Published:Updated:

காலத்தின் இருண்ட பக்கங்களைப் புதுப்பிக்கும் DARK வெப் சீரிஸ்! -வாசகர் பார்வை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

'கயாஸ் தியரி' போன்று கதையில் ஒருவகை அறிவியல் தியரி கையாளப்பட்டுள்ளது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'DARK' என்னும் புகழ்பெற்ற ஜெர்மன் வெப் சீரிஸ் குறித்த எனது பார்வை:

உலக ரசிகர்களின் மனங்கவர்ந்த ஒரு வெப் சீரிஸ் DARK. 'டைம் டிராவல்' என்பது மனிதர்களுக்கு என்றுமே ரசனையூட்டும் ஒன்றுதான். இந்த 'காலப்பயணத்தை' மிகவும் லாகவமாகக் கையாண்டு வெற்றி கண்டுள்ளது, இந்த ஜெர்மன் வெப் சீரிஸ்!

டார்க்கின் கதை:

ஜெர்மனியின் விண்டன் என்னும் கற்பனையான ஒரு நகரத்திலிருந்து குழந்தைகள் திடீரென மாயமாகத் தொடங்குகின்றனர். அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகள் காணாமல்போவது விண்டன் காவல்துறைக்கு மிகப் பெரும் தலைவலியாக மாறுகிறது.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

விண்டன் நகரத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் அடியிலிருக்கும் ஒரு குகை, அனைத்து மர்மங்களுக்கும் காரணமாக இருக்கிறது. அந்தக் குகையில் உண்டாகும் ஒருவகை Wormhole சுரங்கப்பாதை காரணமாக, அந்த சுரங்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் மனிதர்கள் நுழையும்போது, அவர்கள் வெவ்வேறு காலங்களுக்கு 33 ஆண்டுகால டைம் டிராவல் மேற்கொள்ள முடிகிறது.

'கயாஸ் தியரி' போன்று கதையில் ஒரு வகை அறிவியல் தியரி கையாளப்பட்டுள்ளது. சந்திரனும் சூரியனும் திரும்ப பழைய நிலைக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் வரக்கூடிய "33 ஆண்டுகள் தியரி" அது. 33-ன் சிறப்புகள் அறிவியல் மற்றும் ஆன்மிகரீதியில் விளக்கப்படுகின்றன. 33 ஆண்டுகள் எனும் ஒரு கால வரையறைக்கு உட்பட்டு, 2019-ம் ஆண்டில் வாழக்கூடிய கதாபாத்திரங்கள், 1986 மற்றும் 1953 ஆகிய ஆண்டுகளுக்குச் சென்றுவருகின்றனர்.

குழப்பமான கனவுகளால் மனச்சிதைவிற்கு உள்ளாகியிருக்கும் ஜோனாஸ், கதையின் நாயகன்.

நிகழ்காலத்தில் தன்னுடன் இருந்த சிறுவன்தான், கடந்த காலத்தில் வாழ்ந்த தன்னுடைய தந்தை என அறிந்து என்ன செய்வது என புரியாமல் விழிக்கிறான் நாயகன்!

அந்தச் சிறுவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தால், நாயகனின் அடையாளங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

அதேநேரம், தன் தந்தையின் இறந்த காலத் தற்கொலையையும் தடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் நாயகன் மேற்கொள்ளக் கூடிய செயல்களும், சிறுவர்கள் தொலைந்துபோவதற்கான காரணங்களுமே சுவாரஸ்யமூட்டும் கதை.

முதல் சீசனின் முடிவில், கதாநாயகன் ஜோனாஸ் எதிர்காலத்தில் மாட்டிக்கொள்கிறான். ஜோனாஸை எதிர்காலத்தில் தள்ளிவிட்டு கடந்த காலங்களில் பதிலளிக்கப்படாத டஜன் கணக்கான கேள்விகளுடன் கதை முடிகிறது.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

இதில் 'நோவா' என்பது காலப்பயணத்தை கட்டுப்படுத்த முற்படும் ஒரு கதாபாத்திரம். நோவா என்னும் பெயருடைய பாதிரியார், பல காலங்களுக்கு இடையில் எளிதாக நகரும் திறன் காரணமாக அழியாதவராக இருக்கிறார். அவர் ஒரு பாதிரியாராக வாழ்கிறார். ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை!

நோவாவும், 2019ல் இருந்து 1953-க்கு காலப்பயணம் சென்ற உல்ரிக்கால் கொல்லப்பட்ட ஹெல்ஜும் சேர்ந்து குகையின் வார்ம்ஹோல் போர்ட்டல் வழியாக இளம் சிறுவர்களைக் கடத்தி, மூன்று காலங்களிலும் அவர்களுடைய டைம் டிராவல்/டெலிபோர்டேஷன் இயந்திரத்தை சோதனை செய்கின்றனர்.

ஆனால், இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் சிறுவர்களின் கண்களை எரித்து, அவர்களின் காதுகளையும் வெடிக்கச் செய்துவிடுகிறது.

நான்கு குடும்பங்கள், மூன்று காலங்கள், நான்கு தலைமுறைகள் என இந்தக் கதை விரிகிறது. நான்கு குடும்பங்கள் இடையே உள்ள தொடர்பு, மூன்று காலங்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, நான்கு தலைமுறைகளுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு ஆகியவை கதையோட்டத்தை சலிப்பின்றி நகர்த்துகின்றன.

முதல் சீசன் முடிவடைந்த பல மாதங்களுக்குப் பிறகு முறையே, 2020, 1987 மற்றும் 1954-ம் ஆண்டுகளில் காணாமல் போன அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான குடும்பங்களின் முயற்சிகளை இரண்டாவது சீசன் தொடர்கிறது. 2053 மற்றும் 1921-ம் ஆண்டுகளுக்கும் கதை செல்கிறது.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

நாயகியாக Lisa Vicari (Martha Nielsen) மற்றும் நாயகனாக Louis Hofmann (Jonas Kahnwald) ஆகியோர் இருந்தாலும், இக்கதையில் நடித்துள்ள அனைவருமே கதையின் நாயகர்களாகவே தெரிகின்றனர்.

Baran bo Odar இயக்கத்தில் 2 சீசன்களில் 18 எபிசோடுகளில் உள்ள இந்த வெப்சீரிஸ் Netflix ல் கிடைக்கிறது. விரைவில் மூன்றாவது சீசன் வரவுள்ளது.

டார்க்கின் வெளிச்சங்கள்:

# விண்டன் குகையின் ரகசியங்கள் திடீரென்று கடைசி எபிசோடில் வந்து குவிவது இல்லை. ஒவ்வொரு ரகசியமும் படிப்படியாக விரிவது ரசிகர்களுக்கு ஒருவித பரபரப்பை உண்டாக்குகிறது.

# 33 வருட கால இடைவெளியின் இடையே உள்ள தொடர்பு குறித்த மெய்மைகள் நம்முடைய சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன.

# வில்லன் கதாபாத்திரத்திரம் Good, Neutral மற்றும் Evil இடையே பயணிக்கிறது.

தன்னிடமிருந்து உலகத்தை காப்பாற்றவே காலப்பயணம் என்பதும், காலம் குறித்த தனது கற்பிதங்களை மெய்ப்பிக்க நோவா போராடுவதும் அந்தந்த நேரத்து நியாயங்களாக இருக்கின்றன.

#படைப்பாளியை மட்டுமல்ல, ரசிகனையும் புத்திசாலியாகக் கருதி ஒரு சில கருத்துகள் பூடகமாகவே கூறப்படுவது சிறப்பு.

#ஒவ்வொருவருக்கும் தனியுரிமை இருக்கிறது என்பதுடன், குடும்பத்தினரின் இருண்ட பக்கங்களை மற்ற குடும்ப உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்ற உண்மையை முன்வைக்கிறது டார்க்.

#கதையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடையில் நிறுத்திவிட்டு, அதில் வந்த சில கருத்துகளைப் பற்றி அவ்வப்போது நம்மை சிந்திக்கவைக்கிறது.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

# ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோரின் இயற்பியல் தியரிகளை விளக்கும் அற்புதமான வசன வரிகள் இடையிடையே வருகின்றன. ஒரு சில நிமிடங்கள் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் சிறந்த வசனங்களை நாம் தவறவிட்டுவிடுவோம்.

# மூன்று காலங்களுக்கிடையேயான தொடர்பு சிறப்பாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. மூன்று காலங்களுக்கும் ஒரே மாதிரி முக அமைப்புடைய நடிகர்கள் தேர்வு சிறப்பு.

# இரவு பகல் முதற்கொண்டு எதையுமே இரண்டாகவே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, அனைத்தும் மூன்று என வகுப்பு எடுக்கிறது டார்க். மேலே மற்றும் கீழே ஆகியவற்றிற்கு இடையில் 'நடுவே' எனும் ஒன்று உள்ளதை விளக்கி, காலப்பயணம் என்பதை புதுமையாக முறையில் கையாண்டுள்ளது டார்க்.

# நம்முடைய ஐபோனை வேறொரு காலத்தில், அறியாத ஒருவரிடம் தவற விடும்போது ஏற்படும் பாதிப்புகள் மிகப் புதுமையாக விளக்கப்பட்டுள்ளன.

# ஒவ்வொரு குடும்பத்தின் ரகசியங்களும் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்போது கதையின் சுவை கூடுகிறது.

# கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பது நம்மை எரிச்சல் ஊட்டுவதில்லை என்பது வசனங்களின் வெற்றி.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

# மூன்று காலங்களுக்கான அர்ப்பணிப்புடன்கூடிய இசை, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, மேம்பட்ட இயக்கத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் Baran bo Odar.

# நான்கு தலைமுறை குடும்பங்களாக வரும் ஜெர்மன் நடிகர்களின் நடிப்பு சுவையூட்டுகிறது. மூன்று காலங்களுக்கு இடையே நோவாவின் ஆட்டமும்,

நாயகனின் திண்டாட்டமும் ரசிகர்களின் ரசிப்புத் தன்மையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

டார்க்கின் இருட்டுகள்:

# செர்னோபில் அணுசக்தி பேரழிவு முதல் எமரால்டு டேப்லெட் வரை நிறைய விஷயங்கள் தெரிந்தால் மட்டுமே கதையை முழுமையாக ரசிக்க முடியும்!

# டார்க் விவரங்களை நமக்கு கரண்டியால் ஊட்டும் கதை இல்லை. ரசிகர்கள் தொடர்ந்து யூகித்து அறியக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கிறது.

மேலும், டார்க் கதையில் கிரேக்க புராணங்கள், ஜெர்மன் விசித்திரக் கதைகள், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய பல முடிச்சுகள் நிறைந்துள்ளதால், பலருக்கும் புரிதலில் சிக்கல் ஏற்படும்.

# ஜெர்மன் வசனங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வசன வரிகள் டப்பிங் குரல்களைவிட வித்தியாசமான வேறு ஒன்றைக் கூறுகின்றன. உதாரணமாக, Obviously என Subtitle-ல் வரும் சொல் Of course என டப்பிங்கில் வருகிறது. இரண்டும் ஒன்றுதான் என்றாலும், வசனங்கள் நிகழ்ச்சியின் தடயங்களை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகிறதோ என்று ஆச்சர்யமாக இருக்கிறது. எனவே, வசன வரிகள் மூலம் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது சில அனுபவங்களைத் தவறவிட நேரும்.

# டார்க் போன்ற ஒரு அறிவியல் புனைகதையில் எலான் மஸ்க்கின் Space X நிறுவனம் போன்று சில அழகான, ஆடம்பரமான தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும் என்று நாம் நினைப்போம்.

ஆனால் ஒரு குகை, ஒரு பதுங்கு குழி மற்றும் ஒரு டைம் டிராவல் / டெலிபோர்டேஷன் இயந்திரம் என தொழில்நுட்பரீதியில் மிக எளிமையாக கதை முடிந்துவிடுவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

DARK வெப் சீரிஸ்
DARK வெப் சீரிஸ்

# நாயகன் ஜோனாஸ், குகைக்குள் சுரங்கங்களின் வழியாக செல்கையில் தொலைபேசியின் ஜி.பி.எஸ்ஸுக்கு பதிலாக, கையால் வரையப்பட்ட வரைபடத்தைப் பயன்படுத்துகிறார். அந்த வரைபடம்கூட பெரும்பாலும் ரகசியக் குறியீடுகள் மற்றும் அடையாளங்களால் ஆனது என்பதால், ரசனையில் சற்று சிக்கல் ஏற்படுகிறது.

# நான்கு தலைமுறைகள், மூன்று காலங்கள், நான்கு குடும்பங்கள் எனும்போது, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் ஒரு காகிதத்தில் எழுதி, ஒரு குடும்ப மரத்தை தயார் செய்தால் மட்டுமே கதாபாத்திரங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியும் என்ற அளவு கதாபாத்திரங்களின் எண்ணிக்கை சற்று குழப்பமூட்டுவதாக உள்ளது.

இவ்வாறு ஒரு சில குறைகள் இருந்தாலும், டார்க் ஒரு மிகச்சிறந்த சஸ்பென்ஸ் திரில்லராகவே உள்ளது. இது ரசிகர்களை பரவசமூட்டும், உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு சிறந்த திரைக்கதை என்பதில் சந்தேகமில்லை.

தொடரின் இறுதியில், நாம் என்ன பார்த்தோம் என்று யோசிக்க வைக்கிறது கதை. மேலும், திரைக்கதை நமக்கு அவ்வப்போது வினாக்களைத் தூண்டுகிறது. ஆனால், சீசனின் கடைசி எபிசோட் பதிலளிப்பதைவிட, அதிகமான கேள்விகளுடனே முடிந்து அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கவைக்கிறது.

காலம் என்பது எப்போதும் முடிந்துபோவதில்லை. அது முடிவிலியாகவே (Infinity) இருக்கிறது. நம்முடைய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுமே இந்த நொடியிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்று காலத்தை அறிவியலுடன் இணைந்த புனைவாக விளக்குகிறது டார்க்.

நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைவிட, எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதே முக்கியம் ("The question is not where but when") எனும் டார்க்கை நாம் நிச்சயம் ரசிக்கலாம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு