Published:Updated:

பச்சை சட்டையும் பளார் அறையும்..! - கோவா டைரீஸ் #MyVikatan

அறை - Representational Image
அறை - Representational Image ( Pixabay )

நப்பாசை யாரை விட்டது? விலை குறைவு என்பதால் அந்த இடத்திலேயே இடம் முன்பதிவு செய்தேன். கொஞ்சம் மல்லிசு என்பதால் கூட மூன்று நாள்கள் சேர்த்து பத்து நாள்களுக்குத் தங்கலாம் என்று முடிவு செய்தேன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"அப்பா, இந்த தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்ல கதவு திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப ஆரம்பித்தான்.

விடுமுறைக்கு பயணம் செய்யவேண்டும் என்று நீண்ட நாள் கனவு கண்டு வந்தாலும் கூட அந்த நாள் வந்தவுடன் எனக்கு லேசாக தலை சுற்றல் ஆரம்பித்து விடுகிறது. ஒரு பக்கம் எங்கே செல்வது என்று ஒரு குழப்பம். ஒரு நாள் டின்னருக்கு எந்த ஹோட்டல் செல்லலாம் என்பதற்கே ஒரு மணிநேரம் குழம்பும் நான், சுற்றுலா எங்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கும் முன் விடுமுறை முடிந்துவிடும்! ஒருவழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு ரயில் அல்லது விமான டிக்கட், விடுதி அறை, வாடகைக் கார் என்று ஒவ்வொன்றாக முன்பதிவு செய்வது என்பது குழப்பவாதியான எனக்கு கொடுமையான தண்டனை.

Tour
Tour
Pixabay

நல்லவேளையாக, இந்த முறை இடத்தை நான் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன். நிற்க. இது அப்பட்டமான பொய்! இடத்தை ஏற்கெனவே மற்றவர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.

"என்னடா, இத்தனை நாளில் ஒரு தடவை கூட கோவா போனதில்லையா?"

இந்க்த கேள்வியை ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் நண்பர்களிடம் இருந்து நானூறு முறையாவது நாராசமாகக் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது! அங்கு போகாமல் இருப்பது ஒரு குற்றம் போல மேலும் கீழும் பார்க்கிறார்கள். குழந்தைகளும் விடுமுறை என்றாலே கோவா, கோவா என்று ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் நண்பர்களும் அப்படித்தான் போல்.

அது என்னமோ தெரியவில்லை கோவா செல்ல இதுவரை பிராப்தி கிடைக்கவில்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதுபோல ஒருவருக்கு விடுமுறை கிடைத்தால் இன்னொருவருக்கு கிடைக்காது. அல்லது எல்லோரும் விடுமுறை எடுத்தால் யாராவது ஒருவருக்கு சொல்லி வைத்ததுபோல உடம்பு சரியில்லாமல் போய்விடும்.

ஒரு தடவை ஏற்பாடும் செய்து, அதிசயமாக முன் பதிவுகளும் செய்திருந்தேன். என் பெருமை எனக்கே தாங்காமல் தலைக் கனம் கொஞ்சம் தூக்கியபோது யார் கண்ணோ பட்டுவிட்டது! எங்கிருந்தோ சைக்ளோன் சூர்யாவோ, சுந்தரியோ ஒரு படுபாவிப் புயல் நாங்கள் செல்லவிருந்த நாள் பார்த்து கரெக்டாக கரையைக் கடப்பேன் என்று சொல்லிவிட்டது. நல்ல வேளையாக சிறிது முன்னமே தெரிய வந்ததால் கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சேன்சல் செய்துவிட்டோம்.

பீச் ஹோட்டல்
பீச் ஹோட்டல்
Pixabay

"டீல், டீல் என்று தள்ளுபடி விலையில் வாங்கினால் இப்படித்தான் சைக்ளோன் சமயத்தில்தான் கிடைக்கும்" கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கொண்டு சில நாள் இருக்கும் இடம் தெரியாமல் ஒதுங்கினேன். இந்த வருடம் அதற்கான பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். கோவா சென்றால்தான் மோட்சம்.

முன்பதிவு எல்லாவற்றையும் இன்டர்நெட்டில் செய்து விடலாம் என்பது நூற்றில் தொன்னூற்று ஒன்பது பேருக்கு மிகவும் சௌரியம். ஆனால் என்னைப் போன்ற சிலருக்கு மட்டும் மலச்சிக்கல்!

நண்பர்கள் யாரைக் கேட்டாலும், "அந்த ஆப் போ. ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம்" என்று சவடால் அடிக்கிறார்கள். அதில் என்னவோ ஆயிரக்கணக்கில் ஹோட்டல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆயிரம் ரிவியூக்கள்! ஒரு பக்கம் ஐந்து நட்சத்திர ரிவியூ பார்த்தால்,

"இந்த ஹோட்டல் சொர்க்கம்தான். வாசலில் தேவதைகள் ரத்தினக் கம்பளத்தில் பதவிசாக நடந்து வந்து வரவேற்றார்கள். பரிசுத்தமான கடல்வெளி, மேகமில்லா நீல வானம், கூட்டமில்லா நீச்சல் குளம் என்று ஒரே மிதப்பில் விடுமுறை சென்றது. அமோகமான இடத்தில் குழந்தைகள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்து அவர்களை வீட்டுக்கு அழைத்து வரவே மனமில்லை. அங்கே விட்டுவிட்டு வந்துவிட்டோம்!" என்கிற வகையில் ஒரே புருடாவாக இருக்கிறது! மறுபக்கம் அதே ஹோட்டலுக்கு ஒரு நட்சத்திர ரிவியூ படித்தால்,

"மோசமான ஹோட்டல். ஒரே மூட்டைப் பூச்சித் தொல்லை. கடல் பக்கம், ஐந்து நிமிடம்தான் என்றார்கள். ஆனால் அது ஹெலிகாப்டரில் சென்றால்தான் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மோசடிக் காரர்கள். போக்குவரத்து நெரிசலில், காரில் கடற்கரை செல்ல முப்பது நிமிடங்களுக்கு மேல் பிடித்தது" என்று ஒரேடியாக ஒப்பாரி! இதில் யாரை நம்புவது என்று குழம்புவதில் கண் மறைத்து விடுகிறது.

Sunset beach
Sunset beach

இரண்டு இரவுகள் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தேடியதில் கடைசியாக ஒரு நல்ல ரிசார்ட் மாட்டியது. எல்லாருமே ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்திருந்தார்கள். விலையும் கையைக் கடிக்காது போல் இருந்தது. "அப்பாடா" என்று மனைவியிடம் காண்பித்தால், "அதோ பார். யாரோ ஒரு நட்சத்திரம்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள். எட்டு தடவை பார்த்த என் கண்களுக்கு தெரியாத அந்த விமர்சனம் அப்படி அவளுக்கு மட்டும் தெரிந்ததோ! பார்த்தாச்சு. தலை விதி, படித்தாக வேண்டும்.

"இடம் சௌகர்யம், கடற்கரை அழகு. எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. ஆனால் விடுதியில் உணவு அருந்தும் இடத்தில் வேலை செய்பவன் ஒருவன் என்னை அறைந்துவிட்டான். தயவு செய்து இந்த விடுதியை தவிர்க்கவும்"

படித்தவுடன் மனைவி, "இந்த இடம் மட்டும் கட்டாயம் வேண்டாம்" என்றாள். நான் கடகடவென்று சிரித்துவிட்டேன்.

"இந்த மாதிரி நான் கேள்விப் பட்டதே இல்லை. யாராவது அறை வாங்கி நீ பார்த்திருக்கிறாயா? அவன் எதாவது திரிசமம் செய்திருப்பான்."

"நான் சொல்றது சொல்லிட்டேன். அப்பறம் அங்கபோய் ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நான் பொறுப்பில்லை" என்று விலகினாள்.

நப்பாசை யாரை விட்டது? விலை குறைவு என்பதால் அந்த இடத்திலேயே இடம் முன்பதிவு செய்தேன். கொஞ்சம் மல்லிசு என்பதால் கூட மூன்று நாட்கள் சேர்த்து பத்து நாட்களுக்கு தங்கலாம் என்று முடிவு செய்தேன்.

பதிவு செய்யும்போது, "வாடிக்கையாளர் கவனத்துக்கு: உங்கள் சௌகரியத்துக்காக நாங்கள் மதிய உணவு தருவோம். வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். இல்லை என்றால் எங்கு சுட்டவும்" என்றது. உடனே என் மனைவி "மத்திய உணவு கிடைத்துவிட்டால் ஒரு பெரிய தலைவலி தீரும். கட்டாயம் வாங்கிவிடு" என்று சொல்லிவிட்டு காச், மூச் என்று கத்திக்கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் பையனைக் கவனிக்க கிளம்பினாள். நான் உணவு வேண்டும் என்று சுட்டியவுடன் விலை திடீரென்று இரண்டு மடங்கு ஆகிவிட்டது. "ஆஹா, இப்படிதான் நீங்கள் ஊரை ஏமாற்றுகிறீர்களா?" என்று எனக்குள் புலம்பிவிட்டு உணவு இல்லாமல் தங்குவதற்கு மட்டும் பதிவு செய்துவிட்டு, அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

Hotel Stay - Representational Image
Hotel Stay - Representational Image
Pixabay

சிறு வயதில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு பெரிய பட்டியல் வரும். "அடுப்பு அணைச்சாச்சா? லைட் எல்லாம் அணைச்சாச்சா? வாசல் கதவு, பின் கதவு எல்லாம் பூட்டியாச்சா?". பட்டியல் நீண்டு கொண்டே போய் கிளம்புவதற்கு அரை மணி நேரம் ஆகும். இப்போது எல்லாவற்றையும் இன்டர்நெட்டிலிருந்தே கண்காணிக்கலாம் என்பதால் சுருக்கமாக 'கிளம்பி விடலாமா' என்றால் கிடையாது. அந்த கேமரா ஆன் செஞ்சாச்சா, இந்த கேமரா ஆன்லைன்ல இருக்கா, போஸ்ட் ஆபிஸ்ல டெலிவரி நிறுத்தச் சொல்லியாச்சா என்று நவீன பட்டியல் பழைய காலப் பட்டியலைப் போல நான்கு மடங்கு இருக்கிறது.

எல்லாம் ஒழிந்து அப்பாடா என்று கிளம்புவதற்குள் வாசலில் ஓலா டிரைவர் இரண்டு நிமிடத்துக்குள் வண்டியில் ஏறவில்லை என்றால் உங்கள் பதிவை கேன்சல் செய்துவிட்டு அடுத்த சவாரிக்குப் போய் விடுவேன் என்று பயம் காட்டுகிறான். ஓடிப் போய் ஏறிக் கொண்டு, பரமார்த்த குருபோல குடும்பத்தினரை எண்ணி எல்லோரும் ஆஜர் என்பதால் சற்று பெருமூச்சு விடும்போது பின்னாலிருந்து மனைவியின் குரல் "செக்யூரிட்டி அலாரம் ஆன் செய்தாயா?". சுத்தமாக ஞாபகம் இல்லை. தொண்டையில் கவ்விய ஒரு சிறிய பயத்தை முழுங்கி "எல்லாம் பண்ணியாச்சு" என்றேன்.

ரிசார்ட் மிகவும் நன்றாகவே இருந்தது. கடற்கரையும் ரம்மியமாக இருக்கவே குழந்தைகள் மணலை விட்டு நகர மாட்டோம் என்று சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சரி விடுதியில் இருந்து சாப்பாடு வாங்கி வரலாம் என்று சென்றேன். விலைப் பட்டியல் பார்த்ததும் மடேர் என்று மாரடைப்பு தாக்கியது! இரண்டு யானை விலை எல்லாவற்றுக்கும். இது சரிப்படாது, சற்று வெளியில் சென்று ஏதாவது ஒரு கடையிலிருந்து வாங்கலாம் என்று கிளம்பினேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு, இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் அலைந்து வாங்கி வருவதற்குள் எனக்கு இரண்டு வயது கூடிவிட்டது. குழந்தைகளும் பசி தாங்க முடியாமல் குறை சொல்லிக் கொண்டு மனைவியைப் படுத்தி எடுத்திருந்தனர். உணவைக் கண்டவுடன் முன்பின் பார்க்காதது போல் பறந்தடித்து மேய்ந்தனர்! இனிமேல் வெளியே சென்று வாங்கவேண்டாம். விலை அதிகம் என்றாலும் விடுதி உணவுதான் இனிமேல் என்று மனைவி கடுமையாக சொல்லிவிட்டாள்.

கோவா
கோவா

அன்றிரவு ஒரு யுக்தி ஒன்று தோன்றியது. மதிய உணவுக்கு அலையாமல், விடுதியில் காலை உணவு உண்டபிறகு அப்படியே கொஞ்சம் அமுக்கி அறைக்கு எடுத்து சென்றுவிடலாமே! கேட்டா குடும்பம் ஒற்றுமையாக தலையில் அடித்துக்கொண்டு "சில ஆயிரம் செலவு செய்து பல்லாயிரம் மைல்கள் பறந்து வந்துவிட்டு இப்படி சில்லறைத்தனமாக பழைய உணவை எடுத்து வந்தாவது சாப்பிடவேண்டுமா?" என்று புலம்ப ஆரம்பித்தனர். இருந்தாலும் எனது மூன்றாம் உலக வளர்ப்பு ஒரு சப்பைக்கட்டு கண்டுபிடித்து சமாதானம் செய்து கொள்ளச்செய்தது.

ஒவ்வொரு நாளும் காலை உணவு முடிந்தவுடன், சாப்பிட்ட தட்டில் மீதி இருப்பதற்கு மேல் கைக்கு அகப்பட்டதை அமுக்கி விடுவேன். இது பலரும் செய்யும் பழக்கம், தப்பில்லை என்றாலும் கொஞ்சம் மத்திய வர்க்க குற்ற உணர்ச்சி தலை தூக்க, யாரும் பார்க்காவிதம் பதவிசாக நடந்து அறை வந்து அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு கடற்கரை பக்கம் செல்வேன். அங்கு வேலை செய்யும் ஒருவன் என்னையே முறைத்து பார்ப்பது போல் ஒரு பிரமை ஒவ்வொரு நாளும். எனவே குனிந்த தலை நிமிராமல் அறை சென்று அடைவேன்.

Sunset Beach - Representational Image
Sunset Beach - Representational Image

இப்படி நான்கைந்து நாள்கள் நகர, இந்த விளையாட்டு கொஞ்சம் பழகிவிட்டது. ஒரு நாள் நான் மிகவும் தைரியமாக என் தட்டை எடுத்துக்கொண்டு நடக்கும் போது எதிரில் என்னை முறைக்கும் வேலையாள்! என்னவோ ஒரு தற்காப்பு உணர்வு எச்சரிக்கையில் தலை குனிந்து விரைவாக நடக்க ஆரம்பிக்கும் முன் நான் பயந்த அந்த நிகழ்வு நடந்துவிட்டது! சுதாரிக்கும் முன் என் கன்னத்தில் அவன் அறைந்த அறை சூடாக இறங்கியது.

என் கையில் இருந்த தட்டு பறக்க, நான் மறைத்து எடுத்து வந்த பிரட் துண்டுகள், ஜாம் வகையறா அந்தரத்தில் ஸ்லோ மோஷனில் பறந்து நீச்சல் குளத்தில் இளைப்பாரிக் கொண்டிருந்த இருவர் மேல் மற்றும் பக்கத்து மேசையில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் தட்டிலும் விழுந்து சகல குழம்பு வகைகளை அவர்கள் முகங்களில் தெறித்தது. அதிர்ச்சியில் அனைவரும் செய்வதை நிறுத்திவிட்டு என்னை கொலைவெறியுடன் முறைத்தனர். அனைவர்முன் அறை வாங்கியது மட்டுமல்லாமல் என் அமுக்கல் அம்பலமாகி விட்ட அவமானம் தாங்காமல் நான் குனிந்த தலை நிமிராமல் அறைக்கு ஓடி ஒளிந்தேன்.

அன்று நான் கடற்கரை பக்கம் செல்ல முடியாமல், அறையிலேயே படுத்துக்கிடந்தேன். மதியம் கதவு தட்டப்பட, கொஞ்சம் பயத்துடன் திறந்தேன். விடுதி மேலாளர்! ஐயையோ, கதி அதோகதிதான் என்று பயந்துக் கொண்டே அவரை உள்ளே அனுமதித்தேன்.

"இன்று காலை நீங்கள் அறை பட்ட விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார்.

போச்சுடா! என் வண்டவாளம் வெளிப்பட்டு விடும் என்று நினைத்தாலும் கொஞ்சம் தன்மானம் தலைதூக்க "நீங்கள் இப்படித்தான் விருந்தினரை உபசரிப்பதா?" என்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

Restaurant - Representational Image
Restaurant - Representational Image
Pixabay

"அறைந்தவன் என் மகன்தான். அவனுக்கு மனநிலை சரியில்லை. நீங்கள் அவனை தயவு செய்து மன்னிக்க வேண்டும். அவனுக்கு பச்சை நிறம் என்றால் மரண பயம். நீங்கள் எல்லா நாளும் விதவிதமான பச்சை நிறங்களில் சட்டை போட்டு கொண்டிருந்தீர்கள். அதனால் நீங்கள் அவனைக் கொல்லவந்த அடியாள் என்று நம்பிவிட்டான். உங்களிடம் பயந்து ஒதுங்கியே இருந்தான். இன்று அவன் ஒதுங்க இடம் கிடைக்காததால் உங்களைத் தாக்கிவிட்டு தப்பித்தேன் என்று என்னிடம் சொன்னான்."

ஹா! இது வேறு கதை போல இருக்கிறதே. அதனால்தான் என்னை அப்படி முறைத்தானா, என்று நான் நிமிர்ந்து கேட்கலானேன்.

"இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரிய வந்தால், எங்கள் இருவருக்கும் வேலை போய் விடும். நீங்கள் தயவு செய்து இந்த விஷயத்தைப் பற்றி புகார் செய்யாமல் இருந்தால் உங்களுடைய கட்டணத்தில் பாதியை தள்ளுபடி செய்கிறேன்" என்றார்.

நம்ப முடியாமல் வாயைத் திறந்து கேட்ட நான் ஒருமுறை என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். "அடித்ததுடா யோகம்!" என்று உள்ளுக்குள் கொண்டாடினாலும் "ஆகட்டும், யோசித்து செய்கிறேன்" என்று பிடி கொடுக்காமல் அவரை அனுப்பி வைத்து விட்டு அறைக்கதவு சாத்தியதும் "ஹூஹூ" என்று ஒரு குதி போட்டேன்.

கடற்கரையில் ஆடிவிட்டு பசியோடு, ஈரமாக வந்த குழந்தைகள், மேசை மேல் இருந்த வெறும் தட்டைப் பார்த்து ,"அப்பா, இன்றைக்கு சாப்பாடு எடுத்து வரவில்லையா?" என்று முகம் சுளித்தனர்.

"இல்லை! இன்று நாம் விடுதியிலேயே சாப்பிடப் போகிறோம்" என்றேன் பெருமையாக. "ஐஸ் கிரீம் சேர்த்து"!

பின்குறிப்பு:

1. இந்த மாதிரி ஏடாகூடமாக அவமானப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றால், மனைவி சொல்வதைத் தட்டாமல் கேட்கவும்.

2. அரை விலைக்கு விடுதி கிடைக்கும் என்றால் ஒரு அறை வாங்கினாலும் தகும் என்று நினைப்பீர்கள் என்றால், இருபத்து ஐந்து டாலர்களுக்கு ஒரு காசோலையுடன் என் முகவரியில் தொடர்பு கொள்ளவும். இந்த விடுதி விபரம் மற்றும் எந்த பச்சை நிறம் அணிந்தால் 'அறை' சர்வீஸ் கிடைக்கும் என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி (புனைப் பெயர்: கீமூ), சான் ஹோஸே , அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு