Published:Updated:

`நடிப்பு வேண்டாம்; படிப்பு மட்டுமே கடைசி வரை உதவும்' வளர்ச்சி குறைப்பாட்டைக் கடந்து சாதித்த சரவணன்

சரவணன் அலுவலக ஊழியர்களுடன்
சரவணன் அலுவலக ஊழியர்களுடன்

`Give me a rope' பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் பெய்ல்ஸ் என்ற மாணவன் உச்சரித்த வார்த்தை இது.

9 வயதுச் சிறுவனுக்கு ஏற்பட்ட வளர்ச்சி குறைபாட்டால் சக மாணவர்கள் கேலி செய்ததைத் தாங்க முடியாமல் பெற்ற தாயிடமே, ``கயிற்றைக் கொடுங்கள் அல்லது கத்தியாவது கொடுங்கள் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று கதறியுள்ளான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவனுடைய தாய், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இந்தச் சமூகத்தின் முகத்தில் அறைந்து கேள்வி எழுப்பினார்.

சரவணன் தன்  நண்பர்களுடன்
சரவணன் தன் நண்பர்களுடன்

குவாடனைப்போல் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்து இந்தச் சமூகத்தின் முன்பு தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகிறார் சென்னை வடபழனியைச் சேர்ந்த சரவணன். தாம் குள்ளமாக இருக்கிறோம் என்று மற்றவர்களின் பார்வைக்குப் பயந்து சாகத் துணிந்தவர் அல்லர். எதிர் நீச்சல் அடித்து கல்வியிலும் தனது வேலையிலும் உயர்ந்துகொண்டிருப்பவர். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பம். அப்பா பெயர் பிச்சைமுத்து, அம்மா ராமலட்சுமி, அப்பாவுக்குப் பெரிய அளவிலான வருமானம் இல்லை.

சரவணனின்  குடும்பம்
சரவணனின் குடும்பம்

அப்பா, தள்ளுவண்டியில் அயர்ன் கடை வெச்சுதான் எங்களை வளர்த்தார். நானும் அண்ணன் வெங்கடேசனும் ஒரே மாதிரி வளர்ச்சியில்லாக் குழந்தைகளாப் பொறந்துட்டோம். இதுல அண்ணனோடு நிலைமைதான் ரொம்ப கவலையானது.

சின்ன வயசுலேயே அண்ணனுக்குப் போலியோ தாக்கிடிச்சி. அதனால் அண்ணனால் எழுந்து நடக்க முடியாது. அவரு படுத்துகிட்டேதான் இருப்பார். அண்ணனை, அப்பா - அம்மா இருவரும் பார்த்துக்கிறாங்க. அவனுக்காக வேலை செய்யறதை அவங்க என்னைக்குமே பாரமா நெனச்சது இல்லை. அப்படி ஒரு சூழல் எனக்கும் ஏற்பட்டுடக் கூடாதுங்கிறதுல மட்டும், அப்பா கவனமா இருந்தார். சின்ன வயசுல எனக்குச் சரியாகப் படிக்க வராது. நிறைய சப்ஜெக்ட்ல தோல்வி அடைவேன். ஆனாலும் அப்பா என்னைத் தட்டிக் கொடுத்துக்கிட்டே இருப்பார்.

சரவணன்
சரவணன்

அப்பா அடிக்கடி சொல்ற ஒரே வார்த்தை `நீ நல்ல நிலைமைக்கு வருவே' அப்படிங்கிறதுதான். நான் வளர்ச்சி குறைவா இருக்கறதால என்னை நடிக்கிறதுக்கு அழைச்சாங்க. ஆனா அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாரு. இத்தனைக்கும் அந்த நேரத்துல எங்க வீட்டுல சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழ்நிலை. ஆனாலும் அப்பா, 'நடிப்பு வேண்டாம், உனக்குக் கடைசி வரை துணைக்கு வரப் போவது படிப்புதான். அதனால் நீ படி'னு சொன்னாரு.

அதனால என்னோட கவனமெல்லாம் படிப்புலதான் இருந்துச்சு. ஆனாலும் எனக்குப் படிப்பு வரல. தமிழ் வழிக் கல்வி என்றாலும் முட்டி மோதி எப்படியோ பள்ளிப் படிப்பை முடிச்சேன். படிப்பு சரியா வராததால என்னால மார்க் அதிகமா எடுக்க முடியல. ஆனாலும் கல்லூரிப் படிப்பை படிக்கணும்ங்கிற எண்ணம் மட்டும் உறுதியா இருந்துச்சு. இந்தச் சூழ்நிலையில் தெரிஞ்சவங்க, கண்டிப்பா சீட் கிடைக்கும் நீங்க விண்ணப்பிங்கனு சொன்னாங்க. அந்த அடிப்படையில தான் குருநானக் கல்லூரியில விண்ணப்பிச்சேன்.

`நடிப்பு வேண்டாம்; படிப்பு மட்டுமே கடைசி வரை உதவும்' வளர்ச்சி குறைப்பாட்டைக் கடந்து சாதித்த சரவணன்

மதிப்பெண்கள் அடிப்படையில் எனக்கு சீட் கிடைக்கல. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைச்சது. கல்லூரியில சேர்ந்தபோது ஆரம்பத்துல நிறைய கஷ்டங்கள் இருந்துச்சு. அதுக்குக் காரணம் என்கூட படிச்ச மாணவர்கள் அனைவருமே நல்ல வசதியானவங்க. எந்தக் குறையும் இல்லாதவங்க. அவங்ககூட நான் ஓடுவது எனக்குச் சவாலா இருந்துச்சு. சில நேரங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகள் நிறைய இருந்துச்சு. ஆனா, நான் அதைப் பெருசா எடுத்து வருத்தப்படுத்திக்கிட்டது இல்லை.

நான் என்ன தவறு செய்தேன். வளர்ச்சிக் குறைபாட்டோடு பிறந்தது என் தவறா? இல்ல சக மனுஷனைக் குறைகளோடு பார்ப்பது இவர்களோட தவறானு யோசிப்பேன். அதனால இந்த அவமானங்கள், புறக்கணிப்புகள் எனக்கு ஒரு விஷயமே இல்லனு தோணிச்சு.

சரவண்னன்   அலுவலகம் அருகே
சரவண்னன் அலுவலகம் அருகே

மகிழ்ச்சியா வாழ என்ன வழி, நமக்காக உழைக்கற அம்மா, அப்பாவுக்காக நல்ல வேலைக்குப் போகணும்னு முடிவு பண்ணினேன். அப்படி இருத்தப்போ தான் கேம்பஸ் இன்டர்வியூ வந்துச்சு. முதல் கேம்பஸ் இன்டர்வியூல தோல்வி அடைஞ்சேன். ஆனாலும் கவலைப்படல. தொடர்ந்து முயற்சி செய்தேன். அடுத்த இன்டர்வியூல செலக்ட் ஆனேன். டி.சி.எஸ் நிறுவனத்துல வேலை. அங்கும் ஆரம்பத்துல அலுவலத்துக்குள்ள போகவே கொஞ்சம் தயக்கமா இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே சரி பண்ணி சரி பண்ணி வேலையை செய்ய ஆரம்பிச்சேன். கஷ்டம் இல்லாம எதையும் செய்ய முடியாது. கஷ்டம்னு பார்த்தா எதுவுமே செய்ய முடியாது. அப்படித்தான் கடந்தேன். சில இடங்களில் புறக்கணிப்பும் இருக்கும், சில இடங்களில் அரவணைப்பும் இருக்கும்.

இந்த இரண்டு விஷயங்களையும் நல்லதுக்காகன்னு எடுத்துக்கிட்டேன். குறிப்பாக, என்னால ஒரு நிமிஷம் தொடர்ந்து ஆங்கிலத்துல உரையாட முடியாது, பேச முடியாது. தடுமாற்றம் தயக்கம்னு பிரச்னைகள் நிறைய இருந்தன. அந்த நேரத்துல எனக்குத் துணையா இருந்தது அலுவலகமும் நண்பர்களும்தான். அவங்க சப்போர்ட் இல்லன்னா இந்த நிலைக்கு நான் வந்திருக்க முடியாது. இப்போ 10 பேர் எனக்குக் கீழே வேலைபார்க்கிறாங்க. அவங்களோடு வேலையை நான் ஓகே பண்ணாதான் அவங்க மேற்கொண்டு அவங்க வேலை முடித்தற்கான மெயில் போட முடியும். அந்த அளவுக்கு உயர்ந்திருக்கேன். ரொம்பவே பெருமையா இருக்கு.

சரவணன் அலுவலக ஊழியர்களுடன்
சரவணன் அலுவலக ஊழியர்களுடன்

இப்போ ஆங்கிலத்துல என்னால விரிவா ஒரு மெயில் போடற அளவுக்கு எழுத முடியுது. அதுக்குக் காரணம் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும்தான். எனக்குனு எதிர்காலத் திட்டம் எதுவுமே இல்லை. பொருளாதார ரீதியா நல்ல நிலைய அடையணும். நாலுபேருக்கு உதவி செய்யணும்.‌ எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கணும் இதுதான் என்னோட சிம்பிலான திட்டம்" என்கிறார் டி.சி.எஸ் சரவணன்.

ஒரே ஒரு பேட்டி... டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?
அடுத்த கட்டுரைக்கு