Published:Updated:

`லாக்டெளனின் ஒரே ஆறுதல்..!' - வாசகி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சிலர் அதைப் பெருநோயாய்ப் பார்க்கின்றனர், சிலர் அதை அரசியலாய்ப் பார்க்கின்றனர். சிலர் அதை வர்த்தகமாகப் பார்க்கின்றனர் ...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இணையத்திலே எந்நேரமும் மூழ்கிக் கிடந்து அதில் கிடைக்கின்ற சின்னச் சின்ன துணுக்குகள் மூலமாக உலகத்தைப் பார்க்கின்ற இணையவாசிகள்தான் இன்றைக்கு ஏராளம். அப்படி இணையத்தில் கிடைத்த துணுக்குகளும் செவிவழிச் செய்திகளும்தான் இந்தக் கட்டுரைக்குத் தூண்டுகோலாகவும் இருந்தது.

COVID-19 வைரஸால் உலகமே ஸ்தம்பித்து நிற்கின்ற இந்தச் சூழ்நிலையில் இணையத்தில் எந்தச் சமூக வலைதளத்தைப் பார்த்தாலும் அதில் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்காக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அதிலிருந்து குணமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள், COVID-19 வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை வழிமுறைகள் மற்றும் தற்காத்துக்கொள்ள வேண்டிய செயல்முறைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகப் பேசப்படுகின்றன.

Representational Image
Representational Image

சிலர் அதைப் பெருநோயாய்ப் பார்க்கின்றனர், சிலர் அதை அரசியலாய்ப் பார்க்கின்றனர், சிலர் அதை வர்த்தகமாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், வருங்காலத்தில் வரும் பிரச்னைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள்களைப் பார்க்கின்றனர். இப்படி எல்லாரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளையும் பொதுவான விமர்சனங்களையும் பதிவிட்டு கருத்து மோதல்களுக்கு உள்ளாகும் திடலாகத்தான் இன்றைக்கு இணையமும் இருக்கிறது. ஆனாலும் எப்படியாவது இந்தக் கொரோனா வைரஸைக் கடந்து பழையபடி சகஜமானதொரு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோமோ? என்ற ஏக்கத்தோடுதான் நம்முடைய ஒவ்வொரு நாளும் நகர்கின்றது.

இதற்கிடையில் பெரும்பாலான நபர்களால் கவனிக்கப்படாத சில விஷயங்களும் இணையத்தில் வலம் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. அவை, `ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசு கட்டுக்குள் வந்துள்ளது', `காற்று மாசு குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பனிச்சிகரங்கள் காலைநேரத்தில் வெள்ளொளி வீசி ஒளிர்விடும் காட்சி தென்படுகிறது', `கங்கை ஆற்று நீரின் PH அளவு சமநிலையில் உள்ளதாகவும் குடிப்பதற்கு உகந்த நீராக மாறி வருவதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது' என்பன போன்ற செய்திகள்தான் அவை.

Representational Image
Representational Image

இந்தச் செய்திகளின் தன்மையை ஆராயும்முன் இதை எண்ணி சந்தோஷப்படுவதா இல்லை குற்ற உணர்ச்சியில் தலைகுனிவதா என்று தெரியவில்லை. ஏனெனில் இணையத்தில், சில மாதங்களுக்கு முன்புதான் காற்று மாசு காரணமாக தலைநகரில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருவதாக பல செய்திகள் வெளிவந்தன. இப்படிக் காலம்காலமாக மனிதனால் மாசுபடுத்தப்பட்டு வந்த இயற்கையும் இந்த ஊரடங்குக் காலத்தில் தன்னைச் சீர்செய்துகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளது.

`அரசால் செய்ய முடியாததை கொரோனா செய்தது!' -ஊரடங்கால் தூய்மையான தாமிரபரணி

இன்று தெருக்கள், ரோட்டோரங்கள், கடற்கரைகளில் கொட்டப்படும் குப்பைகள், கடல்களில் கலக்கும் கழிவுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலக்கும் மாசு போன்றவை வெகுவாகக் குறைந்துள்ளன. இதுபோன்று மனிதர்களால் இயற்கையைச் சீர்குலைக்கும் எத்தனையோ விளைவுகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மனிதனின் ஆடம்பரத் தேவைகளுக்காக அழிக்கப்பட்ட மாசுபடுத்தப்பட்ட இயற்கையின் அத்தியாவசியங்கள் ஒவ்வொன்றையும் இன்று இயற்கை மெல்ல மெல்ல மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது.

Representational Image
Representational Image

பெருநோய் ஒன்றின் இடையூற்றால் இன்று மனிதன் தன் அன்றாட வாழ்க்கையை இழந்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே திக்குமுக்காடி நிற்பதைப் போலத்தான் மனிதனின் இடையூற்றால் இயற்கையும் தன் அத்தியாவசியங்களை இழந்து பல நூறு ஆண்டுகளாக என்று மீள்வோமோ? என்று தவித்து வருகிறது. உருவாகும் அடிப்படைத் தேவைகளின் பின் நில்லாமல் தேவைகளை உருவாக்கும் ஆடம்பரத்தின் பின் மனிதன் சென்றதன் விளைவிது. "என்று மீள்வோமோ?" என்ற ஏக்கத்திற்குப் பின்னால் துளிர்க்கும் தவிப்பும் வலியும் இன்று மனிதனால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். புரிதலில் தெளியும் ஞானமே மனிதனுக்கே உரிய ஆறாம் அறிவாம்.... புரிதலால் தெளிவோம் இனியேனும் இயற்கைக்கு அரண்களாக வள்ளுவரின் வாக்கிற்கேற்ப,

மறந்தும் பிறங்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

-ஐஸ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு