Published:Updated:

உள்ளிருப்புப் போர்...! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தற்போதையச் சூழல் குறித்து ஆரூர் புதியவன் எழுதிய கவிதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இமைக்கிற ஓசை கேட்கும்,

இனிமையின் அமைதிப் பூங்கா,

சமைக்கிற அடுப்பி லுற்ற

சருகுபோல் கருகு தய்யோ..!

குமைக்கிற கொரனா வென்னும்

கொல்லும் நோய்க் கிருமி வந்து

நமைஅழிப் பதற்கு முன்பு

நாமதை அழிக்க வேண்டும்..!

Representational Image
Representational Image

காசேதான் கடவுள் என்னும்

கார்ப்பரேட் அமெரிக்கா, நல்

மாசேதுங் கொள்கை பேசும்

மக்களின் சீனம், தீய,

மாசேதுங் கலவா இஸ்லாம்

மார்க்கத்தின் தேசம், புத்தன்

ஏசுவைப் போற்றும் தேசம்

எங்கெங்கும் கொரனா வாசம்..!

பாகான சொந்தம் கூட

பக்கத்தில் வரக்கூடாதாம்..

மாகாண எல்லை தாண்டி

மரணத்தைக் கொரனா கூட்டும்..

ஊஹானாம் சீன பூமி

உற்பத்தி செய்த கோவிட்

வாகான சூழல் தேட

வாகனம் ஆகாதீர்கள்...!

Representational Image
Representational Image

மூன்றாவ துலகப் போரை

முந்திய திந்தச் சூழல்

சான்றோரும் சழக்கர் தாமும்

சமமாவார் இந்நோய் முன்பு

சான்றில்லா கிருமித் தொற்றி

சாகின்றார் மக்கள் எங்கும்

வேண்டாத இந்நோய் வெல்வோம்,

வீட்டிலே இருந்து கொள்வோம்...!

தொடுவதால் தொற்றும், எந்தத்

தூரமும் எட்டும், தும்மல்

இடுவதால் ஒட்டும், தொண்டை

ஈரத்தைப் போக்கும், மூச்சுப்

படுவதால் பற்றும், ஆவி

பறித்திடும் கொரனா, தொற்றி

விடுவதால் மரணம்… வேண்டாம்

வீட்டினுள் உலகைக் காண்போம்…!

Representational Image
Representational Image

புறநானூறு ஒன்று செய்தோம்

போர் செய்தோம், புகழைச் செய்தோம்,

அரணாக வாழ்வுக் காகும்

அறநூல்கள் செய்தோம், வீரத்

திறனாலே உலகை வென்றோம்

தீயநோய் கொரனா வெல்ல

சரணாக இல்லத் துள்ளே

சந்ததம் இருந்து கொள்வோம்...!

Representational Image
Representational Image

உரசினால் பற்றும் தீப்போல்

உயிர்க்கொல்லித் தொற்றிக்கொள்ளும்

முரசினால் எழும் ஓசை போல்

மூச்சிலே பயணம் செய்யும்

`கெரசினா’ல் நெருப்பு மூளும்

கொரனாவோ அதையும் விஞ்சும்

அரசினால் ஆவ தென்ன?

அனைவரும் யுத்தம் செய்வோம்!

- ஆரூர் புதியவன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு