Published:Updated:

`அன்று நோயாளி.. இன்று சேவகன்..!'- குணப்படுத்திய காப்பகத்தை மறக்காத கன்னியாகுமரி பிரேம்சந்த்

மும்பை சென்று மொபைல் கடை போன்றவற்றில் வேலை செய்தேன். இருந்தாலும் என் நினைவெல்லாம் மனநல காப்பகத்தில் என்னுடன் இருந்தவர்களையே சுற்றிவந்தது.

சவரம் செய்யும் பிரேம்சந்த்
சவரம் செய்யும் பிரேம்சந்த்

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றிவருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து லாரி டிரைவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை இங்கு அனுப்பிவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாது ரயில்களிலும் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள். அப்படி கன்னியாகுமரி வந்து சேர்ந்தவர்தான் பிரேம்சந்த்.

மும்பையைச் சேர்ந்த பிரேம்சந்த் மனநலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி ஆட்டோ ஸ்டாண்டில் அழுக்குத் துணியுடனும், பரட்டை தலையுடனும் சுற்றிவந்தார். கன்னியாகுமரியை அடுத்துள்ள மனோலயா காப்பகம் சார்பில் தெருவில் சுற்றித்திருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடந்தது. அப்படி 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மீட்கப்பட்டார் பிரேம்சந்த்.

மனநல காப்பக நிர்வாகி மணிகண்டனுடன் பிரேம்சந்த்
மனநல காப்பக நிர்வாகி மணிகண்டனுடன் பிரேம்சந்த்

பின்னர் அவருக்கு சரியானதால் சொந்த ஊரான மும்பைக்குச் சென்றார். அங்கு செல்போன் கடை போன்றவற்றில் பணிபுரிந்தார். அந்த வேலைகளில் மனம் ஒன்றாமல் மீண்டும் அச்சம்குளத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு வந்துவிட்டார்.

இப்போது அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலையில் யோகா சொல்லிக்கொடுப்பது, அவர்களை குளிப்பாட்டுவது, முடிவெட்டுவது, முகச்சவரம் செய்து கொடுப்பது, கை, கால்களில் நகங்களை சுத்தப்படுத்துவது, அவர்களுக்கு உணவு கொடுப்பது என அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்கிறார்.

இதுகுறித்து மனோலயா காப்பக நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், "சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு கொடுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார் பிரேம் சந்த். நாங்கள் அவரை மீட்கப்போகும்போது ஒரு ஆட்டோவில் இருந்து மற்றொரு ஆட்டோவுக்கு தாவிச்செல்வது போல மோசமான நிலையில் இருட்னஹார். அவரை மீட்டுக்கொண்டுவந்த ஆறு மாதத்திலேயே ஓரளவிற்கு குணமடைந்தவர், வீட்டு முகவரி, பெற்றோரின் பெயர்களை கூறினார்.

அந்த முகவரியில் விசாரித்தபோது அவரது அண்ணன் ஒருவர் மஹாராஷ்டிரா ஐகோர்ட்டில் நோட்டரி பப்ளிக்காக இருப்பது தெரியவந்தது. பிரேம் சந்த் முழுமையாக குணமடைந்துவிட்டார் என நாங்கள் கூறியும் அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். பின்னர் இங்கு நேரில் வந்து பார்த்துவிட்டு அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு மாதத்திற்கு பிறகு ஒருநாள் காலையில் மனோலயா காப்பகத்திற்கு வெளியே பேக்கும் கையுமாக வந்துநின்றார் பிரேம்சந்த்.

சவரம் செய்யும் பிரேம்சந்த்
சவரம் செய்யும் பிரேம்சந்த்

என்ன விஷயம் என்று நான் விசாரித்ததற்கு நான் இங்கேயே சேவை செய்ய விரும்புகிறேன் என்றார். நான் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தேன். அவனது விருப்பப்படியே செய்யட்டும் என்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காப்பகத்தில் சேவை செய்து வருகிறார். 28 வயதான பிரேம்சந்தின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவருக்கு சிறிய அளவில் ஊதியம் கொடுக்கிறோம். அடிக்கடி அவர் மும்பை சென்று பெற்றோரை பார்த்துவிட்டு வருகிறார்" என்றார்.

இதுகுறித்து பிரேம் சந்த் கூறுகையில், "எனக்கு நினைவு திரும்பி பெற்றோருடன் செல்லும்போது, நான் முன்பு என்ன நிலையில் இருந்தேனோ அந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஊரில் சென்று மொபைல் கடை போன்றவற்றில் வேலை செய்தேன்.

இருந்தாலும் என் நினைவெல்லாம் மனநல காப்பகத்தில் என்னுடன் இருந்தவர்களையே சுற்றிவந்தது. ஒருகட்டத்தில் மும்பையில் இருந்து கிளம்பி கன்னியாகுமரிக்கு வந்துவிட்டேன். நர்சிங் பீல்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன். அப்போதுதான் அவரும் என்னுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய முடியும்" என சிரிக்கிறார்.