Published:Updated:

`60 ஆண்டுகளாகியும் காவல்துறை மாறலை!' -வாசகர் பகிரும் பகீர் ஃப்ளாஷ்பேக் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

தமிழக காவல்துறை அறுபது ஆண்டுகளாகியும் திருந்தாததுதான் சோகம். அவர் இறப்பு காவல்துறை கணக்கில்கூட வரவில்லை. அவரைப் போல் எத்தனை அப்பாவிகள் காவல்துறையால் குதறப்பட்டனரோ?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

சாத்தான்குள நிகழ்வுகள் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. காவல்துறையில் இன்னும் இதுபோன்ற காட்டுமிராண்டிகளும் இருக்கிறார்களே எனப் பெருமூச்சாக வெளியிடுவதைத் தவிர வேறு என்ன நம்மால் செய்ய முடிகிறது? ஒருவிதத்தில் பார்த்தால், ஜெயராஜும் பென்னிக்ஸும் தியாகிகளே. தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததன் மூலம் காவல்துறையின் கறுப்பு ஆடுகளை அவர்கள் உலகுக்கு அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

இந்த நேரத்தில் சுமார் 60 ஆண்டுகளாக என் மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடந்த பழைய நினைவுகள் மீண்டும் சதிராட்டம் போடத் தொடங்கிவிட்டன.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய எங்கள் ஊர், ஒரு சிறு கிராமம். 100, 150 வீடுகளைக் கொண்ட எங்கள் ஊரில் நடுநாயகமாக ஆரம்பப் பள்ளிக்கூடமும் பக்கத்திலேயே சிவன் கோயிலும் திருக்குளமும் பக்கத்தில் தருமர் கோயிலும் ஐயன் குளம் என்று ஆன்மிகமும் நீராதாரமும் பிணைந்து கிடந்தன.

சற்றே வெளியில், பிடாரி கோயிலும் பிடாரி குளமும் ஒருபுறமும் அன்ன மடமும் தாமரைக் குளமும் மறுபுறமும் ஊரைச் சீராட்டிக் கொண்டிருந்தன. எல்லோரும் ஓரினத்தவர் என்பதால் திருவிழாக்களுக்கும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கும் குறைவிருக்காது. கடைமடைப் பகுதிதான் என்றாலும் சாகுபடி செய்ய நீருக்குத் தட்டுப்பாடிருக்காது. குறுவையும் சம்பாவும் களைகட்டும். கோடைக்காலங்களில் கைப்பந்தும் சடுகுடுவும் இளைஞர்களை ஈர்த்து இன்புறச் செய்யும்.

தருமர் கோயிலின் தளியையும் பிடாரி கோயிலின் ஒரு வார உண்டக் கட்டித் திருவிழாவும் மிகுந்த பிரசித்தம். அன்னமடத் திருவிழாவின்போது, மூன்று நாள்கள் சரித்திர நாடகமும் சிவன் கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பிரபல பின்னணிப் பாடகர்களின் கச்சேரியும் ஊரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும். உறவுகளுக்குள் சில நேரம் பகையும் மூளும். அப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டுமென்றால் எங்கள் கிராமத்திலிருந்து 3 கி.மீ நடந்து வந்து பேருந்தைப் பிடித்து அரைமணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே, எப்போதாவதுதான் காவல் நிலையம் செல்லும் கட்டாயம் ஏற்படும்.

சாத்தான்குளம்: அதிர்ச்சி ஆடியோ; சிக்கிய சிசிடிவி காட்சி! - கைதாகும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்?

அப்படி ஒரு பொழுதில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பங்காளிகளுக்குள் ஒரு சின்ன சண்டை. தம்பிக்கு ஆதரவாக, உறவினர்கள் சிலர் அவர் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து, அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருமே ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள். பக்கத்துத் தெருக்களில் வசிப்பவர்கள், உறவினர்களும்கூட.

அண்ணனின் பங்காளிகள் மூவர், அண்ணனுக்கு ஆதரவாகப் பக்கத்திலுள்ள அவர் வீட்டில் கூடினர். அவர்களின் வீடுகளும் அருகிலேயே.

‘நாங்கள் பங்காளிகள். பக்கத்து வீட்டுக்காரர்கள். அடித்துக் கொள்வோம். சேர்ந்து கொள்வோம். உங்களையெல்லாம் யார் அழைத்தது?’ என்று கூறியபடி, அவர்கள் மூவரும் கையில் அரிவாளுடன் வாசலில், ’வெளியே வந்துதானே ஆக வேண்டும். இன்று உங்களையெல்லாம் வெட்டிச் சாய்க்காமல் போக மாட்டோம்’ என்று சூளுரைத்தபடி நின்று கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள் வாசல் கேட்டை மூடிவிட்டு உள்ளேயே இருந்தார்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

ஊராருக்குத் தெரிய வர, மெள்ள கூட்டம்கூட ஆரம்பித்துவிட்டது. நாங்கள் சிறுவர்களெல்லாம் வெளியில் நின்று வேடிக்கை பார்க்க, அந்த மூவரும் அரிவாளுடன் முற்றத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தனர். மதியம் ஆரம்பித்த அந்தக் கூத்து மாலை வரை தொடர்ந்தது. உள்ளூர் பஞ்சாயத்து பிரசிடென்ட் மத்தியஸ்தம் செய்ய வந்து பேசியும், அவர்கள் கேட்கவில்லை. நாங்களெல்லாம் இருட்டும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டோம்.

காலையில் எழுந்து கேட்ட போதுதான் சொன்னார்கள். இரவு 10 மணி வாக்கில் பக்கத்து ஊரிலிருந்த பெருந்தனக்காரர் (அந்த மூவரின் தாய் மாமன்) வந்து மத்தியஸ்தம் பேசி, அந்த மூவரின் கைகளிலிருந்து அரிவாளைப் பிடுங்கி எறிந்து விட்டு, திண்ணையில் சிக்கியிருந்தவர்களை விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.

இடைப்பட்ட நேரத்தில் திண்ணையில் சிறைப்பட்ட ஒருவர், தன் உறவினர் மூலம் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தந்தி கொடுத்துள்ளார். `we are in danger. Come and Save us.’ ஆனால் போலீஸ் வரவில்லை. அப்போதெல்லாம் எங்கள் கிராமத்தை டெலிபோன் எட்டவில்லை. 3 கி.மீ தூரம் சென்றுதான், தபால் ஆபீஸிலுள்ள தந்திக் கருவி மூலம் அவசரத்துக்குத் தந்தி கொடுக்க வேண்டும்.

இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் என்று ஞாபகம். மாலை மூன்று மணி இருக்கும். எஸ்.ஐயும், நான்கு காவலர்களும் பேருந்தில் வந்திறங்கி, சைக்கிள் எடுத்துக்கொண்டு எங்களூருக்கு வந்து பட்டாமணியாருக்கு ஆள் விட, அவரும் அவசரமாகக் கிளம்பி வந்தார். எல்லோருமாகப் பள்ளிக்கூடத்தில் கூடினர்.

பள்ளி திறக்கப்பட்டு, வாசலில் இரண்டொரு நாற்காலியும், பெஞ்சும் போடப்பட்டன. எஸ்.ஐ நாற்காலியில் அமர, காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். தந்தி கொடுத்தவரைக் கூப்பிட்டு வருமாறு எஸ்.ஐ பணிக்க, அவரை அழைத்து வந்தனர். அவரோ ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருப்பார். சற்றே கறுப்பு என்றாலும் விரிந்த தோள்களும் பரந்த மார்பும் கொண்டவர். ஊரிலிருந்த ஒன்றிரண்டு மாடி வீடுகளில் அவருடையதும் ஒன்று. ஹாலின் மேஜையில் ஒரு டப்பாவில் அரிசி எப்போதும் இருக்கும்; பிச்சைக்காரர்களுக்குப் போட.

Representational Image
Representational Image
Vikatan Team

நியாய, தர்மங்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை நடத்திய குடும்பம். வலிய சண்டைக்குப் போக மாட்டார்கள். நியாயத்துக்குப் புறம்பான எதையும் தட்டிக் கேட்காமல்விட மாட்டார்கள்.

நஞ்சை நிலம் நயமான வருமானத்தை அளித்து வந்ததால், யாருக்கும் தலைவணங்காமல் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அப்போதெல்லாம் வெளியூர் செல்லும்போது மட்டுமே சட்டை அணிவது வழக்கம். அதிலும் சிலர், சட்டையைத் தோளில் போட்டுக்கொண்டே 3 கி.மீ நடந்து சென்று, பஸ் ஏறும் முன் அணிந்துகொள்வதும், திரும்பி வருகையில், பஸ்ஸை விட்டு இறங்கியதும் கழற்றிவிடுவதும் வாடிக்கை.

அவர் வேட்டியுடன், துண்டைப் போட்டு உடலை மறைத்தபடி பள்ளிக்கு வந்தார். விசாரணைதானே. தன்மீது எந்தக் குற்றமும் இல்லையே. ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் வந்திருக்க வேண்டும். காவலர்களுக்குப் பொதுவான வணக்கம் தெரிவித்து விட்டு, போட்டிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தார்.

’ஏண்டா.. நீங்க கூப்பிட்டவுடனே வர்றதுக்கு போலீஸ் என்ன நீங்க வைத்த ஆளா?’ என்றுகூறியபடி எழுந்து வந்த எஸ்.ஐ அவரை அடிக்க, இதை எதிர்பாராத அவர் பெஞ்சிலிருந்து சரிய, நின்றிருந்த மூன்று நான்கு காவலர்களும் சரமாரியாக உதைத்தும், அடித்தும் அவரை துன்புறுத்த, பார்த்துக் கொண்டிருந்த ஊரார் விக்கித்து நின்றனர்.

Representational Image
Representational Image

நிமிட நேரத்தில் எல்லாம் நடந்தேறின. எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும் மேலும் அவரைத் தாக்கினார்கள்.தோளில் கிடந்த துண்டையெடுத்து முறுக்கி, இரு கைகளையும் பின்புறம் வைத்துக் கட்டினார்கள். அப்படியே சாலையில் அடித்தபடி இழுத்துச் சென்றார்கள். எங்கள் ஊர் எல்லை வரை நாங்கள் பின் சென்றோம். 3.கி.மீ கைகளைக் கட்டியபடியே இழுத்துச் சென்று பஸ் ஏற்றி, காவல்நிலையம் கொண்டு சென்றுவிட்டார்கள்.

"நீங்கள் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர்!"- சிறைக்குள்ளும் தொடரும் சாத்தான்குளம் ஸ்ரீதரின் அத்துமீறல்

உடனடியாகவே அவரின் உறவினர்கள் சிலர் காவல் நிலையம் சென்று, அன்றிரவே ஜாமீனில் எடுத்து, வாடகைக்காரில் ஊருக்கு அழைத்து வந்து விட்டார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. பள்ளிக்கூட வாசலில் அடித்து இழுத்துச் சென்றபோது அவரைப் பார்த்ததுதான். அதன் பிறகு ஊரார் எவருமே அவரைப் பார்க்க முடியவில்லை. குளிக்கக் குளத்துக்கும் வரவில்லை. வெளியே எவர் கண்ணிலும் படவில்லை.

Representational Image
Representational Image
Vikatan Team

அன்ன மடத்தில் திருவிழாவும் சரித்திர நாடகமும் நடந்தது. பவளக்கொடி நாடகம் என்று ஞாபகம். வீட்டார் அனைவரையும், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டாமென்று கூறிய அவர் அனைவரையும் நாடகம் பார்க்க அனுப்பிவிட்டு, தான் மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார்.

நாடகம் முடிந்து விடியற்காலம் வீட்டிற்கு வந்தவர்கள், தூங்குபவரை எழுப்ப வேண்டாமேயென்று படுத்துவிட்டார்கள். அவர் இறுதித் தூக்கம் தூங்குவதை அவர்கள் அப்போது உணரவில்லை. காலையில் சற்றுத் தாமதமாக எழும்பியவர்கள் அவர் அப்போதும் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து அருகில் செல்ல, பக்கத்திலேயே ஃபாலிடால் பாட்டில் காலியாகிக் கிடந்திருக்கிறது. பயிருக்கு அடிக்கவென்று வாங்கிய ஃபாலிடால் அவர் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பயன்பட்டிருக்கிறது.

அப்போது என் பாட்டிசொன்னது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. `எம் பொட்டி மகன்... இப்படி அநியாயமாய்ப் போயிட்டாரே. அடித்துப் போட்டாலும் சாக அஞ்சாறு நாள் ஆகுமே. அப்படிப்பட்ட ஒடம்பாச்சே.’

Representational Image
Representational Image
Vikatan Team

எல்லாம் முடிந்து போனது. அன்று எதனால் அப்படி நடந்தது என்று பின்னர்தான் எங்களுக்குத் தெரிந்தது. அன்று பஸ்ஸை விட்டு இறங்கியதுமே காவலர்கள் செமத்தியாகக் கவனிக்கப்பட்டு விட்டார்களாம். எனவேதான், விசாரணை அவ்வாறு திரும்பிவிட்டதாம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எந்தப் பள்ளிக்கூட வாசலில் அவர் மானத்தைக் கப்பலேற்றினார்களோ, அந்தப் பள்ளிக்கே சொந்தக்காரர் அவர்தான். ஆசிரியராக இருந்த அவர் அண்ணன், தங்கள் சொந்த இடத்தில் பள்ளியை நடத்தி பின்னர் அந்த இடத்தை ஊருக்கே வழங்கிவிட்டனர்.

அறுபதாண்டுகளுக்கு முன்னர் காவலர்கள் காசுக்காக ஒரு கண்ணியவானின் மானத்தை வாங்கி, மரணமடையச் செய்துவிட்டார்கள். அடிபட்ட காரணத்தால் அவர் இறந்தார். இப்போதோ, அடித்தே கொன்றிருக்கிறார்கள். அடிப்படை அடிதான்.

தமிழகக் காவல்துறை அறுபது ஆண்டுகளாகியும் திருந்தாததுதான் சோகம். அவர் இறப்பு காவல்துறை கணக்கில்கூட வரவில்லை. அவரைப் போல் எத்தனை அப்பாவிகள் காவல்துறை கழுகுகளால் குதறப்பட்டனரோ. ஆண்டவனுக்கே வெளிச்சம்.

-விஜய், அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு