Published:Updated:

கேசவனின் ஒருநாள்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

வழக்கமான ருசி இல்லாமல் காபி அன்று அதிகமாகக் கசந்தது. சகித்துக்கொண்டே குடித்தான்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கேசவன் காலையில் 7.30-க்கு அலாரம் வைத்திருந்தான். ஆனால், 8 மணிக்குத்தான் படுக்கையைவிட்டு எழுந்தான். பெங்களூரின் டிசம்பர் மாதக்குளிர் அவனைப் பாடாய்ப்படுத்தியது. அன்றைக்கு முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகத்துக்கு வந்தது. முதல் வேலையாகக் காலையில் 10 மணிக்கெல்லாம் வங்கிக்குப் போய் நல்லபடியாக வேலைகளை முடிக்க வேண்டும் என்ற யோசனையிலிருந்தான்.

Representational Image
Representational Image

பாத்ரும் போய் பல் தேய்த்துவிட்டுக் குழாயைத் திருகினான். தண்ணீர் வரவில்லை. ஏமாற்றமானான். பக்கெட்டில் இருந்த கொஞ்ச தண்ணீரை எடுத்து வாயைக் கழுவிவிட்டு ரமாவிடம் "தண்ணி வரலையா" என்றான். "இப்பதான் மோட்டார் போட்டிருக்காங்க, அரை மணிநேரம் கழிச்சுதான் வரும்" என்றவாறே கிச்சனுக்குள் போனாள். "சரி போய் சீக்கிரமாக் காபி கொண்டு வா" என்றான்.

வழக்கமான ருசி இல்லாமல் காபி அன்று அதிகமாகக் கசந்தது. சகித்துக்கொண்டே குடித்தான். கொஞ்ச நேரம் TV பார்த்தான்.  8.30-க்கு தண்ணி வரத்தொடங்கியது. விறுவிறுவெனப் போய்க் குளித்தான். காலை டிபன் சாப்பிட்டுவிட்டு வண்டியை வெளியே எடுத்து வங்கியை நோக்கிப் பயணித்தான். எப்போதும் வேலைக்குக் கிளம்பும்போது பார்க்கும்  எதிர்வீட்டுச் சின்ன பெண் அன்று வீட்டைவிட்டு வராமல் டி.வி.யைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

Representational Image
Representational Image

ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் வங்கியை நோக்கி. ஆட்டோ ஸ்டாண்டு தாண்டி வரும்போது பெண் ஒருத்தியைக் கண்டு அவள் மீது சில விநாடிகள் பார்வையைப் பதித்தான். சடாரென ஒரு வேன் குறுக்கே வந்தது. எப்படியோ வண்டியை வேறு பக்கமாகத் திருப்பி எதுவும் ஆகாமல் தப்பித்தான்.

அன்று திங்கள்கிழமை காலை என்பதால் பேங்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறைந்தது 20 பேருக்கு மேல் இவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள். கூட்டம் மிகவும் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. இவனுக்கு முன்னால் நின்றிருந்தவன் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்திருந்தான். அவன் போட்டிருந்த Denim Jeans சர்ட் இவனை உறுத்திக்கொண்டேயிருந்தது. Woodland Shoe போட்டிருந்தான், கையில் RADO வாட்ச் கட்டியிருந்தான். அவனது பணக்காரத் தோரணையும் உடல் மொழியும் இவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவனைப் பார்க்கப் பார்க்க இவனுக்குள் பொறாமையும் ஆற்றாமையும் நிரம்பி வழிந்தது. அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வேலை செய்பவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினான். எல்லார் முகத்திலும் வேலை டென்ஷன் தெரிந்தது.

Representational Image
Representational Image

இவனுக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். "அரே யா, கித்னா தேர் லகேகா ஆஜ்" என்றான் ஒருவன். வழக்கமாக வேகமாகப் போகும் வரிசை அன்று ஆமை வேகத்தில் நகர்ந்தது. அந்தக் கவுன்டரில் இருந்தவள் இளம் வயதுப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், ஏனோ அன்று வரிசை மெதுவாகவே நகர்ந்தது.

கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் முடிந்த பிறகு கவுன்டருக்குப் பக்கத்தில் வந்தான். இப்போது அந்த Denim Shirt பையன் இங்கிலீஷில் ஏதேதோ வளவளவென்று அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். கேசவன் அவனைப் பார்த்து `போய்த்தொலைடா சீக்கிரம்' என்று மனதுக்குள் கத்தினான்.

அவன் அங்கிருந்து கிளம்பினான். அப்பாடா ஒரு வழியா வேலைய முடிச்சுறலாம் என்றபடியே வேகமாய் முன்னால் நகர்ந்தான். அவன் பக்கத்தில்போன அடுத்த விநாடியே பேங்க் ஊழியர் லேசான பதற்றத்துடன் கீபோர்டைத் தட்ட ஆரம்பித்தாள். 5 நிமிடங்களுக்கு மேலாகியும் எதுவும் சொல்லாமல் சிஸ்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிஸ்டம் கேங் ஆகி நின்றிருந்தது. கேசவன் பொறுமையிழந்து "மேடம்" என்றான். "ஒன் மினிட்" என்றாள்.

Representational Image
Representational Image

மறுபடியும் சிஸ்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்த சில விநாடிகளில் கேசவனிடம், "நெட்வொர்க் ஃபெயிலியர், Can you come tomorrow?" என்றாள். இவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்கவும், "இவத்து சிஸ்டம் ப்ராப்ளம் ஆகிதே, நாளை பரத்தீரா?" என்று கன்னடத்தில் சொன்னாள். மறுநாள் மேனேஜரிடம் பர்மிஷன் கேட்டால் தரமாட்டார் என்று கேசவனுக்கு நன்றாகத் தெரியும், "ப்ளீஸ் மேடம், ப்ளீஸ் மேடம், check now மேடம்" என்று திரும்பத் திரும்ப 10 நிமிடங்களுக்கு மேல் அங்கேயே நின்று கத்திக்கொண்டேயிருந்தான். அவள் எதுவுமே காதில் விழாததுபோல உள்ளே போனாள்.

பின்னால் நின்றிருந்தவன் "கல் ஆஜாவோ பையா" என்றபடியே நகர்ந்து சென்றான். பேங்க்கில் நின்றிருந்தவர்கள் எல்லாம் அவனையே பார்ப்பதுபோல தோன்றியது. அவமானமாக உணர்ந்தான். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரம் அங்கிருந்த சேரில் உட்கார்ந்தான். அங்கிருந்த செக்யூரிட்டி இவனைப் பார்த்து, "நாள பண்ணி சார்" என்றார்.

Representational Image
Representational Image

வெளியே வந்து பார்த்தான். அந்த Denim Shirt பையன் பக்கத்தில் நின்ற பெண்ணிடம் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். வண்டியை உதைத்தான். அது ஸ்டார்ட் ஆகவில்லை. மழை லேசாகத் தூறத்தொடங்கியது. மழையில் நனைந்துகொண்டே மெக்கானிக் கடையைத் தேடி வண்டியைத் தள்ளிக்கொண்டே கூட்டத்தில் மறைந்தான் கேசவன்.

- அருண்குமார் செல்லப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு