Published:Updated:

என் வாழ்க்கையை மாற்றிய `அலும்னி மீட்’ - வாசகரின் ஜில் நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( bantersnaps on Unsplash )

பள்ளியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பிக்க ஆசிரியர் குழு சேர்ந்து இந்த Alumni Meet-ஐ ஏற்பாடு செய்திருந்தனர்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்றைய காலக்கட்டம் என்பது ஒரு பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவர்களின் காலகட்டத்தை ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமானது. ஏனெனில், இன்றைய பெருகிவிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியோடு ஒரு பள்ளியை விட்டு வெளியே வந்த பிறகும் வாட்ஸ்அப்பிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ அல்லது எந்த ஒரு சமூக வலைதளங்களிலோ ஒரு குழுவை உண்டாக்கி அந்த குழுவைப் பின் தொடரலாம். அந்தக் குழுவின் வாயிலாக பள்ளியில் நம்மோடு படித்த நம் சக நண்பன் வாழ்க்கையில், வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறான் என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Representational Image
Representational Image

அவன் எதை நோக்கி நகர்கிறான்? அவனின் விருப்பு வெறுப்புகள் என்னவாக இருக்கிறது? வாழ்க்கையில் அவன் எதை பிரதானப் படுத்துகிறான்? நம்முடன் படித்தபோது அவன் என்ன மாதிரியான சிந்தனையில் இருந்தான்? நாம் அவனை பின்பு சமூகவலைதளங்களில் பின்தொடரும்போது அவன் சிந்தனையில் என்ன வகையான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் வசதி இன்றையக் கால குழந்தைகளுக்கு பள்ளியை விட்டு வெளியே வந்தபிறகும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் அவ்வப்பொழுது ஒரு பள்ளி, சார்பில் கூட்டப்படும் பழைய மாணவர்களின் சந்திப்புகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

அது ஏன் என்று உற்று நோக்கினால், என்னதான் சமூக வலைதளங்களில் உரையாடினாலும் என்னதான் பல கதைகள் பேசினாலும், நாம் படித்த பள்ளியில் மீண்டும் நாம் சந்திக்கும் பொழுது, மீண்டும் நாம் நம் நண்பனை நேருக்கு நேர் பார்க்கும்போது ஆரத்தழுவி கொள்கிறோம்.

Representational Image
Representational Image

உடல் ரீதியாக ஒரு இருத்தலை நமக்கு கொடுக்கிறது. அது மன ரீதியாக நம்மை ஆட்கொள்கிறது. ஆரத் தழுவிக் கொள்ளுதல் என்பது ஒரு உன்னதமான செயல். அந்த ஆரத் தழுவிக் கொள்ளும் வாய்ப்பை அந்த ஒரு உடல்ரீதியான தொடர்பை ஒரு சமூகவலைதளம் ஏற்படுத்துவதில்லை.

அதனால்தான் இன்றைக்கும் ஒரு பள்ளியின் அல்லது கல்லூரியின் Alumni Meet- கள் சுவாரஸ்யம் நிறைந்தவைகளாக குதூகலம் ஊட்டுவதாக, ஒரு பெரும் வாழ்க்கை கொண்டாட்டத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.

அத்தகைய ஒரு 'Alumni Meet' எங்கள் கடலூரில் உள்ள புனித வளனார் மஞ்சகுப்பம் பள்ளியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. பள்ளியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பிக்க ஆசிரியர்குழு சேர்ந்து இந்த Alumni Meet - ஐ ஏற்பாடு செய்திருந்தனர்.

பரந்துவிரிந்த ஒரு பள்ளி, அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெரிய மைதானம் உடைய ஒரு பிரம்மாண்டமான பள்ளி எங்களுடையது. எங்கள் பள்ளியில் நாங்கள் இறங்கி நடக்கும்பொழுது நாங்கள் எங்கள் பசுமை நிறைந்த நினைவுகளுக்கே போய்விட்டோம். எங்களின் ஆசிரியர்கள் பலரை நாங்கள் பார்த்தோம்; உரையாடினோம்.

School
School
Venkatesan.C

மீண்டும் எங்கள் வகுப்புகளுக்கு சென்று, நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருந்தோம், அங்கேதான் நின்றிருந்தோம், அந்த வாத்தியார் இதுமாதிரி நடத்துவார், இந்த வாத்தியார் அதுமாதிரி நடத்துவார், உனக்கு நினைவிருக்கிறதா அவன் அசிங்கப்பட்டது என்று பல கதைகள் பேசினோம்.

ஒரு நெகிழ்ச்சியான தினமாக இருந்த அன்று, வாழ்க்கையின் பல புது வெளிச்சங்களுக்கும் பல புது நகர்வுகளுக்கும் பல புது தொடர்புகளுக்கும் ஒரு வழியை அது சாத்தியப்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவர்கள் எல்லோரும் நண்பர்களாக ஏற்கெனவே இருந்தாலும் நேராக சந்திக்கும் பொழுது அந்த நட்பு புதுப்பிக்கப்படுகிறது அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஒரு நட்பு என்பது நமக்கும் அந்த நட்பில் நம்மோடு தொடர்பு கொள்ளும் இன்னொருவருக்கும் எவ்வாறு உருவாகிறது என்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு விஷயத்தை உணரலாம்.

ஒத்த கருத்துடையவர்களே நெருங்கிய நண்பர்களாக பெரும்பாலும் இருக்கிறார்கள். இதை நாம் எல்லா இடத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம், சரியாகவே இருக்கும்.

அன்று நிகழ்ந்த சம்பாஷனைகள்யாவும், எங்கள் வேலை சார்ந்த நெருடல்களில் இருந்தும் குடும்பச் சூழல் சார்ந்த வேலைகளில் இருந்தும் எங்களை முற்றும் விடுவித்தது. மனதை இலகுவாக்கியது. எதிர்காலக் கனவுகளை, எதிர்காலத்தில் எந்த இடத்தில் போயிருக்க வேண்டும் என்ற உரையாடலைத் தோற்றுவித்தது.

School
School
Dhanasekaran.K

அந்த உரையாடலின் பயனாக, இன்று மருத்துவராக இருக்கும் என் நண்பனின் வாயிலாக ஒரு மருத்துவ குழாமை சென்றடைந்தேன். ஒரு நிறுவனத்தில் விற்பனை துறையில் மேலாளராக உள்ள ஒரு நண்பனின் வாயிலாக, அதுசார்ந்த ஒரு நண்பர் குழாமை சென்றடைந்தேன். பெங்களூரில் மிக நல்ல நிறுவனத்தில் மிக உயரிய சம்பளத்தில் உள்ள என் மற்றொரு நண்பனின் வாயிலாக வேறு ஒரு நட்புக் குழாமை சென்றடைந்தேன்.

எங்கள் பள்ளியின் அந்த 150 ஆவது ஆண்டுவிழாவில் நிகழ்ந்த எங்கள் வகுப்பு 'Alumni Meet'-க்குப் பின்பு எங்களின் வாழ்க்கை போக்கே மாறியது. கலை, இலக்கியம், வரலாறு, நடப்பு அரசியல் என்று எல்லாவற்றையும் பேச எங்களை அது ஊக்கப்படுத்தியது. அன்று ஆனந்தக் கண்ணீருடன் அனைவரும் விடைபெற்றோம். இன்றும் தொடர்பில் இருக்கிறோம். அடிக்கடி எங்களுடைய ஊரின் கடற்கரையில் ஊருக்கு வரும்போது சந்தித்துக் கொள்கிறோம்.

Representational Image
Representational Image
Farrel Nobel on Unsplash

நாம் படித்து வெளிவந்த பள்ளிகள், ஒரு பெரும் கல்வி தாகத்தின் சாட்சியங்கள். நம்மை வாழ வைத்து விட்டு இன்று அதேபோல் சாதுவாக அமைதியாக பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் கட்டடங்கள். அது ஒரு ஆத்மார்த்த தொடர்பை என்றும் கோருகிறது. பள்ளிகள் ஞானத்தின் ஊற்றுக் கண்கள்.

- மணிசங்கரன். பா.ந

நெல்லிக்குப்பம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு