Published:Updated:

`என்கூட ஒரு நாளாச்சும் வாழ்ந்திருக்கலாம்ல பாட்டி!’ - பெண்ணின் வாழ்நாள் ஏக்கம் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

இவர்களின் வார்த்தைகளில்தான் என் பாட்டியின் வாசம், அக்கறை மற்றும் பாசம் உணர்வேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

"உங்க பாட்டி நாங்க எப்போ வந்தாலும் சூடாதான் வடிச்சிப் போடுவா. எத்தனை பேர் வந்தாலும் வேகமா ஆக்கிப் போட்ருவா... ஏன் பையன் எத்தனை நாள் இங்கயே கிடந்திருக்கான். ஒரு நாளும் சாப்பிட வைக்காம விட்டதில்ல" என்றார் பெரிய பாட்டி

"என்னை நிறைய தடவை டென்டு கொட்டாய்க்குக் கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க" என்றார் பெரியம்மா.

"நல்ல மனசுக்காரி. கனகாம்பரத்தக் கட்டி கட்டி வெச்சிக்குவா... சிரிச்ச முகமாதான் இருப்பா. இப்போ உயிரோட இருந்திருந்தா உங்கள உள்ளம் கையில வெச்சி தாங்கிருப்பா கண்ணு" என்றார் சின்ன பாட்டி.

Representational Image
Representational Image
Vikatan Team

நான் பார்த்திடாத பாட்டியைப் பற்றி என் பாட்டியுடன் பிறந்தவர்களும் பெரியம்மா, அத்தைகளும் எப்பொழுது எங்கள் வீட்டுக்கு வந்தாலும் சிலாகித்துக் கூறுவார்கள்.

"என்னுடன் ஒரு நாள்கூட வாழாமல் ஏன் எங்களைவிட்டுச் சென்று விட்டீர்கள் பாட்ட" என்று ஏக்கத்தோடு பாட்டியின் புகைப்படத்துக்கு முன் நின்று கேட்டுள்ளேன்.

இவர்களின் வார்த்தைகளில்தான் என் பாட்டியின் வாசம், அக்கறை மற்றும் பாசம் உணர்வேன். பெரிய பாட்டி எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க மாட்டார். இந்த 70 வயதிலும் துறு துறு வென ஏதாவது வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்.

அன்று ஒரு நாள்... அம்மா உள்ளே சமையல் செய்து கொண்டிருந்தார். அத்தனை நேரம் அம்மாவுக்கு உதவி செய்து விட்டு வெளியே வந்தவர் தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தார்.

"டிவி மேல நிறைய பஞ்சு சேர்ந்துடுதுல" என்று கூறிக்கொண்டே தன் முந்தானையை எடுத்து துடைக்க ஆரம்பித்துவிட்டார். தான் விருந்தாளி என்றில்லாமல் வெள்ளந்தியாகத் தன் முந்தானையிலே அழுக்கைத் துடைக்கிறாரே என்று பூரித்துப் பார்த்தேன். சின்ன பாட்டியின் ஊர், ஈரோடு பக்கத்தில் உள்ள பள்ளி பாளையம். எனக்கு அங்கே சென்று தங்குவதென்றால் அத்தனை சந்தோஷம்.

Representational Image
Representational Image
Vikatan Team

நாகரிக முகமூடிகள் விடுத்து கிராம வாசம் நிறைந்த இடம் அது. சிறிய ஓட்டு வீடுதான் சின்ன பாட்டியின் வீடு. திண்ணையில் உலாவுவோம். வெளியிலே கயிற்றுக் கட்டிலில் உறங்குவோம்.

சூரியன் வருவதற்கு முன் எழுந்து விடுவார்கள். நானும் அங்கே இருக்கும்போது 6 மணிக்கு எழுந்துவிடுவேன். பல் தேய்க்க பல் பொடி கொடுப்பார்கள். கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் இருக்கும். பாதியை பல் தேய்க்கத் தெரியாமல் விழுங்கிவிடுவேன்.

வீட்டின் பின் மாட்டுத் தொழுவம் உண்டு. மாட்டின் இருப்பை உணர்த்தும் வகையில் வைக்கோல் போரின் சக்கைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்.

`ஆரோக்கியமான சமூகம் எங்கே?' - மூன்று தலைமுறைகளைக் கடந்த பெண்ணின் Nostalgic பகிர்வு #MyVikatan

வீட்டுக்கு வெளியிலே ஒரு கிணறு இருக்கும். அதில் நீர் சேந்தி தான் பயன்படுத்துவார்கள். இங்கே நகரில் குழாய் திருப்பினால் தண்ணீர் வருகிறது. அதன் அருமை புரியாமல் பயன்படுத்துகிறோம்.

அங்கே ஒவ்வொன்றின் அருமையும் புரிந்து பக்குவமாகப் பயன்படுத்துகின்றனர். இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர். அந்த உள்ளங்களில் சகிப்பு தன்மையும் நேசமும் அதிகம் உள்ளது.

விருந்தோம்பலில் மெய் சிலிர்க்கும். "என்ன இப்படி இளச்சிப் போய்ட்டா. நல்லா சாப்பிடு" என்பார்கள் எப்பொழுதும். இலந்த பழம், கொய்யா, நெல்லி போன்றவை வீட்டில் கொட்டிக் கிடக்கும். அத்தைகளும் பூ கட்டி வைத்து விடுவார்கள். புதுத்துணி எடுத்து தருவார்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

"சின்னாயிக்கு இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க. ஊருக்குப் போறதுக்குள்ள குண்டாக்கிதான் அனுப்பணும்" என்றார் அத்தை.

"அத்தை, எப்பப் பாரு ஏன் சின்னாயினு கூப்படறீங்க" என்றேன் பொய்க் கோபத்துடன்.

"உன் பாட்டி அவளுக்கு சித்தி முறை அதான் அப்டி கூப்படறா. சின்னாயினா சித்தி" என்றார் பெரிய பாட்டி.

"என்ன ஏன் சித்தின்னு சொல்றீங்க?" என்றேன்.

"உன் முக சாடை அப்டியே என் சின்னாயி மாதிரிதான் இருக்கு. அது மட்டும் இல்லாம அவங்க இறந்து ஒரே வருஷத்திலே பொறந்த, சின்னாயியோட முதல் பேத்தியா... அதனால எங்களுக்கு நீதான் சின்னாயி" என்னைக் கட்டிக்கொண்டே அத்தை கூறினார்.

புதுவித சிலிர்ப்புடன் கண்ணாடியில் என்னை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன்.

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு