Published:Updated:

பூக்களை நோகடிக்கலாமா..? -ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சில மாணவர்களுக்குத் தூண்டுகோல் இருந்தால் மட்டும் செயல்படுவார்கள். அதாவது, அவர்களை அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும், நேர்மறையாக அறிவுரை கூற வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகை மாணவர்களில் ஒருவர்தான் ஜெகன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

குழந்தைகளின் மனது பூ போன்றது என்பது உண்மைதான். அவர்களை உளவியல் ரீதியாகக் கையாளும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. இங்கே குழந்தைகள் என்பவர்கள் எல்.கே.ஜி முதல் கல்லூரிவரை பயிலும் மாணவர்கள். திறமையான மாணவனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அவர்கள் மனம் துவண்டு போவது நிச்சயம். சில மாணவர்களுக்குத் தூண்டுகோல் இருந்தால் மட்டும் செயல்படுவார்கள். அதாவது, அவர்களை அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும், நேர்மறையாக அறிவுரை கூற வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகை மாணவர்களில் ஒருவர்தான் ஜெகன்.

ஜெகன் கெட்டிக்கார மாணவன். 9-ம் வகுப்பில் பயில்கிறான்... பள்ளியில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் ஜெகனின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். படிப்பிலும் அவனை விஞ்ச முடியாது.

Representational Image
Representational Image
Husniati Salma on Unsplash

எந்தவொரு விஷயத்தையும் ஏதோ கேட்டோம் அறிந்தோம் என்றில்லாமல், விவரமாகவும் நுணுக்கமாகவும் கேட்டறியும் திறன் சிறு வயதில் இருந்தே அவனுக்கு உண்டு. கேள்வி கேட்கும் திறனால் பள்ளியிலும், பிற இடங்களிலும் அனைவரது கவனத்தையும் சுலபமாக ஈர்த்து விடுவான். வகுப்பில் சக மாணவர்கள் ஜெகனை முந்திரிக்கொட்டை என்ற பட்டப்பெயரால் அழைப்பதுண்டு. ஜெகனைப் பொறுத்தவரையில், அவனை யாராவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்க வேண்டும், அதாவது, அவனை இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஆசிரியரோ, அவனின் பெற்றோரோ அதைச் செய்யத்தவறினால் தனது செயலின் வேகத்தை இழந்துவிடுவான்... ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஒரே பள்ளியில் படிப்பதால், ஆசிரியர்கள் அனைவரும் ஜெகனின் திறனறிந்து, மனமறிந்து ஊக்கப்படுத்தி அனைத்துப் போட்டிகளிலும் கல்வியிலும் முதன்மையாகத் திகழ வைத்தனர். ஜெகனுக்கு கணக்கு என்றால் அலாதி பயம்... இருப்பினும் ஆசிரியர்களின் கற்பித்தலால் 60 சதவிகிதம் வாங்கிவிடுவான்.

Representational Image
Representational Image
Yannis H on Unsplash

ஒருநாள் ஜெகனின் அப்பாவுக்கு, சென்னைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டதால் குடும்பத்துடன் சென்னையில் குடியேற முடிவு செய்தார். அவரின் நண்பர்களும் உறவினர்களும் ஜெகனின் திறமைக்கு சென்னையில் நல்ல பள்ளியில் சேர்த்து விடுங்கள் எனக் கருத்து தெரிவிக்க, ஜெகனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, கைகால் ஓடவில்லை அவனுக்கு.

தினமும் கனவில் மிதக்க ஆரம்பித்தான். பள்ளியில் சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பெருமையாக, தான் சென்னையில் மிகப்பெரிய பள்ளியில் சேரப்போவதாகச் சொன்னான்... அந்த நாளும் வந்தது, சென்னையில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் ஜெகன் 9-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டான். புதிய சூழ்நிலை, புதிய நண்பர்கள் என்பதால் ஜெகனால் அனைவரிடமும் சகஜமாகப் பழக முடியவில்லை.

ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் தைரியமாக எழுந்து கூற அச்சப்பட்டான். முக்கியமாக கணக்கு வகுப்பில்... கணித ஆசிரியரோ தினமும் ஜெகனை வகுப்பில் சக மாணவர்கள் முன்பு அவமதிக்க ஆரம்பித்தார்... ஜெகனின் ஆர்வமும் திறமையும் சிறிது சிறிதாக மழுங்கடிக்கப்பட்டன. ஜெகன் தினமும் பெற்றோரிடம் அழ ஆரம்பித்தான். அவர்களும் சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர். ஒரு முறை மாவட்ட அளவில் நடக்கும் பேச்சுப்போட்டிக்கு வகுப்பாசிரியர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார் .

Representational Image
Representational Image
CDC on Unsplash

ஜெகன் முதல் மாணவனாக எழுந்து தனது பெயரைக் கூறினான். வகுப்பு ஆசிரியரோ, ஜெகனைப் பார்த்து 'நீ வகுப்பில் கேள்வி கேட்டாலே வாயைத் திறக்க மாட்டாய்... மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிக்கு உன்னை அனுப்பினால் பள்ளியின் பெயர்தான் கெடும், பேசாமல் உட்கார்' என்று அவமதிக்க, வகுப்பில் மற்ற மாணவர்கள் ஜெகனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்.

ஜெகன் வீட்டில் தன் பெற்றோரிடம் பள்ளியில் நடந்தவற்றைக் கூறினான். ஜெகனின் தந்தை வகுப்பாசிரியரையும் கணித ஆசிரியரையும் சந்தித்து, ஜெகன் திறமையான மாணவன் என்றும், அவனை ஊக்கப்படுத்தும்படியும் வேண்டிக்கொண்டார். 'இனிமேல் வருந்தாதே ஆசிரியர்களிடம் நான் பேசிவிட்டேன்' என்று ஜெகனை சமாதானம் செய்து அனுப்பினார்.

Representational Image
Representational Image
Pixabay

மறுநாள், கணித ஆசிரியர் வகுப்பில், இப்போது நான் ஒரு நகைச்சுவை சொல்லப்போகிறேன், ஜெகன் திறமையான மாணவனாம், 8-ம் வகுப்புவரை ஜெகன்தான் முதல் மதிப்பெண் வாங்குவானாம் என்று சிரித்துக்கொண்டே சொல்ல, வகுப்பில் அனைவரும் ஜெகனை எள்ளி நகையாடினர். மனதளவில் நொறுங்கிப்போன ஜெகன் அன்று முதல் அந்தப் பள்ளிக்குச் செல்லவில்லை.

மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானான். மீண்டும் ஜெகனுக்காக சொந்த ஊருக்கே மாற்றல் வாங்கினார் அவனின் தந்தை. அவன் படித்த அதே பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஆனால், ஜெகனால் முன்பு போல முதல் மாணவனாய் திகழ முடியவில்லை, தேர்வுகளில் தோல்வி அடைய ஆரம்பித்தான். எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதில்லை.

Representational Image
Representational Image
Pixabay

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டான். ஜெகனுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அந்தக் கணித ஆசிரியர் செய்தது எவ்வளவு பெரிய தவறு. இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது மனம் கனமானது. ஆசிரியர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் மாணவர்களின் மனமறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

ஜெகன் மீண்டும் வெற்றி மாணவனாய் வலம்வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

- நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு