Published:Updated:

`அன்னக்கொடி டீக்கடையும் 50 நாள் லாக்டெளனும்!' - நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

அன்னக்கொடி
அன்னக்கொடி

எனது சொந்த ஊரான நாகலாபுரத்தைப் பொறுத்தவரை அன்னக்கொடி டீக்கடைதான், தகவல் பறிமாற்றம் செய்யும் இடம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``அன்னக்கொடியண்ணே... மூனு டீ கேட்டு அரை மணிநேரம் ஆச்சு இன்னும் டீ வரலை..” என ஒரு பக்கம் இருந்து கஸ்டமரின் குரல் வரும்.

``பொறுய்யா.. நாங்கல்லாம் நேற்று சொல்லி வச்சு இன்றைக்கு டீ குடிக்கிறோம். பொறுமையா இருன்னு” பக்கத்தில் இருந்து டீயை உறிஞ்சிக் குடிப்பவர் அவர்களை ஆற்றுப்படுத்துவார்.

``எண்ணே டீ வருமா? இல்லை எடத்தைக் காலி செய்யவா?” என முதலில் கேட்டவர் செல்லக் கோபம் கொள்வார்.

``தங்கமணியண்ணே கோபப்படாதீங்க.. சூடா ரெண்டு உளுந்த வடையை உள்ள தள்ளுங்க.. இந்தா டீ போட்டுத் தந்துர்றேன்” என பாய்லர் முன்னாடி நின்றுகொண்டே பக்குவமாகப் பேசி சாந்தப்படுத்திடுவார்.

எனது சொந்த ஊரான நாகலாபுரத்தைப் பொறுத்தவரை அன்னக்கொடி டீக்கடைதான், தகவல் பறிமாற்றம் செய்யும் இடம். உள்ளூர் கள நிலவரம் முதல் உலக அரசியல் வரை அலசி ஆராயும் இடம் இங்குதான். காலை 7 மணிக்கு கடை திறக்கும் முன்னரே ஏராளமானோர் காத்திருப்பார்கள்.

டீ குடிக்க வருபவர்களுக்காக எல்லா தினசரி நாளிதழும் வாங்கி வைத்துவிடுவார். அன்னக்கொடியின் கைப்பக்குவத்தில் போட்ட டீயை ருசித்துக்கொண்டே, பேப்பர் படிக்கிறது அலாதி சுகம்.

Representational Image
Representational Image
Pixabay

``விடியக்காலம்.. அந்த பஸ் ஸ்டாண்ட் கடையிலே அவன்கிட்ட ஒரு டீ குடிச்சேன். இருந்தாலும், அன்னக்கொடி கையால ஒரு டீயை குடிச்சாத்தான் நமக்கு கை, கால் ஓடும்யா" எனப் பெருமையாக பேசி டீயை ருசித்து செல்பவர்கள் ஏராளம். ஒவ்வொருத்தரின் நாவின் ருசி அறிந்து, அவர்களுக்கு ஏற்ற மாதிரி டீ போட்டுத் தருவது அன்னக்கொடியின் ஸ்டைல்!

``அண்ணே 4 டீ சொன்னோம்.. 3 தான் வந்திருக்கு. இன்னும் ஒன்னு வரலைன்னு குரல் கொடுத்தால் போதும்....”

``கருப்பசாமி அண்ணே பொறுமை சாமி. மாரிமுத்துக்கு இலைய (தேயிலை) மாத்தி டீ போடணும். அவருக்கு இந்தா டீ வந்துகிட்டு இருக்கு” என ஒவ்வொருத்தரின் பேரை சொல்லாமல் அவர்களின் அப்பா பெயரைச் சொல்லி அழைப்பதே அன்னக்கொடிக்குத் தனி அழகு.

எவ்வளவுதான் கூட்டம் இருந்தாலும், யாரு முன்னாடி வந்தார்கள், யாருக்குப் பின் யார்? என்பதை தெளிவாக மனக்கணக்கில் வைத்திருந்து, ஒவ்வொருவருக்கும் தேனீர் கோப்பையை நீட்டுவார்.

பஸ் டிரைவர், கண்டக்டர்கள் வந்தால் உடனடியாக டீ போட்டு கொடுத்து அனுப்பிடுவார். அவங்க டயத்துக்கு பஸ் எடுக்கணும்ல.. 2 நிமிஷம் லேட்டானால் பின்னாடி வண்டியை எடுக்க வேண்டியவன் அவங்ககிட்ட சண்டைக்கு வருவாங்கல்ல... பாவம் நம்மலால அவங்க சண்டை போடக்கூடாதுல்ல...” என்று ஆறுதல் கூறி வார்த்தையாலயே காத்திருப்பவர்களை வசியம் செய்திடுவார்.

``கரிசக்காட்டுல கால் குறுக்கத்தில் கொஞ்ச மிளகாயும், வெங்காயமும் விதைச்சிருக்கேன். 4 பொம்பளங்க களை எடுக்காக.... அவுக அன்னக்கொடி கடையிலதான் காபி கேட்காக.. அதான் வந்தேன்" என தெரிஞ்சவரிடம் பேசும்போதே அன்னக்கொடிக்கு ஆர்டர் பண்ணுவார் பெரியவர்.

``கோடாங்கிப்பட்டி பிரசிடென்ட் சாமி.. வடை உள்ளே சூடா வெந்துகிட்டு இருக்கு. வந்த உடன் டீ போட்டு தந்திடுவேன்” என அவருக்குப் பதில் சொல்லி பார்சல் டீ போட்டு அனுப்பி வைப்பார்.

``அண்ணே... அய்யனார் அண்ணே மெட்ராஸில் இருந்து எப்பே வந்தீக..? மாரிமுத்து கல்யாணத்துக்கு வந்தீகளா? எனக்கும் அவன் பத்திரிகை கொடுத்திருக்கான்யா? இந்தா இந்தப் பணத்தை என் பேர்ல மொய் எழுதிடு. பால் இன்னும் சூடு ஏறலே... கப்ல காபி போடுறேன் உனக்குன்னு..” அவரே முடிவு பண்ணி `டபரா செட்டை’ முன்னாடி நீட்டுவார்.

அன்னக்கொடி டீக்கடை வாடிக்கையாளர்கள்
அன்னக்கொடி டீக்கடை வாடிக்கையாளர்கள்

``போனவாரத்துக்கு முந்தின ஞாயித்துக்கிழமை ஊருக்கு வந்திருந்தேன். நீங்க கடைய மூடிட்டீங்கன்னு” கோபம் கொண்டால்...

``காலையில் இருந்து கடையில நின்னுகிட்டே டீ போடுறதால... குதிகால் வலிக்குதுய்யா. அதனால் ஞாயித்துக்கிழமை கடைக்கு லீவு வுட்டுடுவேன்” என்பார்.

இப்படி உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் வசியம் செய்த அன்னக்கொடியண்ணன் ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாள்களாக கடையைத் திறக்கவில்லை.

இப்போது தேநீர் கடைகள் திறக்கலாம். ஆனால், பார்சல் டீ மட்டுமே விற்கலாம் என அரசாங்கம் சொல்லி இருக்கிறது. அன்னக்கொடியும் கடை திறந்திருக்கிறார். பார்சலில் மட்டுமே டீ விற்கிறார். வீட்டில் வந்து குடிக்கும்போது, அந்த பழைய சுவை நாவில் இல்லை..! மீண்டும் கடைக்குச் சென்றேன். வெளியே கோடை மழை கொட்டியது. உள்ளேயே அமர்ந்து தேநீர் குடித்தேன்.... இன்னமும் அடிநாக்கில் இருக்கிறது தேநீரின் தித்திப்பு சுவை..!

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு