Published:Updated:

`புறாவைப் பார்த்து திடீர்னு ஒண்ணு தோணுச்சுங்க..!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

என் பால்கனி வழியே பார்த்துக்கொண்டிருக்கும் புறாக்களைப் பற்றி 15 வருடங்களாகத் தோன்றாத கேள்வி இன்று தோன்றியது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கர்களில் பறந்துத் திரியும் காகங்களும் மைனாக்களும் குயில்களும் கிளிகளும் குருவிகளும் சாவதானமாக அமர்ந்து செல்லும், வசிக்கத் தேடும் மரங்களில் புறாக்கள் (குறிப்பாக மாடப்புறாக்கள்) மட்டும் ஏன் அமர்வதில்லை?

மொட்டை மாடிச் சுவர்களிலும் பால்கனி கைப்பிடிக் கம்பிகளிலும் ஜன்னல்களின் வெளிப்புற விளிம்புகளிலும் குளிர்சாதனப் பெட்டிகளின் இடுக்குகளிலும் அமரும் புறாக்கள், ஏன் மரங்களில் அமர்வதில்லை - அது எத்தனை வாகாயிருந்தாலும், கிளைகள் எத்தனை வசதியாயிருந்தாலும்?

என் பால்கனி வழியே பார்த்துக்கொண்டிருக்கும் மாடப் புறாக்களைப் பற்றி 15 வருடங்களாகத் தோன்றாத கேள்வி இன்று தோன்றியது.

ஒருவேளை இன்றுதான் மாடப்புறாக்களைப் பார்க்கிறேனோ?

Representational Image
Representational Image
Pixabay

'ப' வடிவத்தில் இருக்கும் நான்கு மாடி அடுக்குக் குடியிருப்பின் ஒரு பக்க மொட்டை மாடியிலிருந்து மறுபக்கத்து மொட்டை மாடிக்கும், ஜன்னல்களின் விளிம்புகளுக்கும், நீச்சல் குளத்தின் அருகே தரைக்கும்கூட மாறி மாறிப் பறந்துகொண்டிருந்த புறாக்கள் சூழ்ந்திருக்கும். அத்தனை விதமான மரங்களில் ஒன்றில்கூட ஒன்றுகூட அமரவில்லை.

ஏதேனும் ஒன்றாவது என் எண்ணத்தைப் பொய்ப்பிக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாடப்புறாவின் பறத்தலில் மட்டும் ஏதோ சற்று வித்தியாசமாகப்பட்டது.

காலை 10.15 மணி இருக்கும். சூரியனின் வெம்மை இன்னும் முழுதாய் ஏறவில்லைபோல் தோன்றியது காற்றில். வெயில் என் பால்கனிக்குப் பின்னே இருந்து வந்ததால் என் முன்னால் இருந்த கட்டடங்களுக்கு இடையிலான பகுதி இன்னும் நிழலில் இருந்தது. மொட்டை மாடியின் மேல் பகுதி சுவர்களை மட்டும் வெயில் சூடேற்றிக்கொண்டிருந்தது.

வெயில் காய்ந்துகொண்டிருந்த மாடப்புறாக்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து மறுபக்கத்தின் ஏதோ ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைக் குறிவைத்து பறந்து சென்று அமர்வதும் பின்னர் மறுபடியும் இருந்த இடத்துக்கே திரும்புவதுமாக இருந்தன - ஒன்றைத் தவிர.

Representational Image
Representational Image

அதன் பறக்கும் உயரம்தான் முதலில் என் கவனத்தை ஈர்த்தது. மற்றவை அனைத்தும் மேலிருந்து கீழாக அல்லது நேர்கோடாகப் பறந்து செல்லும்போது இது மட்டும் மொட்டை மாடியின் சுவரிலிருந்து மேலெழும்பிப் பறந்தது.

