Published:Updated:

``என்னைக் காப்பாத்துனு அந்தப் பெரியவர் கால்ல விழுந்தார்!" கைவிடப்பட்டவர்களைக் காக்கும் ராமகிருஷ்ணன்

"சொந்தக்காரங்களுக்கு செய்தி சொல்வேன். 'நீங்களே பாத்துப் பண்ணிவிடுங்க சார், காசு மட்டும் தந்துடுறேன்'னு சொல்லுவாங்க. அப்புறம் காசும் கொடுக்க மாட்டாங்க."

முதியவர்களுடன் ராமகிருஷ்ணன்
முதியவர்களுடன் ராமகிருஷ்ணன் ( சுபாஷ் ம.நா )

அன்பும் அரவணைப்பும்தான் முதுமைக் காலத்தில் எல்லா மனிதருக்குமான மாமருந்து. உடனிருந்து கதைக்கவும் கரம் பற்றவும் முதுமை மனம் வேண்டுவது நேசக் கரங்கள் மட்டும்தான். கைத்தடி தேவைப்படும் அந்திமக் காலத்தில், முதியவர்கள் பிள்ளைகளாலேயே கைவிடப்படுவது சம்பிரதாய நிகழ்வாகவே மாறிப்போனது. ஆதரவற்று தனிமையில், வாழ்பவர்களுக்கு ஆதவுக்கரம் நீட்டும் நல்லவர்களும் இம்மண்ணில் இருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் அப்படியானவர்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்
சுபாஷ் ம.நா

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில், முத்தம்பாளையம் அருகே, தகரத்தால் அமைந்திருந்தது ராமகிருஷ்ணனின் வீடு.   வீட்டுக்குள் நுழைகையில், வணக்கம் சொல்லி வரவேற்றவருக்கு பாதி கை இல்லை. வந்தவரை யாரென்று கேட்டார், கண் பார்வையில்லாத ஒருவர்.  

"பொறந்தநாள் எதுவும் கொண்டாட வந்துருக்காங்களா?" என்றார் மற்றொருவர். இருக்குமென்றார்கள் அவர்கள். தன் மகன்களையும் பேரன் பேத்திகளையும் மறந்து, அவ்வப்போது வரும்  விருந்தினர்களைத் தம் குடும்பத்தினராக ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள். 24 மணி நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ரேடியோவும் ராமகிருஷ்ணனும் மட்டும்தான் அவர்களின் மீட்பர்கள். அவர்களுடன் உரையாடினோம். 

"ஒரு விபத்துல பாதி கையை இழந்துட்டாரு. என் கடையில வச்சு அவரைப் பார்த்துக்கிட்டேன். கடையைக் காலி செஞ்சப்புறம், அவர் ஒருவருக்காக மட்டும் இந்த  வீட்டை வாடகைக்கு எடுத்து அவரைத் தங்கவச்சேன். தினமும் மூணு வேளையும் நானே சாப்பாடைக் கொண்டுவந்து கொடுத்திருவேன். இப்போ, இந்த வீட்டுல 15 பேர் இருக்காங்க. அவங்களுக்கான காலை சாப்பாடு, 365 நாளும் பாபா கோயில்ல இருந்து வரும். ரேஷன் அரிசியை பலர் பயன்படுத்த மாட்டாங்க. அவங்ககிட்ட இருந்து அரிசி வாங்கி, என் வீட்டுல சமைச்சு, மதியம் மற்றும் இரவு வேளைக்குக் கொடுத்திருவேன். நான் நடத்துற ஹோட்டல்ல உணவு மிச்சமானா, இவர்களுக்குக் கொண்டுவந்து கொடுப்பேன். ஒரு சின்ன ஹோட்டல் நடத்துறேன். எனக்குக் கொஞ்சம் மேஜிக்கும் தெரியும். என் குடும்பத்தையும் இவங்களையும் அதை வெச்சுதான் பாத்துக்குறேன். 

ராமகிருஷ்ணனின் பராமரிப்பில் உள்ள முதியவர்
ராமகிருஷ்ணனின் பராமரிப்பில் உள்ள முதியவர்
சுபாஷ் ம.நா

இந்த இல்லத்துக்கு, 'நெறி ஃபவுண்டேஷன்'கிற பேர்ல அரசாங்கத்தில் பதிவு செஞ்சிருக்கேன். கல்யாணம், விசேஷ வீடுகள்ல மீதியாகிற சாப்பாட்டை மண்டபத்துல சொல்லி வாங்குறதுக்காகத்தான், இதைப் பதிவு செஞ்சிருக்கேன். பார்வை தெரியாதவங்க 150 பேருக்கு, பினாயில், சோப்பாயில் எப்படித் தயாரிக்கணும்னு சொல்லிக்கொடுத்து, நானே அதற்கான முன்பணம் கொடுத்து, தொழில்ஆரம்பிச்சுவிட்டேன். சிலர், அவங்களோட பிறந்தநாளை இங்கு வந்து கொண்டாடுவாங்க. இந்த ஃபவுண்டேஷன் கார்டு பார்த்து பலரும் அவர்களுடைய பெற்றோர்களை இங்க சேர்க்க முயல்வாங்க. முடிந்தவரை நான் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்.  

15 பேர் இங்க இருந்தாங்க. இப்போ, 8 பேர்தான் இருக்காங்க. மத்தவங்கள்லாம் வயசாகி இறந்துட்டாங்க. அவங்களோட சொந்தக்காரங்களுக்கு செய்தி சொன்னேன். 'நீங்களே பாத்துப் பண்ணிடுங்க சார், காசு மட்டும் தந்துடுறேன்'னு சொல்லுவாங்க. அப்புறம் காசும் கொடுக்க மாட்டாங்க. கடைசியா வந்து பாக்கவும் மாட்டாங்க. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும். சாகும்போது, அவங்க என்னென்ன நெனச்சுருப்பாங்கன்னு யோசிச்சாலே வேதனையா இருக்கும்.

ராமகிருஷ்ணனின் பராமரிப்பில் உள்ள முதியவர்
ராமகிருஷ்ணனின் பராமரிப்பில் உள்ள முதியவர்
சுபாஷ் ம.நா

9 வருஷமா இந்த ஃபவுண்டேஷனை நடத்திட்டு இருக்கேன். என் நெஞ்சை உலுக்கின  ஒரு சம்பவத்தை மட்டும் என்னால மறக்கவே முடியாது. எனக்குத் தெரிஞ்சவர்  ஒருத்தர், 'பாய்'னு ஒரு பெரியவரை இங்க வந்து சேர்த்தார். அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவரு சரியா சாப்பிட மாட்டாரு, ஆனா, நான் சொன்னா சாப்பிடுவாரு. யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டாரு. நான் வந்தவுடனே என்கிட்ட நிறைய பேசுவாரு.

திடீர்னு ஒருநாள், அவருக்கு வலிப்பு வந்துருச்சு. அப்போ, என் கால் ரெண்டையும் அவரோட ரெண்டு கையால இறுக்கி பிடிச்சுக்கிட்டு, 'என்னைக் காப்பாத்து... என்னைக் காப்பத்து'னு கதறி அழுதார். அவரோட கண்ணுலையும் என்னோட கண்ணுலையும் கண்ணீர் வருது. எனக்கு பேச வாய் வரவே இல்ல. அவரோட உயிர் என் கண்ணு முன்னாடியே போயிடுச்சு. அந்த ஒரு சம்பவம் இப்போ நெனச்சாலும் மனசு கஷ்டமாயிருக்கும்.

Vikatan

அதுக்கப்புறம், இவங்க உயிரோட இருக்கவரைக்கும் அவங்களை நோய்நொடி இல்லாம பாத்துக்கணும்கிற எண்ணம் அதிகமாச்சு. என் பசங்களுக்கு அர்ஜுனன், கர்ணன்னு பேரு வச்சிருக்கேன். அவங்களும் மக்களுக்கு உதவி பண்ணணும், நல்லது நெனைக்கணும். கண்டிப்பா என் பசங்க இதைச் செய்வாங்கன்னு நம்புறேன்" என, அருகிலிருந்த பெரியவரின் கைகளை இறுகப் பற்றியபடி கூறினார் ராமகிருஷ்ணன்.