Published:Updated:

வெங்காயம் விற்கும் சிறுவனிடம் தோற்றுப்போனேன்..! -ஒரு தாயின் ஏக்கம் #MyVikatan

Representational Image
Representational Image ( Ben Dutton on Unsplash )

ஊரடங்கு காலம் என்பதால், அதிக நேரம் அங்கே செலவிட வேண்டாம் என நினைத்து, முன்புறம் இருந்த கடையில் காய்கறிகள் வாங்க ஆரம்பித்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

``அருண், நான் மார்க்கெட் போயிட்டு வரேன், வரும்போது உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரவா?''

இணைய வழி கற்றலில் headphone- ஐ காதில் மாட்டியபடி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்தவனுக்கு, நான் சொன்னது எதுவும் கேட்கவில்லை போலும். அவனிடம் பதில் ஏதும் இல்லாமல் போகவே, அதற்காகக் காத்திராமல் விரைந்து புறப்பட்டேன் .

Representational Image
Representational Image
Vikatan Team

வழக்கமாக மார்க்கெட் முழுவதும் ஒரு சுற்று சுற்றி வந்து, பல கடைகளில் விலைகளைக் கேட்டறிந்த பிறகே, காய்கறிகள் வாங்குவேன். ஆனால் ஊரடங்கு காலம் என்பதால், அதிக நேரம் அங்கே செலவிட வேண்டாம் என நினைத்து, முன்புறம் இருந்த கடையில் காய்கறிகள் வாங்க ஆரம்பித்தேன்.

``பெரிய வெங்காயம் 6 கிலோ, 100 ரூபாய்... தக்காளி 2கிலோ, 10 ரூபாய்.''

என ஒரு சிறுவனின் கணீர் குரல், என்னை மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பாலோரின் கவனத்தையும் ஈர்த்தது. வாங்கிய காய்கறிகளுக்குப் பணம் செலுத்தியவாறே அச்சிறுவனின் நடவடிக்கையை பிரமிப்புடன் கவனிக்க ஆரம்பித்தேன். அச்சிறுவனுக்கு ஒரு 13 வயது இருக்கலாம். 7 வயது போல மற்றோரு சிறுவன் உடன் இருந்தான்.

ஐந்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே சமயத்தில் அச்சிறுவர்கள் இருவரும் சமயோசிதமாக வியாபாரம் செய்தது என்னை பிரம்மிக்க வைத்தது. ஏற்கெனவே, தேவையான காய்கறிகள் வாங்கி இருந்தாலும், அச்சிறார்களுக்காக அவர்கள் கடைக்குச் சென்று,

``தம்பி, பெரிய வெங்காயம் 6 கிலோ குடுப்பா என்றேன்.'' அச்சிறுவனோ... அச்சச்சோ அக்கா, ஒரு 2 நிமிஷம் கடையைப் பார்த்துக்கங்க, பக்கத்துலதான் மூட்டை இருக்கு எடுத்துட்டு வரேன், இதவிட அந்த வெங்காயம் கொஞ்சம் நல்லா இருக்கும் என்று கெஞ்சலாகக் கேட்டான்...

Representational Image
Representational Image
Vikatan Team

நான் புன்னகைத்துக்கொண்டே, 'சரி' என்றவாறு தலையசைக்க, மூட்டையை எடுக்க வேகமாக ஓடினான். இதற்கிடையில் குட்டிச் சிறுவன், வந்த வாடிக்கையாளர்களிடம் வியாபாரம் செய்ய ஆரம்பித்தது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. 5 நிமிடத்திற்குள் ஒரு பெரிய மூட்டையை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வந்த பெரிய சிறுவனிடம், வெங்காயத்தைப் பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்திவிட்டு, மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்..

``தம்பி, நீங்களே வியாபாரம் பண்றீங்களே, உங்க அம்மா அப்பா எங்கே....?''

என்று கேட்டேன்.

``அக்கா,எங்களுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அவங்க அவங்க வேற ஏரியாவுக்கு வியாபாரம் பண்ண போயிட்டாங்க. கொரோனா வந்ததால, இப்போதைக்கு பள்ளிக்கூடம் திறக்கிற மாதிரி தெரியலங்க. அதனால வீட்ல சும்மா இருக்காம அம்மாவுக்கு உதவலாம்னு தினமும் ஒரு சந்தைக்கு வியாபாரம் பண்ணப் போறோம். அதனால எங்களுக்கு இரண்டு வருமானம் கிடைக்குது. அம்மா ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்காங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாடிக்கையாளர்கள் வர, அச்சிறுவன் வியாபாரத்தைத் தொடர ஆரம்பித்தான்.

Representational Image
Representational Image
Unsplash

இச்சின்னஞ்சிறு வயதிலேயே தம் தாயின் வலியைப் புரிந்து கொண்டு, அவளது சுமையைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் அந்த இரு சிறார்களை வாழ்த்துவதா? பள்ளி செல்லா இந்த ஊரடங்கு நாட்களில்கூட, தன் குழந்தைகளுக்கு இத்தகைய வாழ்வியல் திறன்களைக் கற்பித்த, படிக்காத பாமர ஏழைத்தாயைப் பாராட்டுவதா? எனப் புரியாமல், என் விழிகளின் ஓரம் கசிந்த ஈரத்தை விரல்களால் துடைத்தபடி அந்த இடத்திலிருந்து நகர முற்பட்டபோது, என் மகன் அருண் அலைபேசியில் அழைத்தான். அம்மா, எங்க போயிட்டீங்க? ரொம்ப பசிக்குது. வரும்போது பரோட்டாவும்,சிக்கன் 65-ம் வாங்கிட்டு வாங்க. பதில் ஏதும் பேசாமல் அழைப்பைத் துண்டித்தேன். ஏழைத்தாயிடம் தோற்றுப் போனவளாய்.

-நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு