Published:Updated:

எல்லா நேரமும் கேண்டிட் கேமிராவா இருக்க வேணாம்பா..! - வாசகி வைக்கும் கோரிக்கை #MyVikatan

Representational Image
Representational Image ( heather mckean on Unsplash )

சமூக வலைதளங்கள் இன்றைய அரசியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த பெரும் பங்கு வகிக்கிறது ..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

கத்தி முனையை விட, பேனா முனையே வலிமை வாய்ந்தது" என்ற பழமொழிக்கேற்ப, வாளெடுத்து, வில் விடுத்து போர் புரிந்தவர்களை விட, பேனா முனை புரட்சியாளர்களே உலகில் இன்றும் நிலைத்துள்ளனர்.

இன்று சமூக வலைதளங்களின் மூலம் அமர்ந்த இடத்திலேயே ஒரு சிறிய ஹேஷ் டேக்குகளின் மூலம் நமது எதிர்ப்பையோ ஆதரவையோ தெரிவித்து விடுகிறோம்.

சமூக வலைதளம் மூலம் மெரினா புரட்சியைக் கண்டவர்கள் நாம். இத்தகைய சமூக வலைதளங்கள் இன்றைய அரசியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் அது மிகையாகாது.

Representational Image
Representational Image
Nathan Dumlao on Unsplash

இன்று புற்றீசல் போல வளர்ந்து நிற்கும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஒரு கையடக்க அலைபேசி போதுமானதாக இருக்கிறது நமக்கு ஒரு செய்தியை எளிதாகக் கடத்தி விட.

எனினும் அலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் காணொலிகள் சில நேரங்களில் சில விஷயங்களை தோலுரித்துக் காட்டினாலும், இது பல நேரங்களில் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு ஆயுதமாகவே உள்ளதைப்போல் தோன்றுகிறது. இன்று 8வயது சிறுவர்கள் கூட அழகாக கேமராவைக் கையாளுகிறார்கள்.

எதைச் செய்தியாக்கலாம் எதைச் செய்தியாக்கக் கூடாது என்ற அறமின்றிப் பார்ப்பதையெல்லாம் படம் பிடித்துப் பதிவேற்றுகின்றோம். விபத்து நடந்த இடத்தில் உயிரைக் காப்பாற்ற துணியாமல் படம் எடுப்பது போன்ற நிகழ்வுகள் கூட பல நேரதத்தில் பேசு பொருளாக இருந்துள்ளது.

தான் பெற்ற உயிரை இழந்து அழுது புரளும் ஒரு தாயின் பின்னாலே சென்று வீடியோ எடுக்கும் ஒருவர் அவருக்குப் பின்னால் மற்றொருவர் அவரைப் படம்பிடித்தபடி.

இத்தகைய காணொலிகள் மூலம் நாம் உலகிற்குச் சொல்ல வரும் விடயம்தான் என்ன?

ஒரு தனிமனிதனின் உணர்வுகளின் மதிப்பை அறியாமல் அவர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை அறியாமலே இத்தகைய செயல்களைச் செய்கிறோமா?

Representational Image
Representational Image
Pixabay

தனியொரு மனிதனின் வக்கிரத்தை, விரோதத்தைத் தீர்த்துக்கொள்ளவும் கூட சில நேரங்களில் ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.

ஒரு முறை வாட்ஸ் அப் குழு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனது வீட்டில் நடந்த விவகாரத்தைப் பற்றிக் கூற, உடனே குழுவில் திடீரென முளைத்த ஒருவர் நான் இணையதள ஊடகத்திற்குச் செய்திகளை எழுதிக்கொடுக்கும் பணியினைச் செய்கிறேன் நீங்கள் இதைப்பற்றிய விவரங்களை அளித்தால் நான் செய்தியாக வெளியிடுவேன் என்றார். அவர் கூறிய விடயத்திற்கோ அல்லது பிரச்னையை எப்படி சட்டப்படி அணுக வேண்டுமோ இல்லை யாரை அணுகி தீர்வு காண வேண்டுமோ என்பதைப் பற்றி வழிகாட்டாமல் அதைப் பரபரப்பாக்கி தீர்வு கிடைக்கும் என நினைப்பது எவ்வாறு நியாயமாகும் என்பதை பற்றிய நினைவு அறவேயின்றி நான் உட்பட அனைவரும் இருந்ததுதான் ஆச்சர்யம்.

எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்தாலும் வெட்டிக்கதை பேசி புறணி பேசிக்கொண்டிருந்ததிற்கும் இது போன்று செய்திகளைப் பரப்பும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஒரு நோயாளியின் தனிப்பட்ட விவரங்களை வெளியே கூறுவதற்கு மருத்துவமனையில் பணிபுரிபுவருக்கோ, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கோ கூட அனுமதி இல்லாத போது ஒருவர் ஆம்புலன்ஸில் ஏறுவது முதற்கொண்டு வீடியோ எடுத்து அவரைப் பற்றிய விவரங்களை( நோய் தொற்றாளர் தவிர்த்து) வெளியில் பரப்புவது தனிமனித உணர்வுகளையும் , சுதந்திரத்தையும் பாதிக்கும் செயலா இல்லையா என்பதைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை.

Representational Image
Representational Image
Pixabay

தன்னை இதுபோன்ற வீடியோக்களில் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நபர் சிறு குழந்தையாகவோ, வயதானவராகவோ இருந்தால் அவர்களுக்கு இதைத் தாங்கும் மனவலிமைதான் இருக்குமா, ஒரு வேளை மனவலிமை அற்றவர்கள் விபரீத முடிவை எடுத்தால் அதில் முதல் குற்றவாளி நாம் தானே, இதற்கான தீர்வு!!? நாமேதான் ஆம்,

தேவையற்ற நேரங்களில் கேண்டிட் கேமராக்களாக மாறுவதை தவிர்க்கும் செயலியும் செயலும் நம் கையிலே தான் உள்ளது என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுவோம்.

-ந.கிருஷ்ணவேணி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு