Published:Updated:

``நேசித்த தொழில்... வருமானம் இல்லையென்றாலும் விட முடியல!" ஊட்டி ஓவியர் 'ரூபம் ஆர்ட்ஸ்' பாலகோபால்

`வான்கோவைபோல எனக்கும் மஞ்சள்தான் பிடிக்கும்' எனத் தூரிகையை கைப்பிடித்த பாலகோபாலன் என்ற ஓவியரின் துயரக்கதை.

Balagopalan
Balagopalan

`ரூபம் ஆர்ட்ஸ்'

இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் ஊட்டி நகரில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்களுக்கு கீழ் மூலையில் சாய்வெழுத்தாக இந்தப் பெயர் இருக்கும். அதுவும் ஓர் ஓவியம்போல இருப்பது தனி அழகு. உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை இந்தப் பெயர் பரிச்சயம்.

நகரத்து வீதிகளில் சில அடிதூரம் நடந்தாலே, விளம்பரப் பதாகை, சுவர் ஓவியங்கள் என, எல்லா இடங்களிலும் இந்தப் பெயரைப் பலமுறை பார்த்துவிடலாம். இவையெல்லாம் சில ஆண்டுகள் முன்புவரைதான். இப்போதெல்லாம் இந்தப் பெயரைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஓவியங்கள் இருந்த இடங்களில் எல்லாம் ஃப்ளெக்ஸ் பேனர்களே இருக்கின்றன. `ரூபம் ஆர்ட்ஸ்' என்னவாயிருக்கும் என தேடத் தொடங்கினோம்.

Balagopalan
Balagopalan

ரூபம் ஆர்ட்ஸ் பற்றி, பலரிடம் விசாரித்ததில் ஒரு வழியாக அது இருக்கும் இடம் தெரிந்தது. பரபரப்பான ஊட்டி கமர்ஷியல் சாலை அருகில் உள்ள ஒரு சிறிய பாதையில் சென்றால், வண்ணக்கலவையால் அடையாளம் காட்டுகிறது `ரூபம் ஆர்ட்ஸ்.'

சிறிய அறையில், பெரிய ஜர்க்கினும் தொப்பியும் அணிந்த முதியவர் ஒருவர் மாதா சிலைக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தார். உடையில் வண்ணங்களின் சிதறல்களோடு இருந்த அவர், தன்னை ஒவியர் பாலகோபாலன் என்றும், 40 ஆண்டுக்கும் மேலாக ரூபம் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்துவருவதாகவும் சொல்கிறார். அவர் வரைந்த மலர்பார் அணில், ஊட்டி ஏரி எனப் பல ஓவியங்களை ஆர்வத்துடன் நம்மிடம் காண்பித்துப் பேசத் தொடங்கினார்.

``நான் பிறந்தது கேரளா. என் அண்ணன் நன்றாக வரைவார். அதனால், ஓவியத்தின்மீது ஏற்பட்ட நாட்டத்தால் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நானும் வரைய ஆரம்பித்தேன். ஊட்டியில் 1969-ம் ஆண்டு முதல் `ரூபம் ஆர்ட்ஸ்' என்ற பெயரில் தொழில்முறை ஓவியராக இருந்துவருகிறேன். எனக்கு விவரம்தெரிந்த நாள்முதல் வண்ணங்களோடும் தூரிகைகளோடும் மட்டுமே வாழ்க்கை. 60 வயதைக் கடந்தும் எந்த நடுக்கமும் இல்லாமல் இன்றைக்கும் வரைய முடிவதற்கு ஒரே காரணம், மனப்பூர்வமாக நேசித்து இந்த வேலையைச் செய்வதுதான். கடந்த 40 ஆண்டுகளாக ஊட்டி நகரில் உள்ள சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை என் தூரிகைகளும் வண்ணங்களும் படாத இடங்களே இல்லை.

Balagopalan
Balagopalan

சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், இயற்கைக் காட்சிகள் என எல்லாவற்றையும் தத்ரூபமாக வரைவோம். எங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். ஒப்பந்தம் செய்யவே மாதக்கணக்கில் பலரும் காத்திருந்தனர். வரைவதற்கு எவ்வளவு கஷ்டமான ஓவியமாக இருந்தாலும் சரி, எவ்வளவு உயரத்தில் வரையவேண்டுமானாலும் சரி, எந்தச் சிரமமும் பார்க்காமல் செய்து முடிப்போம். உதவிக்குப் பல ஓவியர்கள் இருந்தார்கள். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை ஓவியம் மட்டுமே என்றிருந்தோம். அந்த ஓவியங்களே, தொழில் முறையாக நல்ல வருவாய் தந்து, சகத் தொழில்முறை ஊழியர்களுக்கும் வாழ்வாதாரத்தை அளித்தன.

துணி பேனர்கள், விளம்பரப் பதாகைகள் என கையால் வரையப்பட்ட அனைத்தும் நாளடைவில், டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனருக்கு மாறின. ஓவியர்களின் ஒப்பந்தத்துக்கு வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலைமாறி வாடிக்கையாளர்களை நாங்கள் தேடிச்செல்லும் நிலை வந்தது. ஃப்ளெக்ஸ் பேனர் என்ற ஒற்றை வரவு, எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

Balagopalan
Balagopalan

கால ஓட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாத்துறையுமே மாற்றம் காணும். ஆனால், எங்கள் தொழில் ஒட்டுமொத்தமாக ஆட்டம்கண்டு விட்டது. எந்தத் தொழிலை நேசித்துச் செய்தோமோ அந்தத் தொழிலே எங்களுக்குச் சாபக்கேடாக மாறியது. குறைந்த விலையில் குறைந்த நேரத்தில் கிடைக்கும் என்பதால், மக்கள் அனைவரும் ஃப்ளெக்ஸ் பேனருக்குப் போய்விட்டனர். சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, கையால் வரையப்பட்ட துணி பேனர்கள் காணாமல் போய்விட்டன. இதனால், தொழில்முறை ஓவியர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன.

மலை மாவட்டமான நீலகிரிக்கு டிஜிட்டல் பேனர்களின் வருகை மிக தாமதமாகவே வந்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. என்னைப் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழில்முறை ஓவியர்களை முடக்கியது. சுவர் விளம்பரங்கள் வரைபவர்கள் தொழிலை விட்டு கூலிகளாக வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.

Balagopalan
Balagopalan

ஃப்ளெக்ஸ் பேனர்களின் வருகைக்குப்பின், எங்களால் தொழிலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சென்னை இளம்பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து இறந்த சோகத்துக்குப் பின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களின் வாழ்வில் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

என்ன ஆனாலும் சரி, எனக்கு வண்ணங்களையும் தூரிகைகளையும் கைவிட மனம் வரவே இல்லை. எந்த நிலை வந்தாலும் பரவாயில்லை, செத்தாலும் ஓவியனாகவே சாக வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைக்கும் இதை விடாமல் செய்துவருகிறேன்" என்றார்.

பாலகோபாலனிடம் ஓவியம் கற்றுக்கொண்ட ஓவியர் அஜந்தா தங்கவேல், ``எங்களின் துயரம் சொல்லிமாளாது. நிறைய கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும் இந்தத் தொழிலுக்கு வந்தோம். ஆனால், இன்று தொழிலையே வெறுத்துப்போகும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இப்படி, ஒரு கூட்டம் தவியாய் தவிப்பது யாருக்கும் தெரியவில்லை. யாருமே எங்களைக் கண்டு கொள்வதேயில்லை. ஒரு சிலர் மட்டும் எங்கள் நிலையைக்கண்டு வேலை கொடுக்கின்றனர். அரசு சார்பிலும் எந்த உதவியும் இல்லை" என்றார் வேதனையுடன்.

Thangavel
Thangavel

நீலகிரி மாவட்ட தொழில் முறை ஓவியர்கள் சங்க நிர்வாகி ஒருவர், ``மூத்த ஓவியர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதேபோல் நலிவுற்ற ஓவியக் கலைஞர்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும், அரசுத் தரப்பில் விளம்பரங்கள் ஓவியங்கள் சார்ந்த வேலைகளை எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்று ஆதங்கத்தைக் கோரிக்கைகளாய் அடுக்குகிறார்.

இது, ஒரு பாலகோபாலனின் கதை மட்டும் அல்ல... அவரைப் போல் வண்ணத்தைக் கைப்பிடித்த பலரின் நிலை இதுதான்.

Vikatan