Published:Updated:

அமெரிக்கா அசத்துறாங்க... நாம?- தடுப்பூசி அனுபவம் பகிரும் அமெரிக்க வாழ் இந்தியர் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

தடுப்பூசியின் தாயகமான நம் நாட்டில், தடுப்பூசி உச்ச நீதிமன்றப்படிகள் ஏறும் வரை நிலைமை சென்றுள்ளது வருத்தமளிப்பதாகவே உள்ளது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முன்பே திட்டமிட்டிருந்ததால், கடந்த பிப்ரவரி மாத ஆரம்பத்தில் நானும் எனது மனைவியும் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் அமெரிக்கா வந்தோம். பதுங்கிப் பாயும் புலியைப்போல, கொரோனா அரக்கன் இந்தியாவில் பதுங்கியிருந்த நேரம் அதுவோவென்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் நாங்கள் அங்கிருந்து கிளம்பிய நேரத்தில் மே மாத உக்கிரம் இல்லை. 2021 மே வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்து விட்டது. வெயிலின் வெப்பம் ஒரு புறம் தாக்க, கொரோனாவின் கொடுமை மறுபுறம் அலைக்கழிக்க, லாக் டௌன் வேறு சிரமப்படுத்த, நம் மக்கள்படும் அவஸ்தை சொல்லுந்தரமன்று.

குளிர் காலத்தில்தான் கொரோனா சூடு பிடிக்குமென்றும், வெயில் காலத்தில் குறைந்து விடுமென்றும் சொல்லிய ஹேஷ்யங்களைப் பொய்யாக்கி, அது ஆட்சி செலுத்துகிறது.

Representational Image
Representational Image
Pixabay

முதல் அலை அடித்துச் சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் நாங்கள் கிளம்பினோம். நிபந்தனைப்படி, 72 மணி நேரம் முன்பாக கொரோனா டெஸ்ட் எடுத்து, அது நெகடிவ் என்று வந்த பின்னரே, விமான நிலையம் சென்றோம். சென்னை விமான நிலையத்தில் ஒரு முறை, டெல்லி விமான நிலையத்தில் மறுமுறை என்று சோதித்த பின்னாலும், அமெரிக்காவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அந்த டெஸ்ட் ரிசல்டை மூன்றாவது முறையாகச் சோதித்தார்கள்.

இப்பொழுதெல்லாம் நம் நாட்டிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்களில் பெரும்பாலான பயணியர், எம்மைப் போன்று ஓய்வு பெற்றவர்களே அதிகம். நமது இந்திய பார்லிமெண்டில் வயதானவர்களே அதிகம் என்று முன்பு கூறுவதுண்டு. அதைப் போலத்தான் அமெரிக்கா செல்லும் விமானங்களும், வயதானவர்களின் வானூர்தியாக மாறி வருகின்றன.

கோவையிலிருந்து வந்த ஓய்வு பெற்ற டீச்சர் சொன்னார்கள், ‘நானும் அவருந்தான் பையன் வீட்டிற்குப் போக டிக்கட் போட்டிருந்தோம். திடீரென அவர் கொரோனாவில் போய்ச் சேர்ந்துட்டார். இப்போ நான் தனியாப் போறேன்!’ என்று கண் கலங்கினார். நமக்கும் மனது கனத்தது.

பதினான்கரை மணி நேர நீண்ட பயணத்திற்குப்பிறகு, வாஷிங்க்டனில் இறங்கினோம். ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டில் நெகடிவ் என்று வந்தாலும், க்வாரன்டைன் நிபந்தனை அமெரிக்காவில் இல்லையென்றபோதும், நாங்கள் இருவரும் ஒரு வீட்டில் தனியாக ‘ செல்ப் க்வாரனடைன்’ இருந்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு, நேராக ஒரு மருத்துவமனை சென்று மீண்டும் ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொண்டோம். அதிலும் நெகடிவ் என்று வந்ததன் பிறகே வீட்டிற்குச் சென்றோம். இங்கு அந்த டெஸ்ட்கள் இலவசமே!

சில நாட்களில், முதியோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் அப்ளை செய்ய, நான்கைந்து நாட்களிலேயே முதலில் எனக்கும்(வயது 67), பின்னர் என் மனைவிக்கும் (வயது 58) அழைப்பு வந்தது. அருகிலுள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆன்லைனில், வரும் நேரத்துடன் பதிவு செய்து விட்டு, அந்த நேரத்தில் வந்து போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே ஆன்லைனில் பதிவு செய்து விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்றோம்.

Representational Image
Representational Image

பதிவு செய்த விபரத்தைக் காண்பித்ததும், அடையாள அட்டை கேட்டவரிடம் பாஸ்போர்ட்டைக் காண்பித்தோம். உடனடியாக உள்ளே மாடிக்கு அனுப்பினார்கள். அங்கே கம்ப்யூடரில் நமது விபரத்தைச் சரி பார்த்த பின்னர் மீண்டும் மற்றொரு வழியாகக் கீழே அனுப்பினார்கள்.

வழி நெடுகிலும் நமக்கு உதவ வாலண்டியர்ஸ். உள்ளே சென்றதும் சுமார் 40 மேஜைகளில் தடுப்பூசி போடும் செவிலியர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருந்தது. உதவிக்கு நின்றிருந்தவர் ‘Please go to table 33!’ என்றார். அங்கு சென்றதும் அந்த செவிலியர் இன்முகம் காட்டி வரவேற்று அருகிலிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

உடல் வெப்ப அளவைச் சோதித்துக் கொண்டே தொடர் நோய்கள் ஏதாவது உண்டா என்று விசாரித்தார். இல்லையென்றதும் ஓர் அட்டையில் (நமது தற்போதைய ஓட்டுனர் உரிமம் அளவுள்ளது) நமது விபரங்களை எழுதி, நம்மிடமே ஒரு முறை காட்டி, சரி பார்த்துக் கொண்டார். உடன் ‘எந்தக் கையில்?’ என்று கேட்டு அந்தக் கையில் தடுப்பூசி போட்டார்.

பக்கத்து அறைக்குச் சென்று பத்து நிமிடங்கள் ஓய்வு எடுத்து பின்னர் செல்லுமாறு அறிவுறுத்தினார். அந்த அறையில் வேண்டிய அளவுக்கு நாற்காலிகள் இருந்தன. உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த வாலண்டியர் நமக்குக் காலியாக இருந்த நாற்காலியைக் காட்ட, அமர்ந்தோம். பலர் உள்ளே நடந்து கொண்டே ஒவ்வொருவரையும் கண்காணித்தபடி இருந்தனர். இங்கு மருத்துவம் படிக்கச் சேர வேண்டுமென்றால், இது போன்ற சமூக சேவை புரிந்து அதற்கான சான்றிதழ்கள் பெற வேண்டியது கட்டாயமென்று பின்னர் அறிந்தேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தோம். என்னைப் பொறுத்தவரை நாம் காய்ச்சலுக்கு நம்மூரில் ஊசி போட்டுக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. எனக்களிக்கப்பட்ட அட்டையில் தடுப்பூசி(பைசர்) போடப்பட்ட விபரங்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தன.

சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு (34 ஆம் நாள்)இரண்டாவது முறை, மேற்கண்ட முறையிலேயே போட்டுக் கொண்டேன்! அடுத்த வாரத்தில் என் மனைவிக்கும் அழைப்பு வர, முதல்தடுப்பூசி போட்ட அன்றே, அந்த அட்டையில் இரண்டாவது தடுப்பூசிக்கான தேதி மற்றும் நேரத்தையும் குறித்துக் கொடுத்துவிட்டார்கள்.

நாங்கள் வெளிநாடுகள் வரும்போது உரிய காப்பீடு எடுத்து விடுவோம். இம்முறையும் எடுத்திருந்தோம். ஆனால் தடுப்பூசி இங்கு இலவசமாகவே போடப்பட்டதால், யாரும் காப்பீடு குறித்துக் கேட்கவில்லை. இருப்பினும் நாங்கள் முன் ஜாக்கிரதையாக அந்தக் காப்பீட்டு அட்டையுடன்தான் சென்றோம்.

இங்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லாத எம்மைப் போன்றோருக்கும், எவ்விதக் கேள்வியுமின்றி இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டது சிறப்பானது. ஆனால் தடுப்பூசியின் தாயகமான நம் நாட்டில், தடுப்பூசி உச்ச நீதிமன்றப்படிகள் ஏறும் வரை நிலைமை சென்றுள்ளது வருத்தமளிப்பதாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல், தடுப்பூசி வருவதற்கு முன்னால் மத்திய, மாநில மந்திரிகள் எங்கு சென்றாலும் ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகவே போடப் படும்!’ என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்! இன்றோ, தடுப்பூசிக்கே மூன்று விலைகள்.

மத்திய அரசுக்கு ஒன்று. மாநில அரசுக்கு மற்றொன்று. தனியாருக்கு வேறொன்று. இதனை எந்தப் பத்திரிகையும் சுட்டிக்காட்டி, அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கேள்வி கேட்காததுதான் வேதனையின் உச்சக் கட்டம். சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு சிரிப்பு வந்தது.

Representational Image
Representational Image

தமிழக மின் வாரியப் பணியாளர் வாழைப்பழ வண்டிக் காரரிடம் பழத்தின் விலை கேட்க, அவர் ‘என்ன பயன்பாட்டுக்கு’ என்று கேட்பார். ஏனென்று மின் வாரியக்காரர் கேட்க, ’நோயாளிக்கென்றால் அதற்கொரு விலை, குழந்தைகளுக்கென்றால் வேறு விலை, உங்களுக்கென்றால் மற்றொரு விலை’ என்பார்! ‘ஏன் அப்படி?’ என்று ஆச்சரியமுடன் கேட்க, ’ஒரே கரண்டை நீங்கள் பல விலைகளுக்குத்தானே விற்கிறீர்கள்?’ என்றதும் மின்வாரியக்காரர் வாயடைத்துப் போவார்!

அமெரிக்கா வளர்ந்த நாடு. மக்கட்தொகையும் குறைவு. (33.1 கோடி) நம் நாட்டிலோ 138 கோடி மக்கட் தொகை என்று வக்காலத்து வாங்க ஏராளமானோர் கிளம்பிடுவர். ஆனால், அதே அமெரிக்காவுக்கு முதல் அலையின்போது நமது இந்திய நாடு உதவியதை இன்றைக்கும் அமெரிக்கா நன்றியுடன் நினைவு கூர்கிறது. இதில் கூத்து என்னவென்றால் ஒரு பிரபலப் பத்திரிகையில் அமெரிக்காவிலும் தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்தே மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக ஒருவர் எழுத, அதை அப்படியே பிரசுரிக்கிறார்கள். அச்செய்தி உண்மைக்குப் புறம்பானதே.

இந்தியாவில் ஏன் இந்தத் தடுமாற்றம் என்று பார்த்தால், அடிப்படைக் காரணம் மக்களாகிய நாம் தான். நம்மிலிருந்துதானே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தோன்றுகிறார்கள். கட்சி,மதம், இனம் என்று அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்கள். தங்கள் தலைவன் தவறே செய்தாலும் அதைச் சகித்துக் கொள்ளவும், அதைச் சரியென்று வாதிடவும் உள்ள கூட்டம். ‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே!’ என்று நேர்மை வழி நின்றவர்கள் அமரத்துவம் அடைந்து விட்டார்கள்.

காட்டிக் கொடுப்பவர்களுக்கும், காசுக்காகக் கட்சி மாறுபவர்களுக்கும் உண்டான உலகமாக இந்தியா மாறி விட்டது!

காந்தியும்-நேருவும், படேலும்-சாஸ்திரியும், வாஜ்பாயும்-தேசாயும், காமராஜரும்-கக்கனும் இந்த மண்ணில்தான் வாழ்ந்தார்களா என்ற சந்தேகமே தற்போது மேலோங்குகிறது. இயற்கை தந்த வளத்தையும், அளவிடற்கரிய சிறப்புக் கொண்ட மக்கட்தொகையையும் சரியாகப் பயன்படுத்தத் தவறி விட்டோம். என்றே அங்கலாய்க்க வேண்டியுள்ளது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னாலும், ’உலகின் பார்மசி’ இந்தியா என்று புகழப்பட்டாலும், இந்தக் கொரோனா தடுப்பூசி ஏற்படுத்தியுள்ள பிரச்னை சாதாரணமானதல்ல. எதையும் கடந்து போகலாம் என்பதைப்போல, இதையும் கடந்து போவோம் ஒவ்வொரு பிரஜையின் உதிரத்திலும் நேர்மை எண்ணம் கலந்தால்தான் நாடு வல்லரசாகும் என்பதை நினைவில் கொள்வோம்!

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு