`நீயற்ற ஒரு நீண்ட தனிமைக்குப் பின்..!' -அப்பாவுக்கு ஒரு கடிதம் #MyVikatan

அண்மையில் மறைந்த என் தந்தையின் நினைவாக...கவிதை வடிவில் ஒரு கட்டுரை.!
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அப்பா...
நீயற்ற ஒரு நீண்ட... தனிமைக்குப் பின்
மகன் எழுதுகிறேன்.!
நான்
விழும்போது எழ வைத்து..
அழும்போது தோள் கொடுத்து..
சிரிக்கும் தருணத்தில் சிந்திக்க வைத்து..
கோபக் கொப்பளிப்பில் அரவணைத்து..
நட்பு..உறவு..நேசம்..மொழி உணர்த்தி..
உலக உருண்டை உள்ளங்கை தூரமென காட்டி..
"முடியாது" - "முயற்சி செய்யாதது" எனவுரைத்து..
நமக்கிடையே சுவரின்றி எப்போதும் பாதுகாத்து..
உருண்டு புரண்டு..கட்டி கதைபேசி..
"எளிமை" என்பதை அதைவிட
எளிதாக வாழ்ந்து பிரதிபலித்து..
என்னை இப்போதும்...எப்போதும்
பிரமிக்க வைக்கும் பிரபஞ்சம்
நீ மட்டுமே..!

நான் காண.. நீ எடுக்காத
அவதாரம் ஏது?
எழுதித் தீரவில்லை என் எழுதுகோலுக்கு..!
தந்தையாய்...தோழனாய்..
ஆசிரியனாய்...தாயாய்..
தாரமாய்...சகோதரியாய்..
மகளாய்...மகனாய்..
கதை சொல்லியாய்..
மருத்துவ சேவையாய்...அன்பு கானகமாய்..
எனக்கு நீ வாழ்ந்து காட்டாத
கவிதை படிமம் ஏதும் உண்டா?
ஆயிரம் முறை கோவில் வலம் வந்தும்..
கடவுள் ஏன் பேசுவதில்லை என்றெண்ணி..
பின் பள்ளி வயதில் கண்டறிந்தேன்..!
எப்போதும் என்னுடனே பயணித்த
கடவுள்.. நீ மட்டுமே.!
உன் கரம் பற்றிய பால்யம் தொட்டு..
நேற்று உன்னை
முத்தமிட்டு வழியனுப்பும் வரை..
இருவரும் கலக்காத உரையாடல் ஏது இங்கே?
எல்லாம் அடியுணர்வோடு கலந்துவிட்ட
ஆழ் படிமங்கள்...!

என் வாழ்வின் ஒவ்வொரு பருவம்
கடக்கும் போதும்..
நீ.. அள்ளித் தெளித்த அனுபவங்கள்..
ஒன்றா..இரண்டா..?!
புத்தகமும்.. நூலகமும் ஒன்றிணைந்த பேரேடு..!
பள்ளி வயதில் நீ சொல்லி சிரித்துக் கேட்ட
முல்லா..தெனாலி கதைகள்..!
பாரதி..பாரதிதாசன்..கவிதை..கட்டுரைகள்.!
சத்யஜித்ரே.."பதேர் பாஞ்சாலி" நாட்கள்..!
ஞாயிறு மெட்ரோ வேற்றுமொழி விருது திரைப்படங்கள்.!
அக்பர்.. பீர்பால் நகைச்சுவை நொடிகள்..!

அகிரா குரசவா..முபஸ்ஸன்ட்..ஆண்டன் செகாவ்
கதை..கவிதை..காவியங்கள்..!
மு.வ வும்..ஜெயகாந்தனும்.. சுஜாதாவும் கலந்த
மதிய..இரவு மேசை நாட்கள்..!
நம் கணியூர் திரையரங்கு ஆரம்ப நிகழ்வுகள்..!
திராவிட தொடக்கம் - கே.ஏ.மதியழகன் நீண்ட நட்பு உறவு..
அரசியல் உரையாடல்கள்..!
சண்டிகர்..பிலாய்..கான்டீன் வாலிப பருவம்..
பீம்சிங்...சேது மாதவன்..ஜூபிடர் பிக்சர்ஸ்..
சின்னப்பா தேவருடன்
உன் கதை விவாத சென்னை நாட்கள்..
கஞ்சம்பட்டியிலும்.. பொள்ளாச்சியிலும்..
தொட்ட கிராமங்களிலும்
இலவச மருத்துவ சேவை தினங்கள்..!
இன்னும்.. இன்னும்..
இந்தப் காகிதப் பரப்பு போதவில்லை எனக்கு..!

"பிரமிப்பு" என்ற வார்த்தையின் வீரியத்தை..
உன் "எளிய வாழ்க்கை"
தடப்பதிவில் கண்டு பிரமிக்கிறேன்..!
"வெற்றி-தோல்வி"களைக் கையாண்ட விதம் கண்டு..
உன் கரடு முரடான பயணத்தின் "வலிமை" கண்டு.!
நீ சொல்லிய ஒரு வார்த்தை..
அடி நெஞ்சில் ஆழமாய் விதைத்து இருக்கிறேன்..
இப்போதும்..!
"வெற்றி பெறுவது மட்டும் வாழ்க்கை அல்ல..!"
வாழ்க்கைப் பாதை அனுபவங்களை
அதன் போக்கிலேயே
அனுபவித்துக் கடப்பதுதான்
ஆத்மார்த்த பயணம் என்பதை..!
உன் அறுபதுகளில் கண்ட
முகச் சுருக்கக் கோடுகள்..!
அது..வறண்ட வயோதிக கோடுகள் அல்ல..!
வலுவான வாழ்க்கை பயணத்தின்
மேடு..பள்ள வலிகள்..!
அதில் தளராது நீ
கண்டெடுத்த வெற்றிகளின்..அழுத்த சுவடுகள்.!
இனி
நீயற்ற என் தனிமைப் பயணம்..
உண்மையில்...கடப்பது மிகக் கடினம்..!

இருண்ட மழைநாளில்..
திசையற்று.. ஒற்றையாய்த் தனித்துப் பறக்கும்
சிறு பறவை போல்..
இலக்கின்றித் திரியும் மனதை
கட்டி இழுக்க முயற்சிக்கிறேன்..!
அதற்கும் ஒத்திகை நடத்தி..
அழுத்தமாகச் சொல்லிவிட்டு தானே
பயணித்திருக்கிறாய்.!
கடைசியாய் நாம் பேசிய
ஒலிநாடா பதிவைப் பலமுறை
ஒலிக்கக் கேட்டு என்னை
நகர்த்த முயலுகிறேன்..!
நீ ரசித்து..கடந்த வாழ்க்கையின்
அர்த்தமுள்ள பயணத்தை..
விட்டுச் சென்ற பாதச் சுவடுகளின் மீது
முடிந்தவரை பயணிப்பேன்..!
நீ என்னோடில்லை என்பது..
"கனவாகி" பொய்க்காதா
என்று இப்போதும் விம்முகிறேன்..!
உன்னை இனி எங்கு காண்பேன்.. "அப்பா"..?!

பரந்த பால்வெளியில்..
எங்கு நீ இருந்தாலும்..
மகிழ்ச்சியும்.. சந்தோஷமும் பூத்து மலரட்டும்.!
அங்கும் அதன் "முதல் விதை"
உன்னுடையதாவே இருக்கும்..!
"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு"
என்ற.. வள்ளுவனின் குரலாய் வாழ்ந்து
பயணித்த உன்னை..
ஆறத் தழுவி முத்தமிடுகிறேன்..!
எப்பிறவி நான் எடுத்தாலும்..
என் "அப்பா" என்றும்..
நீ மட்டுமே..!
பொங்கி வழியும் கண்ணீரோடு...
உன் நினைவில்...
மகன்..!
-மாணிக்கம் விஜயபானு
டெக்சாஸ், ஆஸ்டின்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.