பறந்து மறுபக்க மொட்டை மாடிச் சுவருக்குப் போகாமல் இருக்கும் இடைவெளியின் மேல் ஒரு சுற்று சுற்றி வந்தது - டெஸ்ட் ரைடு போல். எதிர்பார்த்த சூழல் இருந்திருக்க வேண்டும் - அடுத்த சுற்றை அரைவட்டமாக்கி காற்றும் கதிரவனுக்கு கைகொடுத்த கணமொன்றில் பறத்தலை நிறுத்தி(?!) கரணமடித்தது பின்பக்கமாக - இருமுறை.

சமநிலை தவறி தலை குப்புறக் கீழே விழப்போகும் நொடியில் வலது இறக்கையை லேசாய் ஒரு திருகு திருகி உடலை நேர்படுத்திப் பறந்து சென்று அமர்ந்தது புறப்பட்ட இடத்திற்கே.

இதுவரை பார்த்ததில்லை இப்படி ஒரு பறத்தலை - புறாவிடம் மட்டுமல்ல, எந்தப் பறவையிடத்தும்.

பார்த்ததின் ஆச்சர்யம் கண்களிலிருந்து மனதுக்குள் இறங்குவதற்குள் மறுபடி பறந்தது அந்த மாடப்புறா.

இம்முறை சுற்றி வரவில்லை. நேரே பறந்து சரியான இடத்தைப் பிடித்தது. பிடித்த இடம் சரிதானா என்று பார்க்க சிறியதாய் ஒரு கரணம் அடித்து சோதித்துக்கொண்டு ஒரு வட்டமடித்து வந்து சோதித்து வைத்த இடத்தில் இம்முறை மூன்று கரணங்கள் அடித்து, வலது இறக்கைத் திருகி நேராகி மறுபடி சென்றது புறப்பட்ட இடத்துக்கு.

Representational Image
Representational Image

இம்முறை என் பார்வையில் இருந்து அதைத் தப்பவிடுவதாயில்லை. குஞ்சும் இல்லாத முழுதும் வளர்ந்தும் இல்லாத புறாவாக இருந்தது அது. அருகில் இருந்த புறாக்கள் எதையும் அது திரும்பிப் பார்க்கவில்லை. சிறகைக் கோதவில்லை. தலையைச் சிலுப்பவில்லை. மோனத்தில் இருப்பதுபோல் இருந்தது.

சட்டென்று உயர்ந்து இரண்டு முறை சுற்றி வந்தது. இரண்டு இறக்கைகளையும் மாறி மாறித் திருகியும் சுழற்றியும் பார்த்தது - பறத்தலின் ரகசியங்களையும் தன் உடலின் சக்தியையும் அறியும் பொருட்டு. மூன்றாவது சுற்றின் பாதியில் சரியான வெளிபிடித்து, இரண்டு கரணங்கள் அடித்து, நேராகி, எங்கேயும் அமராமல் பறந்து சென்றது.

Representational Image
Representational Image
Viktor Forgacs / Unsplash

அதன்பின் அன்று முழுவதும் அது வரவில்லை. அடுத்து வரும்போது இன்னும் சில வித்தைகள் பழகியிருக்குமோ? இனி தினமும் பார்த்திருக்க வேண்டும். மறுபடி என்று வருமோ தெரியவில்லை அந்த `Jonathan Livingston' Pigeon!

அப்படியே, மாடப்புறாக்கள் ஏன் மரங்களில் பெரும்பாலும் அமர்வதில்லை என்கிற என் சந்தேகத்தை தெளிவுபடுத்த விடை தெரிந்தால் சொல்லுங்கள்..!

(பி.கு : `ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்’ என்ற புத்தகம் கடல் புறாவை பற்றிய புத்தகமாகும். இந்தப் புத்தகத்தின் கற்பனை நாயகனான ஜொனாதன் லிவிங்ஸ்டன் என்ற கடல் புறா, தன்னை பறப்பதில் வல்லவனாக மாற்றி,ல்ம்ம்ல்ம்ம்ம் ம் தன் கடல் புறாக் கூட்டத்தில் இருந்து வேறுபடுத்திக்கொள்கிறது)

- கா.தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு