு உலகம்

விடுமுறை தினத்தில் கொடுக்கப்படும் பலாப்பழத்தைச் சுவைத்து விட்டு ஆற்றுக்கு குளிக்கப் போனால் மதியம் 1 மணிக்கு முன் வீடு திரும்ப மாட்டோம். ஆற்று நீரில் ஓடும் மீன்களுக்கு நிகராக அங்குமிங்குமாய் நீச்சல் அடித்து மகிழ்வோம். எங்களின் கும்மாளத்தைக் கண்டு மீன்களும் ஆற்று நீரில் துள்ளிக் குதித்து மகிழும்.

கல்வியைப் பொறுத்தவரை ஒரு பைசா செலவு கிடையாது. முன்னவர்கள், தங்களின் புத்தகங்களை கிழியாமல் பாதுகாத்து அதைத் தங்களின் சொத்துபோல எங்களிடம் ஒப்படைப்பார்கள். பின்னவர்களான நாங்கள் அதைக் கவனமாக ஏற்றுக்கொள்வோம்.

முன்னவர்கள் பயன்படுத்திய புத்தகங்கள், உடை போன்றவற்றை தம்பி தங்கையர் பயன்படுத்துவதில் மகிழ்வோம்.
நினைவைப் பகிரும் வாசகி

புத்தகங்கள் மட்டுமல்ல, ஆடைகளையும் கூட அடுத்த தம்பி, தங்கைகள் ஏற்றுக்கொள்வோம். முன்னவர்கள் அணிந்த ஆடைகளை அணிவதன் பரவசத்தை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரியும்.

எனக்கு15 வயதில் திருமணம் ஆனது. அடுத்த தலைமுறையாக எங்களின் பிள்ளைகள் வந்தார்கள். பிள்ளைகளுக்கு எங்களைக் காட்டிலும் ஆரோக்கியமான சூழல் கிடைத்தது. என் கணவரின் குடும்பம், கிராமத்து விவசாயக் குடும்பம் என்பதால் கறந்தபால், பறித்த இளநீர், பனையில் இருந்து இறக்கிய பதநீர், வெட்டப்பட்ட நுங்கு என்பதுடன் இயற்கையாக விளைந்த நெல் மற்றும் தானியங்கள் எனத் தனிப்பட்ட கவனிப்பு கிடைத்தது.

representational image
representational image

எங்கள் காலத்தில் மட்டுமல்ல எங்களின் பிள்ளைகள் காலத்திலும் கல்வியைப் பொறுத்தவரை செலவு நூற்றுக்கணக்கில்தான். அதுவும் கல்லூரி சென்ற பின்புதான். ஆடைகள் விஷயத்தில் காந்தியின் கொள்கைப்படி பருத்தி ஆடைகள் மட்டுமே. மற்றபடி ஷு, சாக்ஸ், கறுப்புக் கண்ணாடி எனப் பிள்ளைகள் கேட்டதுமில்லை. நாங்கள் வாங்கிக் கொடுத்ததுமில்லை.

இப்போது மூன்றாவது தலைமுறையைப் பார்க்கிறேன். பேரன், பேத்திகளின் அன்பு அலாதியானது. அவர்களுக்கு கல்வி, உடை என அனைத்திலுமே எங்களை விடவும் சிறப்புக் கவனம் தரப்படுகிறது. இன்றைய தலைமுறையில் மூன்றரை வயது குழந்தைக்கு கல்விக் கட்டணமாக நன்கொடையைத் தவிர்த்து லகரத்தில் செலவாகிறதாம்.

கலாச்சார மாற்றம்
கலாச்சார மாற்றம்

வளர்ந்து விட்ட குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். அவர்களுக்கு யாரிடமும் பேசக்கூட நேரமில்லை. செவியில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஹெட் போன். அதில் ஒலிக்கும் குரலுக்கு மட்டுமே தலையாட்டும் வாரிசுகள். எதிரில் இருப்பவர் பேசுவதைக் கேட்க நேரமில்லை. இடையில் யாராவது எதையாவது கேட்டுவிட்டால், `ம்ம்...ம்’ என்ற ஓசை மட்டுமே வரும்.

மூன்றாம் தலைமுறையின் உணவு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள். அதிகாலை ஆகாரம் பெரும்பாலும் கிடையாது. நண்பகலில் மட்டும் எதையாவது கொறிப்பது வழக்கம். அவ்வப்போது நண்பர்கள் சேர்ந்து உணவகங்களில் பார்ட்டி.

மூன்றாம் தலைமுறையில் உணவுக்கு நிகராக மருந்து மாத்திரைகள் சேர்ந்திருப்பதைக் காண்கிறேன்.
மூத்த வாசகி

இவை தவிர விட்டமின் மாத்திரைகள், மருந்துகள் என்று தனியாகப் பட்டியலே உண்டு. இப்படிப் போய்க்கொண்டிருக்கும் தலைமுறையின் வேகத்தில், இனி ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியுமா? இதையெல்லாம் எண்ணியபடியே என் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே.

- சுப்புலட்சுமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு