அமெரிக்காவில் உள்ள வடகரோலினா என்ற பகுதியில் கேரோவின்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த பூங்காவில் நடைபெற்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா என்றாலே நம் அனைவரது மனதிலும் உற்சாகம் மட்டுமே தோன்றும். அதுவும் பாய்ந்தோடும் ரோலர் கோஸ்டரில் செல்லும் அனுபவமே தனி. என்னதான் ரோலர் கோஸ்டரின் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் நடுப்பயணத்தில் நின்றுவிடுமோ என்ற பயம் நமக்குள் நிச்சயம் எழாமல் இருக்காது. ஆனால் அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் உண்மையிலேயே நடந்தேறியுள்ளது.

கேரோவின்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்கா எப்போதும்போல கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் பொது மக்களின் உற்சாக வெள்ளத்தில் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரோலர் கோஸ்டரின் வாகனம் ஒன்று தொழில்நுட்ப பழுது காரணமாக திடீரென்று பயணிகளுடன் உச்சியிலேயே நின்றுவிட்டது. மரணப்பயணத்துடன் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தொங்கியபடி இருந்தனர்.
இச்சம்பவம் குறித்து, ரோலர் கோஸ்டரில் சென்ற நபர் ஒருவர் ஃபாக்ஸ் 59-க்கு அளித்த பேட்டியில் “ நான் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருவது இதுவே முதல்முறை. துரதிர்ஷ்டவசமாக என் முதல் அனுபவத்திலேயே இப்படியொரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த போது என் கண்ணீர் கீழே விழுந்ததைக் கண்கூடாக பார்த்தேன். அந்த நொடி மிகவும் பயங்கரமாக இருந்தது. ரோலர் கோஸ்டர் உச்சியில் இருந்த போது, கீழே இருந்து தொழில்நுட்ப பழுது ஏற்பட்டு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் திகிலூட்டுவதற்காக அவ்வாறு சொல்கின்றனர் என நினைத்தேன். பின்னர், சரி செய்வதற்கு 35ல் இருந்து 45 நிமிடங்கள் வரை ஆகும் என உறுதி அளித்தனர். அந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடங்களும் ஒரு மணிநேரம் போல் இருந்தது. கீழே இருந்து சில பெற்றோர்கள் மேலே இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது என நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தனர். கடந்த மாதம் கூட எலக்ட்ரோ ஸ்பின் ரைட் பாதியில் நின்றது. இவ்வாறு அடிக்கடி நடப்பது அச்சமூட்டுகிறது” என்று கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக கேரோவின்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பழுது ஏற்பட்டவுடன் பூங்கா பராமரிப்பு குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். அரைமணி நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதில் சென்ற அனைவருக்கும் இரண்டு விரைவு பாஸ்களும் வழங்கப்பட்டது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த ரோலர் கோஸ்டரில் இருந்தவர்களுக்கு இனி ஒவ்வொரு முறையும் ரோலர் கோஸ்டரில் செல்லும் போதும் இச்சம்பவம் நிச்சயமாக வந்துபோகும் அல்லவா!