Published:Updated:

உடல் அசைய மறுத்தாலும் ஊக்கம் குறையாது `பத்மஸ்ரீ' வரை சென்ற கே.வி.ராபியா; தன்னம்பிக்கையாளரின் கதை!

பத்மஸ்ரீ விருது பெற்ற கே.வி.ராபியா

`துன்பம் வரும் காலங்களில் தளராமல் முன்னோக்கிச் சென்றால் நமது கஷ்டங்கள் முள்கிரீடமாக அல்லாமல் பட்டுமெத்தையாக மாறும் என்பது என் வாழ்க்கை அனுபவமாகும்' என்கிறார் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ராபியா.

உடல் அசைய மறுத்தாலும் ஊக்கம் குறையாது `பத்மஸ்ரீ' வரை சென்ற கே.வி.ராபியா; தன்னம்பிக்கையாளரின் கதை!

`துன்பம் வரும் காலங்களில் தளராமல் முன்னோக்கிச் சென்றால் நமது கஷ்டங்கள் முள்கிரீடமாக அல்லாமல் பட்டுமெத்தையாக மாறும் என்பது என் வாழ்க்கை அனுபவமாகும்' என்கிறார் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ராபியா.

Published:Updated:
பத்மஸ்ரீ விருது பெற்ற கே.வி.ராபியா

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கேரளத்தைச் சேர்ந்த கே.வி.ராபியா, அந்த விருதுக்கு பொருத்தமானவர் எனக் கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். 56 வயது ஆன பின்பும் வீல் சேரில் சுழன்றபடி எழுத்தறிவிக்கும் புனிதப் பணி மட்டுமல்லாது, வாழ்க்கையில் துவண்டவர்களை கைதூக்கிவிடும் ஏணியாகவும் செயல்படுகிறார். சக்கர நாற்காலியில் பயணித்து நாட்டின் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்று கே.வி ரபியாவுக்கு புகழாரம் சூட்டுகின்றனர் கேரள மக்கள். ஆனால் கே.வி.ராபியாவோ மக்கள் பணி செய்ய இறைவன் கொடுத்த வரம் இந்த விருது என்கிறார். மக்கள் சேவைக்காக கே.வி.ராபியா பயணித்துக்கொண்டிருப்பது முள்பாதை என்பது கேரள மக்கள் அனைவருக்குமே தெரியும்.

வீல் சேரில் பயணிக்கும் கே.வி.ராபியா
வீல் சேரில் பயணிக்கும் கே.வி.ராபியா

கேரளத்தின் மலப்புறம் மாவட்டம் திரூரங்காடியை அடுத்த வெள்ளினக்காடு பகுதியைச் சேர்ந்த மூசாக்குட்டி - பிய்யாச்சுகுட்டி ஆகியோரது ஆறு மகள்களில் ஒருவர்தான் கே.வி.ராபியா. திரூரங்காடி அரசு பள்ளியில் ஓன்பதாம் வகுப்பு படிக்கும்போது உடலில் தளர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அப்பாவின் தம்பி அவரை சைக்கிளில் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றார். ப்ரீ டிகிரி படிப்பதற்காக திரூரங்காடி பி.எஸ்.எம்.ஓ கல்லூரியில் சேர்ந்தார். தேர்வுக்கு ஆறுமாதம் முன்பே ராபியாவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி செயல் இழந்து, முற்றிலும் இயக்கத்தை இழந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெகுலர் கிளாசுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திறந்தவெளி பல்கலைகழகம் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார் கே.வி.ராபியா. அரசு எழுத்தறிவு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே ராபியா தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு எழுத்துச் சொல்லிக்கொடுத்தார். கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவர்களை தயார்படுத்தினார். இவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

கே.வி.ராபியா
கே.வி.ராபியா

இந்த நிலையில்தான் கேன்சரால் பாதிக்கப்பட்டார். திருச்சூரில் உள்ள அமலா கேன்சர் செண்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் அங்குள்ள சக நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார். சமூக சேவைக்காக சலனம் என்ற டிரஸ்ட் ஆரம்பித்து முதியோருக்கு எழுத்தறிவித்தல், நூலகம் மூலம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல், டியூசன் நடத்துதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு செயல்பாடுகளை நடத்திவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலப்புறம் மக்கள் குடும்ப பிரச்னைகளுக்கு அணுகுவதும் ராபியாவின் வீட்டைதான். 'அனைத்து பிரச்னைக்கும் தீர்வுகாணும் அந்த சந்தோஷம்தான் என் வாழ்க்கை பாதையின் வெளிச்சம்' என அடிக்கடி சொல்லுவார் ராபியா. எழுத்தறிவிக்கும் பணிக்காக 1993-ல் தேசிய இளையோர் விருது கே.வி.ராபியாவுக்கு வழங்கப்பட்டது. இப்போது உடலில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதையும் தாண்டி சேவைபணி செய்துவருகிறார்.

கே.வி.ராபியா எழுதிய புத்தகம்
கே.வி.ராபியா எழுதிய புத்தகம்

வெள்ளினக்காட்டில் தனது சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் கே.வி.ராபியா பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். சலனம் பப்ளிகேசன் மூலம் வருவாய் ஈட்டி அதையும் பொது நலனுக்காக செலவு செய்கிறார். கே.வி.ராபியா தனது சுயசரிதையான `ஸ்வப்னங்களுக்கும் சிறகுகள் உண்டு' என்ற புத்தகம் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. பத்மஸ்ரீ விருது கிடைத்தது பற்றி கே.வி.ராபியா கூறுகையில், "தோல்விகள் மட்டுமே என் வாழ்க்கையின் அடையாளமாக மாறிப்போனது. அது கேரளத்தில் என்னை அறிந்தவர்களுக்கு தெரியும். நிறைய கஷ்டங்களை நான் கடந்து வந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் என்றுமே போராட்டங்கள்தான். மற்ற ஆண்டுகளை விட 2021-ம் ஆண்டு துயரம் மிகுந்ததாக அமைந்துவிட்டது. எனக்கு முதுகெலும்பு வலி அதிகரித்து, அசைய முடியாத நிலை ஏற்பட்ட சமயத்திலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்ததாக கேன்சரல் பாதித்த வயிற்றில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சோறுமட்டும் சாப்பிட முடிகிறது. மஞ்சள், கறிவேப்பிலை போன்ற மருந்துவகைகளை ஜூசாக குடிக்கிறேன். அதுமட்டுமல்லாது என் வீட்டில் நான்கு மரணங்கள் நடந்துள்ளன. கொரோனாவால் என் தங்கைகள் இருவர் இறந்துவிட்டனர். எனது ஒரு மாமியார் மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் இறந்துவிட்டனர்.

கே.வி.ராபியா
கே.வி.ராபியா

கொரோனாவால் எனக்கு வருவாய் தரும் புத்தக விற்பனையும் குறைந்துவிட்டது. ஆனாலும் நான் தளரவில்லை. என் வீட்டில் உள்ளவர்களின் கைகளையும். கஷ்டம் என என்னைக்காண வருபவர்களின் கைகளையும் பிடித்துக்கொண்டு முன்னோக்கி செல்கிறேன். அதற்காகத்தான் இந்த விருது கிடைத்துள்ளது. மோசமான ஒரு ஆண்டை நான் கடந்ததற்காகவும், இனி சமூகத்தின் உதவி இருந்தால்தான் முன்னோக்கி செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்ட சமயத்தில்தான் இறை அருளால் இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. விருது கிடைத்ததால் என் பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளது" எனக்கூறும் கே.வி.ராபியா, "துன்பம் வரும் காலங்களில் தளராமல் முன்னோக்கிச் சென்றால் நமது கஷ்டங்கள் முள்கிரீடமாக அல்லாமல் பட்டுமெத்தையாக மாறும் என்பது என் வாழ்க்கை அனுபவமாகும்" என்கிறார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism