
அப்பாவின் மறதி பற்றி வாசகர் பகிர்ந்த கவிதை...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
அப்பாவுக்கு இப்போதெல்லாம்
மறதி அதிகமாகிவிட்டது...
ஒரு ஜோடிக் காளைகள்
நான்கு கறவைப் பசுக்கள்
துள்ளித் திரிந்த கன்றுகள்
தொழுவம் நிறைந்த வீட்டில்
வாழ்வாங்கு வாழ்ந்ததை
மறந்து போயிருந்தவர்,

மாநகர அடுக்ககத்தின்
அறுபது படிகள் இறங்கி
பால் பாக்கெட் வாங்கப்போய்
பாதியிலேயே திரும்பி வந்து
வீடெல்லாம் தேடுகிறார்...
குழந்தைக்கு 'செரலாக்'
திணித்துக் கொண்டிருந்த
என் மனைவி கேள்விகளால்
நினைவூட்டுகிறாள்...
காசை மறந்துட்டீங்களா..?
மந்தைப் புஞ்சை வித்த பணம்
மிச்சம் கையில் இருக்கு,
காசுக்குப் பஞ்சமில்லை..
பையை மறந்துட்டீங்களா..?
நேத்துக் கொண்டு போனது
அலசிக் கீழே காயுது,
கிருமி வரக்கூடாதில்ல...

கேள்விகளுக்கெல்லாம்
ஞாபகமாய் பதில் சொல்பவரின்
நினைவிடுக்கில்
தேடும் சிறுபொருளின் பெயர்
ஒளிந்துகொண்டு தவிக்கவிடுகிறது.
அடுக்களையிலிருந்து வெளியே வந்த அம்மா,
"கம்மங்கதிரைப் பிணையலடிக்கும்
காளைகளைப் போல
வட்டம்போட்டு சுத்திச் சுத்தி
என்னத்தைத் தேடுறீங்க..."
எனக் கேட்க,
சட்டென விரிந்த மனக்காட்சியில்
கழுத்துச் சலங்கைகள் குலுங்க
கதிரடிக்கும் செவலைகள்
தானியத்தை வாராமலிருக்க
பனைநாரைக் கிழித்துப்
பக்குவமாய்ப் பின்னிப் போட்ட
வட்ட வளையக்கூடு நினைவில் வர,
"என் வாக்கூடைக் காணோம்..."
எனச் சொல்லிவிட்டுத் தேடுகிறார்.
குறிப்பு : கன்றுக்குட்டி மண்ணைத்திங்காமலும், மாடுகள் போரடிக்கும்போதும் பயிர் வழியே செல்லும்போதும் மாட்டின் முகவாயில் பிரம்புக்கொடியால் காற்றுப்புகும்படி பின்னப்பட்ட மூச்சுக்கூடு, வாக்கூடு அணிவித்து (இப்போ முகக்கவசம் மாதிரி) விடுவார்கள்.
- நாராயணபுரம் கணேசவீரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.