Published:Updated:

லாக்டெளனில் சோலோ ஹீரோவான தபால்துறை! #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஊரடங்கு அமலில் உள்ள நாள்களில் 100 டன்னுக்கு அதிகமான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், சோதனைக் கருவிகள் போன்றவற்றை மருத்துவமனைகளுக்கும் பயனாளர்களுக்கும் விமானம், வாகனம் மூலம் தபால்துறை விநியோகித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

"ஒருநாள் போவார், ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்!

அரைஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்" என மீனவ மக்களின் வாழ்வியலை வரிகளாய்த் தந்திருப்பார் வாலி.

இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் சேவையாற்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் இவ்வரிகள் பொருந்தும்.

Representational Image
Representational Image
Pixabay

லாக்டெளன் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை விடுப்பு இல்லாமல் மக்கள் பணிசெய்து வரும் துறைகளில் தபால்துறையும் ஒன்று. மக்களுக்குத் தேவையான மாஸ்க், சானிட்டைசர், மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றை அதிகளவில் பரிமாற்றம் செய்து சாதனை படைத்திருக்கிறது இந்திய தபால்துறை. ஆன்லைன் வர்த்தகம் இல்லாத நிலையால் பெரும்பாலான மக்கள் தபால் சேவையையே நாடுகின்றனர். விரைவு தபால், பார்சல், மணி ஆர்டர் என அனைத்தையும் தேக்கமின்றி விநியோகித்துள்ளனர் தபால்துறையினர். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமான பென்ஷன் பணமும் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.

உங்கள் வங்கி உங்கள் வீட்டு வாசலில்...

தபால்துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வங்கிச் சேவையைத் தொடங்கியது. India Post Payments Bank என்பதே அந்தச் சேவை. இது ஊரடங்குக் காலத்தில் மக்களுக்கு உபயோகம் உள்ளதாய் இருந்தது.

அமைப்பு சாரா நலவாரியத் தொழிலாளர்கள் பணமின்றி (zero balance) கணக்கு ஆரம்பிக்கக் காரணமாக இருந்ததும், அதன் மூலம் மத்திய அரசு வழங்கும் 2,000 ரூபாயைப் பெற்றுத் தந்தும் அளப்பரிய பணி. இவர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலுள்ள பணத்தையும் தபால்காரர்கள் மூலம் வீட்டிலிருந்தே பெறலாம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் அவர்கள் சிரமப்பட்டால், தபால்துறை உதவி மைய எண்ணைத் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டுக்கே சென்று பணத்தைக் கொடுக்கின்றனர் ஊழியர்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

Aadhar Enabled Payment System மூலம் வீடுதேடி பணம் பெறும் வசதி, தபால்துறை செயல்படுத்தும் மற்றொரு சிறப்பம்சம். உதாரணத்துக்கு, எனது வங்கிக் கணக்கு ஒரு பொதுத்துறை வங்கியில் இருந்ததெனில் அக்கணக்குடன் என் ஆதார் என் மற்றும் செல்பேசி எண்ணை இணைத்திருந்தால், ஆதார் மூலம் தபால்காரரின் டிவைஸில் கைரேகை வைத்தால், தபால்காரரின் செயலிக்கு ஒரு ஓடிடி எண் வரும். அதன் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம். இதில் 500 முதல் 10,000 வரை பெற முடியும். இது முதியவர்கள், ஊரடங்கில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அவசியத் தேவைக்கு தபால் நிலையம் செல்ல முடியாதவர்களுக்கு வீடு தேடி வந்து சேவை வழங்குகின்றனர். இவை தவிர புதிதாய் ஆதார் எடுக்க மற்றும் அப்டேட் செய்ய தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.

கடிதத்தின் பயணம்!

ஒரு தபாலுக்கு உயிர்கொடுக்கும் ஐ.சி.யூ வார்டுபோல் செயல்படுபவை Railway mail service எனும் ஆர்.எம்.எஸ்களே. 24 மணிநேரமும் இயங்கும். அலுவலர்கள் ஷிஃப்ட் முறையில் வேலைசெய்வர். உள்ளூர் தபால்கள் மெயில்வேன் அல்லது பேருந்து மூலமும், வெளியூர் தபால்கள் ரயில் மூலமும் விடிவதற்குள் ஆர்.எம்.எஸ்ஸை அடைந்துவிடும். சாதா தபால் தவிர்த்து பதிவுத்தபால், விரைவுத் தபால், பார்சல் என மூன்றையும் கணினியில் ஏற்றி ஊர்வாரியாக பேக் செய்து மெயில்வேனில் அதிகாலையில் அனுப்புவார்கள். தமிழகத்தில் விரைவுத் தபாலுக்கு ET, பதிவுத் தபாலுக்கு RT, பார்சலுக்கு CT எனக் குறிப்பிட்டு, அடுத்து 9 இலக்க எண்களும், முடிவில் இந்தியா எனில் IN எனவும் இருக்கும். மொத்தம் 13 இலக்கம் இருக்கும்.

Representational Image
Representational Image
Vikatan Team

உதாரணத்துக்கு ஒரு விரைவுத் தபால் அனுப்பினால் 'ET000000000IN' என 13 இலக்கம் இருக்கும். இதனை வைத்து தபால் எங்குள்ளது என TRACK செய்யும் வசதி உண்டு.

அடுத்த கட்டமாக துணை அஞ்சலகம் காலை 8 மணிக்கு இயங்க ஆரம்பித்துவிடும். ஆர்.எம்.எஸ்ஸிலிருந்து வரும் தபால்களை கணினியில் ஏற்றி தபால்காரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். அவர்கள் காலை 9.30 மணிக்கெல்லாம் ஏரியாவுக்குக் கிளம்பி விடுவார்கள். 100 தபால்களை எடுத்துச் சென்றால் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும். ஆட்கள் ஊரில் இல்லையெனில் அதன் காரணத்தை மீண்டும் கணினியில் குறிப்பிட வேண்டும்.

இந்த ஊரடங்கில் உண்மையான களப்போராளிகளாகச் செயல்படுவோர் தபால்காரர்களே.

ஊரடங்குக் காலத்திலும் விடுப்பின்றி, ஓய்வின்றி, சானிட்டைசர் ஒன்றே துணையென நம்பி தினமும் அனைத்து ஏரியாக்களுக்கும் செல்கின்றனர். கோவிட்-19 வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஏரியாக்களில், தபால்காரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் அதிகமாக இருக்கும்.

கிராமப்புற தபால் ஊழியர்களின் பணி, இன்னும் பாராட்டுக்குரியது. மலை கிராமங்களிலும், உள்ளடைந்த பகுதிகளிலும் தங்களது சேவையைச் செவ்வனே செய்துவருகிறார்கள்.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வெளியூர்களுக்கு ஆயத்த ஆடை மாதிரி (sample) துணி அனுப்புவது, பார்சல் மற்றும் தபால்கள் அதிகம் கொண்டு செல்வது எனப் பணிப்பளு அதிகம். அத்தனையையும் முகச்சுழிப்பின்றி கொடுத்து வருகின்றனர். இவர்கள் இன்னும் சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டுதான் சேவை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image
Vikatan Team

சோலோ ஹீரோவான தபால்துறை

* நாடு முழுவதும் ஊரடங்குக் காலத்தில் தனியார் கூரியர் நிறுவனங்கள் டெலிவரி சர்வீஸ்களை கைவிரித்துவிட, தபால் துறை ஒன்றே பம்பரம்போல் செயல்பட்டு வருகிறது.

* ஊரடங்கு அமலில் உள்ள நாள்களில் 100 டன்னுக்கு அதிகமான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், சோதனைக் கருவிகள் போன்றவற்றை மருத்துவமனைகளுக்கும், பயனாளர்களுக்கும் விமானம், வாகனம் மூலம் தபால்துறை விநியோகித்துள்ளது.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) வழங்கும் கோவிட்-19 கிட்களை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு, தினசரி RMS மூலம் கொண்டு சேர்க்கிறது.

* ரயில்கள் இயங்காத காலகட்டத்தில்கூட மெயில் வேன்கள் மூலம் தினசரி தபால்களை திறம்பட டெலிவரி செய்து வருகிறது.

* தெலங்கானாவில் பெரும்பாலான மக்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் கிடைக்க உதவியுள்ளது.

* கர்நாடகாவில், சுமார் 70 லட்சம் முதியவர்கள் மற்றும் கணவரை இழந்தவர்கள், ஊரடங்குக் காலத்தில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பண ஆணைகள் மூலம் தங்கள் வீடுகளிலேயே ஓய்வூதியத்தைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* குஜராத்தில், கங்கா ஸ்வரூப் யோஜனாவின் (கணவரை இழந்தவர்களுக்கான நிதி உதவி) நான்கு லட்சம் பயனாளிகளுக்குப் பல கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

* நாடு முழுவதும் 17.7 லட்சம் பரிவர்த்தனைகள் போட்ஸ்டல் பேங்க் ஏடிஎம்களின் மூலம் நடந்தன.

* மும்பை மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் 105 டன் அல்போன்சோ மாம்பழங்களை விநியோயிக்க, ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் விவசாயிகளுக்கு இந்தியா போஸ்ட் கிசான் ராத் சேவை உதவியது.

Representational Image
Representational Image
Vikatan Team

மக்கள் ஊழியர்கள்

சென்னை பெருவெள்ளத்தின்போது பேருந்துகள் இயங்கியதைப்போல், இப்பேரிடர் காலத்திலும் தபால்துறையினர் விடுமுறை இன்றி இயங்கி வருகின்றனர். தொற்று ஏற்பட்டாலும் ஓர் ஊழியருக்கு மாற்றாக அடுத்த ஊழியர் களமிறங்கித் தொடர்ந்து இயங்குகிறார்கள். பேருந்து இயங்காத போதிலும் தினசரி 100 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று வரும் ஊழியர்களையும் அறிவேன்.

Direction is more important than speed என்பார்கள். வேகத்தைவிட திசை முக்கியமானது.

நாடு முழுவதும் 1,50,000 அஞ்சலகங்கள் மக்கள் பணியாற்றி வருகின்றன. நாள்தோறும் 2,00,000 மதிப்பிலான பணப்பலன்களை மக்களுக்கு அளிக்கின்றனர்.

உலகளாவிய ஆன்லைன் நிறுவனங்கள் லாபமின்றி செயல்பட விரும்பாதபோதும், தபால்துறை லாபம் குறித்து கவலை கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் துணிந்து செயல்படுகிறது. 'மக்கள் எங்களைத் தேடும்போது நாங்கள் பழைய காலத்தை உணர்கிறோம்' என்று தபால்காரர்கள் தெரிவிக்கின்றனர். தபால்கள் அல்லாத இன்ஷூரன்ஸ், தங்கப்பத்திரம் விற்பது எனக் காலத்திற்கேற்ப தங்கள் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Representational Image
Representational Image
Vikatan Team

Direction is more important than speed என்பார்கள். வேகத்தைவிட திசை முக்கியமானது. நீங்கள் தவறான வழியில் சென்றால் எத்துணை விரைவாகச் சென்றாலும் வீண். இக்கட்டான காலகட்டத்திலும் 'நாங்கள் இருக்கிறோம்' எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் தபால்துறை, சரியான திசையில் செல்கிறது.

ஊரடங்கிலும் சேவையுடன் செயல்படுவோர்க்கு ஒரு சல்யூட்!

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு