Published:Updated:

1,000 குழந்தைகளில் 3 பேருக்கு காதுகேளாமை பிரச்னை... சமுதாயம் ஆதரித்தால் சாதிக்கலாம்!

விதிஷா பலியான்
விதிஷா பலியான்

`பெற்றோரின் அரவணைப்பும் ஆதரவும் முக்கியம். நம் போக்கில் விட்டு, விரும்பும் துறையில் சாதிக்க வழிநடத்த வேண்டும். அப்போது அனைவரும் வெற்றியாளராவோம்'

``எங்களைப் போன்ற குறைபாடு உள்ளவர்களை இந்தச் சமுதாயம் சமமாகவும், இயல்பாகவும் நடத்த வேண்டும்'' என்கிறார், செவித்திறன் மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீராங்கனை, உலக அழகி விதிஷா பலியான்.

`6 நாள் தனிமை; இரண்டு முறை மட்டுமே உணவு!'- கொரோனா வைரஸால் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

சென்னையில் தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த காதுகேளாத சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நடப்பாண்டின் காதுகேளாதோருக்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற விதிஷா பலியான் அதில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகப் பேசினார்.

விதிஷா பலியான்
விதிஷா பலியான்

30-க்கும் மேற்பட்ட காதுகேளாத சிறுவர், சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு பற்றியும், அது குறித்த தங்களின் நிலைப்பாடு பற்றியும் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர். அந்தப் பெற்றோரிடமும் குழந்தைகளிடமும், தான் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளையும், அவற்றை வென்ற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விதிஷா. முன்னதாக, அவரைப் பற்றிய அறிமுகம் தரப்பட்டது.

இப்போது விதிஷாவுக்கு 22 வயது. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடன் பிறந்த அவர் நிலை குறித்து அவரின் பெற்றோருக்கு, 5 வயதில்தான் தெரியவந்தது. செவித்திறன் குறைபாட்டால் பேச்சுத் திறனும் தடைப்பட்டுவிட்டது விதிஷாவுக்கு. மருத்துவர்கள் விதிஷாவை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கச் சொல்ல, அவர் பெற்றோர் மறுத்தனர். தாங்களே பல மாதங்கள் தங்கள் மகளுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தனர். அதன் பலனாக விதிஷாவுக்குக் கொஞ்சம் பேசும் திறன் கிடைத்தது.

விதிஷா பலியான்
விதிஷா பலியான்
`சர்வதேசப் போட்டி; வறுமையில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்!’ - கரம்கொடுத்த வேலூர் கலெக்டர்

பின்னர் நார்மல் பள்ளியில் விதிஷாவைச் சேர்த்தனர் அவரின் பெற்றோர். ஆனால், பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளான விதிஷா, படிப்பைத் தாண்டி சாதிக்க நினைத்தார். விளையாட்டுத்துறையில் கால் பதித்தார். பள்ளி, கல்லூரி அளவில் டென்னிஸில் கலக்கிய விதிஷா, தேசிய அளவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2017-ல் நடந்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸில் விதிஷா 5-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மாடலிங்கில் கால் பதித்த விதிஷா பல தடைகளைத் தாண்டி 2019 ஜூலை மாதம் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான உலக அழகிப் போட்டியில் பங்கேற்று, 16 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வென்று, உலக அழகிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம், காதுகேளாதோருக்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் தனதாக்கினார்.

விதிஷா பலியான்
விதிஷா பலியான்

விதிஷா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, ``நம்மைப் போன்றவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் ஆதரவும்தான் மிக முக்கியம். நம்மை நம் போக்கில் விட்டு, நாம் விரும்பும் துறையில் சாதிக்க அவர்கள் வழிநடத்த வேண்டும். அப்போது நிச்சயம் நாம் அனைவரும் வெற்றியாளர்கள் ஆவோம். அதேபோல, மக்கள் எங்களைப் போன்ற குறைபாடு உடையவர்களை சமமாக நடத்த வேண்டும்; இயல்பாக நடத்த வேண்டும்'' என்றார்.

`பிரேக் பிடிக்க காலில்லை; கற்றுக்கொடுக்க ஆளில்லை!' - மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரின் 13 ஆண்டு சவால்

1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காதுகேளாமை பிரச்னை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு காது கேட்கும் கருவிகளைப் பொருத்தினால், அவர்களால் செவித்திறனைப் பெற முடியும். கருவிகளைத் தாண்டி அவர்களுக்கு இந்தச் சமுதாயம் அளிக்கும் ஆதரவும், அரவணைப்பும்தான் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் அது நம் எல்லோருடைய பொறுப்பாகிறது!

அடுத்த கட்டுரைக்கு