Google classroom: இணையவழியில் இணையும் வீட்டுப்பாடம்! - அசத்தும் தொழில்நுட்பம் #MyVikatan

இணையவழிக் கல்விமுறை தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இணையவழிக் கல்விமுறை தற்போது பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
கொரோனா லாக்டௌன் காரணமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சூழ்நிலையில், பல பள்ளிகள் இணையவழியில் கற்பித்தலைக் கையில் எடுத்துள்ளன. Zoom, Google Meet, Jio Meet உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இணையவழிக் கல்வி முறைக்குப் பெரிதும் உதவுகின்றன.

ஆனால், இணைய வகுப்புகளின் தொடர்ச்சியாக மாணவர்கள் செய்யும் செயல்திட்டங்கள், அசைன்மென்ட்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாட்ஸ்அப் மூலமாக இவற்றைச் சமர்ப்பிப்பது கற்றல் - கற்பித்தலில் போதுமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
இப்பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக Google Classroom விளங்குகிறது. ஆசிரியர், தனது வகுப்புகளுக்குப் பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்கவும், பாடங்கள் குறித்த சந்தேகங்களை மாணவர்கள் கேட்கவும் Google Classroom வாய்ப்பளிக்கிறது. மேலும், வீட்டுப் பாடங்கள் மற்றும் அசைன்மென்ட்களை ஆசிரியர் கொடுக்கவும், அவற்றைச் செய்து முடித்து மாணவர்கள் சமர்ப்பிக்கவும், அவற்றுக்கு சரியான மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகளை ஆசிரியர் வழங்கவும் இந்தச் செயலி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
Google Classroom அமைப்பு
Google Classroom-ன் வசதிகள் முக்கியமான நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
1. Stream
Stream என்பது Google வகுப்பறையின் சமூக மையம். இது ஆசிரியர் அறிவிப்புகளை வெளியிடக்கூடிய இடம்.
2. Classwork
இது ஆசிரியர், தங்கள் வகுப்புக்கு உரிய வேலைகளை ஒதுக்கக்கூடிய மற்றும் மாணவர்கள் வேலைகளை முடித்து சமர்ப்பிக்கக்கூடிய இடம்.

3. People
Classroom-ல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்பு விபரங்கள் உள்ள இடம் இது.
4. Grades
இது மாணவர்களின் பணிகளுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரம் ஆகியவற்றை ஆசிரியர் அளிக்கக்கூடிய இடம்.
செயல்படுத்தும் விதம்
Google Classroom செயலி முழுக்க முழுக்க இலவசமான ஒரு செயலி. Google கணக்கு உள்ள அனைவருமே இதைப் பயன்படுத்த முடியும். ஆசிரியர், தனது கூகுள் அக்கவுன்ட் மூலமாக Login செய்து புதிய க்ளாஸ் ரூமை உருவாக்கி மாணவர்களை இணைக்கலாம் அல்லது இணைப்புக்கான லிங்க்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் இணைந்த பின்னர் ஆசிரியர் Stream பகுதியில் அறிவிப்புகளை வெளியிடவும், வளங்களைப் பகிரவும் செய்யலாம். Stream பகுதியில் மாணவர்களும் இடுகைகள் இட ஆசிரியர் அனுமதி வழங்கினால், மாணவர்கள் இங்கு கேள்விகளைக் கேட்கவும், கமென்ட்களை அளிக்கவும் முடியும். மேலும், மாணவர் இடுகைகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கவும் முடியும்.
அடுத்ததாக Classwork பகுதியில் வகுப்புக்கான செயல்திட்டங்கள், அசைன்மென்ட்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் ஆகிய வேலைகளை மாணவர்கள் பார்க்க விரும்பும் விதத்தில் ஆர்டர் செய்து ஆசிரியர் ஒதுக்கலாம்.
ஆசிரியர் அளிக்கும் வேலைகளை முடித்து மாணவர்கள் அவற்றை Text, Pdf, Photo, Video உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் Classwork பகுதியில் Upload செய்ய முடியும்.

Classwork பகுதியில் Upload செய்யப்பட்ட மாணவர்களின் பணிகளை மதிப்பீடு செய்து, அவற்றுக்கு உரிய மதிப்பெண் மற்றும் தரம் ஆகியவற்றை Grades பகுதியில் ஆசிரியர் அளிக்க முடியும்.
Google Classroom-ன் பயன்கள்
* ஆசிரியரும் மாணவரும் இணையவழி இணைவதை எளிதாக்குகிறது.
* வீட்டுப்பாடங்கள் குறித்த மாணவர்களின் புரிந்துணர்வை சுலபமாக்குகிறது.
* காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
* வகுப்புகளை உருவாக்குவது, பணிகளை விநியோகிப்பது, தொடர்புகொள்வது போன்றவற்றின் ஒழுங்கமைப்பை எளிதாக்குகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
* Google Classroom அமைப்பை ஆசிரியர் சில நிமிடங்களில் உருவாக்கிவிட முடியும். தனக்குத் தேவையான அளவு வகுப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
* இணையவழி கற்பித்தலில் ஆசிரியரின் பணியை எளிதாக்குகிறது.
* உடனடி, விரைவான மதிப்பீட்டிற்கு உதவுகிறது.
* பள்ளியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* அனைத்துக் கோப்புகளும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் Google Drive Cloud-ல் சேமிக்கப்படுகின்றன.
* ஆசிரியர்களால் நேரடி நிகழ்நேர (Real Time) மதிப்பீடுகளையும் பின்னூட்டங்களையும் வழங்க முடிகிறது.

* தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது.
* நேர மேலாண்மையை வலுப்படுத்துகிறது.
* மாணவர்கள் ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். சக மாணவரின் பணிகளையும், மதிப்பெண்களையும் பார்வையிடலாம்.
* விளம்பரங்கள் எதுவும் இடையில் வருவதில்லை.
* கட்டணங்கள் ஏதுமற்ற இலவசமான செயலி.
* வகுப்பறை குழுவிவாதங்களை உடனடியாகத் தொடங்க முடியும்.
Google கணக்கு உள்ள அனைவருக்கும் Google Classroom இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், இதில் வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி கிடைக்காது. வீடியோ கான்ஃபரன்ஸ் வசதிக்கு Google Meet மற்றும் வீட்டுப் பாடங்களுக்கு Google Classroom ஆகிய இணைகளைப் (Pair) பயன்படுத்துவது மாணவர்களிடம் மிகச் சிறந்த தாக்கத்தை உண்டாக்கும். Google Classroom-ல் மேம்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸிங் அம்சங்கள் மற்றும் ப்ரீமியம் ஆதரவு போன்ற கூடுதல் அம்சங்கள் தேவைப்படுவோர் மட்டும் கட்டண அடிப்படையில் (G Suite) பயன்படுத்தலாம்.

இணையவழிக் கற்பித்தலில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியான உபாதைகள் ஏற்பட கணிசமான வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய அசாதாரணமான சூழலில் இணையவழிக் கற்பித்தல் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்(MHRD) குழந்தைகளின் வகுப்புக்கு ஏற்ப வரையறுத்துள்ள இணையவழிக் கற்பித்தல் நேரத்தைப் பள்ளிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை ஓர் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலுக்கு இணையாகாது. உயிரோட்டமான வகுப்பறைக்கு ஒருபோதும் ஈடாகாது. என்றாலும், ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் ஒன்று இருந்தால் நல்லது (Something is better than nothing) என்ற அளவில், இணையவழி வகுப்புகளை முழுமையான கற்பித்தலாகக் கருதாமல், ஒரு கற்பித்தல் துணைக்கருவியாகவே நாம் கருதவேண்டும்.
ஆம்! பாடப்புத்தகங்கள் முதற்கொண்டு இணைய வகுப்புகள் வரையுள்ள கல்விசார் வளங்கள் அனைத்துமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் மிகச்சிறந்த துணைக்கருவிகளே!

தொழில்நுட்பங்கள் அனைத்துமே இருபுறக் கத்திகள் போன்றவை என்பதால் அவற்றை கல்விசார் பணிகளில் கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.
Google Classroom போன்ற வீட்டுப்பாடங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தினால், இன்றைய இணைவழிக் கற்பித்தல் சூழலுக்கு மட்டுமல்லாது, இயல்பான நேரடி வகுப்பறைச் சூழலுக்கும் கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் மிகச்சிறந்த துணைக்கருவியாக இவை அமையும்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.