Published:Updated:

கனவிற்கு நிச்சயம் ஏதோ சக்தி இருக்கு..! - வாசகியின் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஆம். கனவு என்று மனதிற்கும் தெரியும். மூளைக்கும் தெரியும். ஆனால், அது தந்த உயிரோட்டமான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து என்னால் சட்டென்று வெளிவர இயலவில்லை.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரண்டு நாள்களுக்கு முன், விழித்தெழுந்தது முதல் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. பத்து நிமிடம் கழித்து என்னையே நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அம்மாவிடம் ஓடிச் சென்று அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டேன். அம்மா என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டே இருந்தார். சில மணி நேரம் கழித்துதான் வாய் திறந்தேன்.

"அம்மா, நைட் வந்த கனவுல உன்னை வெள்ளம் அடிச்சிட்டு போதுமா... நான் கத்தறேன். உன்னை காப்பாத்தச் சொல்றேன். ஆனாலும் நீ கொஞ்ச நேரத்தில காணாம போய்ட்ட."

Representational Image
Representational Image
Pixabay

"அட லூசு... கனவுக்கா இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிருக்க..."

"கனவுதான்னு எனக்கும் தெரியுதுமா... கொஞ்ச நேரம் அந்த உணர்வு ரொம்ப உண்மையா இருந்துச்சு."

ஆம். கனவு என்று மனதிற்கும் தெரியும். மூளைக்கும் தெரியும். ஆனால், அது தந்த உயிரோட்டமான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து என்னால் சட்டென்று வெளிவர இயலவில்லை. கனவிற்கு நிச்சயம் ஏதோ சக்தி இருக்க வேண்டும்.

எனக்கு வரும் கனவுகளின் ரகம், பெரும்பாலும் நான் தேர்வு அன்று பேருந்தைத் தவறவிட வேண்டும். பரீட்சையில் நான் எழுதும் பதில்கள் மறைந்துவிட வேண்டும். நான் சொல்லவிருக்கும் நிகழ்வுகள், நான் செல்லாமலே நடந்துவிட வேண்டும். எனக்குப் பிடித்தவர்கள், என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும். அந்தக் கனவிற்கு என் மேல் அப்படி என்னதான் கோபமோ... இந்த மாதிரியான காட்சிகளை வெகு சுலபமாக எனக்கு காட்சியாக்குகிறது.

Representational Image
Representational Image
Pixabay

அதற்காக, கனவைத் திட்டவும் என்னால் முடியவில்லை. எவ்வளவு நன்மை செய்திருக்கிறது தெரியுமா... பல நாட்களாக பேசாமல் இருக்கும் எனக்குப் பிடித்த அத்தை, என் கனவில் எனக்கு பூ வைத்துவிட்டார். நான் கனவில் பார்த்த மதிப்பெண்தான் நான் நிஜத்திலும் பத்தாம் வகுப்பில் பெற்றேன். ஆசையாக நான் வாங்கிய கோல்ட் கலர் செயின் வாட்ச் தொலைந்துவிட்டது. ஆனால், கனவில் இன்னும் நான் அதை கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.

அவ்வப்போது, திரில்லர் வகையறாக்களையும் காட்டி விடுகிறது. நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லாத மிக வித்தியாசமான கனவுகளையும் பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் கரன்ட் இல்லை. நானும் என் தங்கையும் சேர்ந்து கொண்டு மெழுகுவத்தி ஏற்றுகிறோம். கிட்டத்தட்ட இருபது முப்பது குச்சிகளை ஏற்றியிருப்பேன். இன்னும் மெழுகுவத்தி எரியவில்லை. கடைசி குச்சியைப் பதற்றத்தோடு பற்றவைக்கிறேன். அதுவும் பற்றவில்லை. இறுதியாக, என் தங்கை போனில் பிளாஷ் போடுகிறாள். அவள் ஏன் நான் முப்பது குச்சியை உரசி முடிக்கும் வரை ப்ளாஷ் போடவில்லை என்று கனவிடம் சண்டைபோட வேண்டும் என்றுகூட தோன்றும்.

Representational Image
Representational Image
Pixabay

ஒரு நாளில், நமது உறக்கத்தில் ஏழு குட்டி குட்டி கனவுகள் வரை வருமாம். பெரும்பாலான கனவுகள் நமக்கு மறந்துவிடுமாம். கனவு ஏன் வருகிறது என்பதை ஏற்கெனவே நிறைய அறிஞர்களும் வல்லுநர்களும் சொல்லியிருக்கின்றனர். ஏதோ ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளாம்... நம் எண்ணங்களாம்... இன்னும் என்னன்னவோ சொல்கின்றனர். பாதி புரியவில்லை. மீதியை மனம் ஏற்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை...

கனவுகள் ஏன், எப்படி, எதற்காக வந்தது என்றெல்லாம் யோசித்தால் பல நூறு அதிசயத் துளிகள் சுரக்கும். சில சமயங்களில், நான் பார்த்திடாத பேய்களையும் காட்டும். ரசித்திடாத சொர்க்கத்திற்கு என்னை அழைத்துச்செல்லும். நரகத்தில் எமதர்மன் எனக்கு விருந்து வைத்து வரவேற்பார். எதிரிகளையும் என்னிடம் அன்பாகப் பேசவைக்கும். பொன்னியின் செல்வன் கதையில் வரும் ரகசிய தங்கச் சுரங்கத்துக்குள் நான் நடந்துபோவேன். மறந்துபோன பால்ய காலத்தில், மீண்டும் நான் வாழ்வேன். கண்ணில் ஈரமே வடியாது. ஆனால், கதறிக் கதறி அழுவேன். படத்தில் பார்த்த பாம்பு, கனவில் என் முதுகில் ஏறும். தொடர்பு இழந்த, எனக்குப் பிடித்த தமிழ் ஆசிரியை என்னை அழைத்துப் பேசுவார். நான் செத்துமடிவதை நானே பார்ப்பேன்.

என் பார்வையில் கனவு என்பது இரவில் மட்டும் உயிர்கொள்ளும் மாய உலகம்.

Representational Image
Representational Image
Pixabay

இப்பொழுது ஏன் நான் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்களா?

இருங்கள், அதற்கு முன் நேற்று என்ன கனவு வந்தது என்பதைக் கூறிவிடுகிறேன்.

நேற்று இரவு கனவில்...

என்னைச் சுற்றி காகிதங்கள். நான் வெகு நேரமாக காகிதத்தில் எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். என்னவென்று என் கண்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று அந்த காகிதங்களைத் தட்டிவிட்டு, வேகமாகச் சென்று கணினியில் அமர்ந்து, கீபோர்டில் தலைப்பு என்று டைப் செய்துவிட்டு நிமிர்ந்து மானிட்டரைப் பார்த்தேன்.

அதில் 'கனவு' என்று தெரிந்தது.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு