Published:Updated:

`நாடுகளுக்கிடையே தொடங்கியுள்ள Cyber War!' - ஷார்ஜா வங்கி ஊழியரின் சுவாரஸ்ய பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஷார்ஜா அரசு வங்கியில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் தமிழர் விமலாதித்தன், அதிகரித்துவரும் பலதரப்பட்ட இணையதள குற்றங்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இன்று நம் வாழ்வை மிக எளிதாக்கும் வரங்கள் பலவும் கிடைக்கப்பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட வரங்களில் ஒன்றே இன்று வயது வித்தியாசம் இல்லாமல் நம் அனைவரையும் ஆட்டிவைத்து, கட்டிப்போட்டிருக்கும் இணையதளப் பயன்பாடு. அதன் காரணமாகவே, அமெரிக்காவில் இருக்கும் அண்ணாமலை, ஆண்டிபட்டியில் இருக்கும் அசோக்கை நொடியில் தொடர்புகொள்வது இணையத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

இணையதளம், மனித வாழ்வை எவ்வளவு தூரம் மேம்படுத்தியிருக்கிறது என்று நமக்கு விளங்கும். இது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படத்துக்கு டிக்கெட் வாங்குவதில் தொடங்கி, தலப்பாகட்டியில் பிரியாணி வாங்குவதுவரை வெளியில் எங்கும் போகாமல், வரிசையில் கால் கடுக்க நிற்காமல், வீட்டில் அமர்ந்துகொண்டே நம் விரல் நுனியில் சாதிக்க முடிகிறது. 'ஆகா ஆனந்தமே!' என்றுதான் தோன்றும் இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால். ஆனால், உண்மையில் இணையதளப் பயன்பாடு நம் வாழ்வை ஆசீர்வதிக்க வந்த வரமா... இல்லை சாபமா?

இது, இன்றுவரை விடைசொல்ல முடியாத புரியாத புதிராவே இருந்துவருகிறது. இணையதளத்தின் அவ்வளவாக வெளியில் யாரும் பார்த்திராத இன்னொரு முகத்தைக் கொஞ்சம் இங்கு பார்ப்போம். இன்று, உலகை நம் விரல் நுனிக்குக் கொண்டுவந்திருக்கும் இந்த இணையதள வசதியால், ஓடாய்த் தேய்ந்து கால் காசு, அரைக் காசாக வங்கியில் போட்டுவைத்தி ருக்கும் நம் பணத்தை, ஒரு நொடியில் நமக்குத் தெரியாமலே திருடி ஏப்பம்விட முடியும்.

Representational Image
Representational Image
Pixabay

30,000 அடி உயரத்தில் பறக்கும் இரு விமானங்களை எதிர் எதிராகத் திருப்பி, நேருக்கு நேர் மோத வைக்க முடியும். உங்களை ஓர் அதிபயங்கர தீவிரவாதியாகச் சித்திரித்து, சிக்கலில் மாட்டிவிட முடியும். உங்கள் ஈமெயில் முகவரியிலிருந்து நீங்கள் அறியாமலேயே உங்கள் மேலாளரைத் திட்டி அர்ச்சனை செய்து, ஒரு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் வேலையைக் காலி செய்யமுடியும். கடைசியாக, உங்கள் மனைவியிடம் உங்கள் காதலி என்று ஃபேஸ்புக் மூலமாக ஓர் அறிமுகம் கொடுத்து, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சிண்டுமுடிய முடியும். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுதான் இணையதளப் பயன்பாட்டின் இன்னொரு முகம்.

நாமெல்லாம் அதிகமாகப் பார்க்காத முகம். இணையதளத்தின் மூலம் நடக்கும் இத்தகைய அட்டகாசங்களே சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள். தொடக்கத்தில் தனிப்பட்ட மனிதர்களிடையே நடக்க ஆரம்பித்த இந்த இணையதளக் குற்றங்கள், இன்று நாடுகளுக்கிடையே நடக்க ஆரம்பித்திருக்கும் இணையதளப் போராக (CYBER WAR) மாறியிருக்கின்றன.

Representational Image
Representational Image
Pixabay

2012-ம் வருடம், ஈரான் மற்றும் சவுதி அரேபியாவின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைப்பான ஸ்டக்ஸ்நெட் (stuxnet) எனப்படும் மால்வேர் (Malware) தாக்குதல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். மால்வேர் என்பது இணையதளத்தில் உலவும் ஒரு வகையான கணினி வைரஸ். இன்று ஹேக்கர்கள் (Hackers) எனப்படும் இணையதளக் குற்றவாளிகளால் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படும் ஆயிரக்கணக்கான புதிய வகை நாசகார மால்வேர்கள், உலகளாவிய தொழில் துறைக்கு பெருத்த நாசத்தை ஏற்படுத்துகின்றன.

2016-ம் வருடம், பங்களாதேஷ் மத்திய வங்கியிலிருந்து இணையதள தாக்குதல் மூலம் ஹேக்கர்கள், 101 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சத்தமில்லாமல் கபளீகரம் செய்தது, பனாமா பேப்பர்ஸ் (PANAMA PAPERS) இணையதள தாக்குதல் மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தானாக ராஜினாமா செய்யவைத்தது போன்ற சமீபத்திய நிகழ்வுகள் இதற்கு சாட்சி.

Representational Image
Representational Image
Pixabay

மூன்றாம் உலகப் போர் என்ற ஒன்று நடந்தால், அது இணையதளம் மூலமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது இந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகியிருக்கிறது. இப்போது சொல்லுங்கள் நண்பர்களே… இணைய தளம் வரமா, சாபமா ? சாலமன் பாப்பையாவை நடுவராகக் கூப்பிட்டு பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு ரொம்பவே குழப்பமான கேள்வியாகத் தோன்றுகிறதா? இந்தக் கேள்விக்கு விடை தேட, இந்த இணையதளக் குற்றங்களைப் பற்றி நாம் கொஞ்சம் விரிவாக அறிந்துகொள்வது மிக அவசியம். எதற்காக நடக்கின்றன இணையதளக் குற்றங்கள்?

கொரோனா: `COVID-19 பெயரில் சைபர் தாக்குதல்!’- மத்திய அரசின் அலர்ட்
1. பணம், 2. புகழ், 3. மிதமிஞ்சிய புத்திசாலித்தனத்தினால் தனி மனிதனுக்கு வரும் ஆணவம், 4. பழிவாங்கத் துடிக்கும் பகை, 5. வெளியில் தெரியாத மனித மன வக்கிரங்கள், 6. அரசியல் ஆதாயம்.

இப்படி இணையதளக் குற்றங்களுக்கான காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எந்த மாதிரியான ஆயுதங்கள் இந்த இணையதளக் குற்றங்களை நிகழ்த்த உதவுகின்றன? அட்வேர் (ADWARE) ஸ்பைவேர் (SPYWARE) வைரஸ் (VIRUS) வார்ம் (WORM) ட்ரோஜன் (TROJAN) பாட்நெட் (BOTNET) பேக்டோர் (BACKDOOR) ரான்சம்வேர் (RANSOMWARE) கீலாகர் (KEY LOGGER) ரூட்கிட் (ROOTKIT) இன்னும் பல. கேட்க மலைப்பாக இருக்கிறதல்லவா?

Representational Image
Representational Image
Pixabay

இன்றைய ஐஓடி (IOT - Internet Of Things) தொழில்நுட்பத்தின் உதவியால் இணையதளத்தின் மூலம் ஒரு முழு நகரத்தையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு (SMART CITY என்று நம் பாரதப் பிரதமர் அறிமுகப்படுத்தி வைத்ததும் இதுவே), 50 மைல் தொலைவுக்கு அப்பால் ஓடும் காரை கட்டுப்படுத்தும் அளவுக்கு, இணையதளத் தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறியிருக்கிறது. ஆனால் பாருங்க, எந்த அளவுக்கு இணையத் தொழில்நுட்பமும் இணையதளப் பயன்பாடும் முன்னேறியிருக்கின்றனவோ, அந்த அளவுக்கு இணையதளக் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன என்பது நாம் மறுக்க முடியாத உண்மை. இப்படி தினுசு தினுசாக தினமும் அதிகரித்துவரும் பலதரப்பட்ட இணையதளக் குற்றங்களைப் பற்றி வரும் வாரங்களில் விரிவாக எழுதுகிறேன்.

-விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு