Published:Updated:

``எனக்கு இருக்க ஒரே பிரச்னை செல்பி போட்டோ சேலஞ்ச் தானுங்க..!’’ - வாசகரின் `தலை’ புராணம் #MyVikatan

குளிக்க ஆரம்பிக்கும் போது செல்பி சேலஞ்ச் பற்றிய கவலை வந்து போனது. திடீரென இப்படியோரு சிக்கல் வருமென நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. அது ஒரு பிரபலங்கள் எட்டிப்பார்க்கும் வாட்ஸ் அப் குரூப்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் பொன்முடி! பெயரில் முடி இருந்தாலும் தலையில் இல்லை! இப்போதைக்கு என் வயது, தொழில் பற்றியும் கவலை வேண்டாம்!

என் கவலையெல்லாம் இன்றைய வாட்ஸ அப் செல்பி போட்டோ சேலஞ்ச்! முகநூலில் கருப்புச் சட்டை சேலஞ்ச்! அதுவுமில்லாமல், மேனேஜர் நடத்தும் ஆபீஸ் ஆன்லைன் ஸூம் மீட்டிங்! இவ்வளவுதான்.

ஒரு மாதமாகத் தூங்கிவழிந்த முகத்தோடு அவற்றில் பங்கேற்பது மகாபங்கமாக முடியும்! லாக்டௌனில் லாக்கானது இந்த மேக்கப் சமாசாரம்தான்! எனக்கும் தான்!

இந்த மாதிரி மந்தமான நேரங்களில்தான் மேனேஜருக்கு ஆபீஸில் உள்ளவர்கள் முட்டாள்களாகவும், ஆபீஸில் உள்ளவர்களுக்கு மேனேஜர் முட்டாளாகவும் நினைக்கத்தோன்றும்!

கொரோனா நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடமே சித்தாவை நோக்கித் திரும்புங்கள் என்பதுதான். பச்சோந்தி கலர் மாறுகிறதோ இல்லையோ, எல்லா திசையிலும் அதன் கண்கள் திரும்புமாம்! நான் நேற்று வரை அலோபதி! இன்று சித்தா! கபசுர நீரில் ஆரம்பித்து குளியல் வரை எல்லாம் எனக்கு மாறிப்போனது!

Representational Image
Representational Image

இந்த லாக்டௌனில் எனக்குப் பிடித்த விஷயமே குளியல் தான்! முதலில் உடலை கூலிங் செய்யவேண்டும்! இரண்டாவதுதான் சோப்! காலின் அடிப்பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி நகர்ந்து நீரால் குளிர்விக்க வேண்டும். இறுதியாகத்தான் தலைப்பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும். இதுக்குப் பெயர்தான் அடி முதல் முடி வரை குளியல்! இதனால் முடி உதிர்தலைக் குறைக்க முடியும் என சவுரிசித்தர் சொன்னதாக நண்பன் சொன்னான்.

முடி உதிர்தலில் கொட்டிக்கிடக்கிறது, எனக்கு ஆயிரத்தெட்டுக் கவலைகள்!

ஆமாம், குளிக்க ஆரம்பிக்கும் போது செல்பி சேலஞ்ச் பற்றிய கவலை வந்து போனது. திடீரென இப்படியொரு சிக்கல் வருமென நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. அது ஒரு பிரபலங்கள் எட்டிப்பார்க்கும் வாட்ஸ்ப் குரூப்! அதில் தான் இந்தச் சிக்கல் ஆரம்பித்தது. அப்படியொன்றும் அதில் இருப்பவர்கள் எனக்கு யாரும் அறிமுகம் இல்லை. ஒரு கெத்துக்கு உள்ளே ஒட்ட வைக்கப்பட்டுள்ளேன். அந்த குரூப்பில் இருப்பது துக்கம் விசாரிக்கப்போய் பேசாமல் உட்கார்ந்து இருக்கிறது போலத்தான். ஒரு வருடமாக வாட்ஸப் குரூப்பில் நடைப்பழக்கம் அவ்வளவுதான்.

இந்த மாதிரி நெருக்கடியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன் புதிய செல்பி போட வேண்டும் என அவசர நிலை சுற்றறிக்கை அந்த குரூப்பில் உலா வர எனக்கு வியர்த்துக்கொட்டியது. காரணம், நான் டிபியாக வைத்திருப்பது பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோ! அதுவும் விழாவிற்கு ஏற்பாடு செய்ய மைக் டெஸ்டிங் செய்யும் போது க்ளிக் செய்யப்பட்டது. இது நாள் வரை என்னைப் பேச்சாளராக அடையாளப்படுத்தியிருப்பார்கள். அது கூட பரவாயில்லை, என் தலையில் அடர்த்தியான முடி இருப்பதாக உருவகப்படுத்தியிருப்பார்களே என்ன செய்வது?

Representational Image
Representational Image

இந்த செல்பி போட்டோக்களை யாராவது தவறாகப்பயன்படுத்த வாய்ப்புள்ளதே, அதைத்தவிர்க்கலாமே என வியாக்கியானம் பேசி நழுவப்பார்த்தேன். பிறரின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு சைபர் புல்லியிங் என்று பெயர். 2013-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் குற்றவியல் சட்டத்திருத்தம் மூலம் பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்தும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354யு என சேர்க்கப்பட்டதால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை உண்டு என வழக்கறிஞர் ஒருவர் அவர் பாணியில் குரூப்பில் கம்பு சுழற்றினார். இதெல்லாம் லாக்டௌனில் மற்றவர்களின் நட்டுக் கழன்றுபோன திருமுகங்களைப் பதிவேற்றச் செய்யும் தந்திரம் என எனக்குப் புரிந்தது.

வாட்ஸ்ப் குரூப்பில் பதிவிட்ட பிரகாசமான முகங்கள் நினைவுக்கு வந்து போயின. பலருக்கும் அடர்த்தியான முடி! இப்போது என்ன செய்ய? அரை வழுக்கையோடு செல்பி எடுப்பது பிரச்னையில்லை. தலையின் பக்கவாட்டில் ஒரு மாதமாகத் தொங்கும் ஜடாமுடியைப் பார்த்து ஸ்கூட்டர் மண்டையன் எனப் பட்டப்பெயர் வைத்துவிடுவார்களோ என்ற பயம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு தலையாய பிரச்னையாக இருப்பதே முடி உதிர்ந்து முன் நெற்றியில் வழுக்கை விழ ஆரம்பித்தது தான். நான் வெகுவாக கண்டுக்காமல் இருந்து வந்த சீப்பு, என்னுடைய சீஃப் செகரட்டரி லெவலுக்கு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட பிரபல மனநல மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்கப்போனேன். அது புகழ்பெற்ற மருத்துவமனை என்பதால் ஆயிரக்கணக்கில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். நுழைந்ததிலிருந்து எதிரில் வருபவர்களின் தலையை எல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதில் பாதிப் பேர் வழுக்கைதான். மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

சார்...முடிக்கொட்டுது...

அலோ பேசியா...

பேசிட்டு தானே இருக்கேன்...

நோ...நோ....அது முடி உதிர்வதால் தலை வழுக்கைக்கு அலோபேசியான்னு சொல்வோம்!

சொல்லுங்க...

Representational Image
Representational Image

உங்களுக்கு இருப்பது பிலாடொபோபியா அதாவது சொட்டை பற்றிய பயம்! பழகினா சரியாயிடும்! பலூனை ஒரு பக்கத்தில் அழுத்தினா மறுபக்கம் உப்புவது போல இதுக்கு மருந்து சாப்பிட்டா, வேற பிரச்னைகள் வரும்! என நிறுத்தினார்.

நான் காற்று போன பலூன்போல ஆனேன். டாக்டருக்கு குளோபோ போபியா போல! அதாவது அவருக்கு பலூன் மேல பயம்! அதனால்தான் பலூனைத் துணைக்கு அழைக்கிறார் என நினைத்தேன். பலூன் ஊதுவதும் அறிவுரை சொல்வதும் ஒன்றுதான்! ஓரளவுக்கு மேல் போனால் பலூன் வெடித்து விடும் என நினைக்க முட்டிய சிரிப்பை அடக்கிக்கொண்டேன்!

அவர் தொடர்ந்து வழவழப்பான என் முகத்தை ஆராய்ந்துகொண்டே பேச ஆரம்பித்தார். அதன் விரிவான சுருக்கம் இதுதான்.

அது மட்டுமல்ல! மூக்கில புழுதி போகாம தடுப்பது மூக்கில இருக்கிற முடிதான். காதில் உள்ள முடியை நீக்கிட்டா காதை சுவரோடு எவ்வளவு அழுத்தி ஒட்டுக்கேட்டாலும் உங்களுக்குக் காது கேட்காது. அக்குள் முடி உடம்பின் தட்பவெப்ப நிலையைச் சீராக்குது. இருக்கிறது இருக்கட்டும்! போறது போகட்டும்! நீங்க போலாம்!

எனச்சொல்லி முடித்த அறிவுரையில் முடியை முற்றிலும் நீக்கும் முன் யோசிக்க வேண்டும் என்றும், நான் முடிவெட்டுவதில் காட்டும் அக்கறையை முடிவெடுப்பதில் காட்டுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது விஷயம் வேடிக்கையானது! கொஞ்சம் குரூரமானது கூட. கார் வாங்கிய புதிதில் அந்த காரை புதுப்பொண்டாட்டியைத் தாங்குவது போலக் கவனிப்பதாக மற்றவர்கள் பொறாமைப்பட்டனர். வாங்கிய, இரண்டாம் மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமையன்று எதேச்சையாக வெளியே வந்த எதிர்வீட்டுக்காரரின் உதவியோடு ரிவர்ஸ் எடுக்கும் போது ஒரு கல்லில் மோதி அரை அடிக்கு ஒரு சாய்வான நீளக்கோடு. ஆத்திரத்தில் ரைட் சொன்ன எதிர்வீட்டுக்காரரை லெப்ட் ரைட் வாங்கினேன். கடைசியா அவர் என்னை எல் போர்டு எனத் திட்டியதோடு எதிரியாகி அவரின் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. அந்தக் கீறல் துக்கத்திலிருந்து விடுபட எனக்குப் பல நாள்கள் ஆனது. அதற்குப்பிறகு எந்த காரைப் பார்த்தாலும் கீறல் இருக்கிறதா? என நோட்டமிடுவேன். சின்னக்கீறல் இருந்தால் கூட மனதுக்குள் சிரித்துக்கொள்வேன்! நிம்மதியாக இருக்கும்!

Representational Image
Representational Image

தலை லட்சணமாக இருக்கக்காரணம், தலையில் ஒரு லட்சம் முடி வளருவதுதான்! உடம்பு முழுவதும் 49 லட்சம் முடி இருக்கும்! தலையைச் சீவிட்டு சீப்பில் வரும் முடியைப்பத்திக் கவலைப்படுவோம். ஒரு நாளைக்கு 20 முடி விழலாமாம். ஆபீஸ்க்குக் கிளம்பும் அவசரத்தில் முடியை எண்ணிட்டு இருக்க முடியுமா? அதனால், ஒரு வெள்ளைத்தாளில் அதைப் போட்டோ எடுத்து தினமும் ஒப்பிட்டுப் பார்ப்பேன்! அதுதான் நான் முடிக்கொட்டுவதைக் கண்டுப்பிடிக்கப் பின்பற்றும் எளிய வழிமுறை!

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது, எங்க ஆயிலை தலைக்குத் தடவுங்கள்! முடி வளரும் என்ற விளம்பரங்களுக்குத் தான் மிகப்பொருத்தம். ஆயில் முடியும்! ஆயுளும் முடியும்! முடிவில்,முடி வளராது. எனக்கு அப்படிதான் முன் நெற்றியில் காலியிடம் தென்பட ஆரம்பித்தது.

இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் தலைமுடியைப் பார்த்துப் பேசப் பழக்கப்பட்டேன். பாரதி சொன்ன நேர்கொண்டப் பார்வையைத்தாண்டி என் பார்வை 45 டிகிரிக்கு மேல் போனது. அந்தக் கோணத்தில் வீசும் பொருள்கள் நீண்ட தூரம் போய் விழும் என்பது அறிவியல் தத்துவம்.

இத்துடன் என் முடிப்பிரச்னை முடிவதாக தெரியவில்லை. முன் நெற்றியின் பக்கவாட்டில் காதுக்கு நேர் மேலாக ஒரு வெள்ளை முடி மிளிர ஆரம்பித்தது. அப்போது கண்ணாடி முன் நின்று அஷ்டக்கோணலில் பிடுங்கி அதை மேலும் கீழும் ஆராய்ந்து தூக்கி வீசியதிலிருந்துதான் எனக்கான அடுத்தக் கவுன்டௌன் ஆரம்பமானது. இயற்கை என்னவொரு சூழ்ச்சி செய்து வைத்திருக்கிறது பாருங்களேன்! வெட்டினால் வலிப்பதில்லை, பிடுங்கினால் வலிக்கிறது!

Representational Image
Representational Image

ஓரிரு வருடங்களுக்குள்ளாக திருஷ்டிப்பொம்மையில் தொங்கும் ஜடைபோல பக்கவாட்டில் காதுகளுக்கு அருகில் முடி பட்டொளி வீசிப் பறந்தது! பிசிராந்தையார் என்ற சங்கப்புலவருக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லையாம். அதற்குக்காரணம் அவர் நாட்டின் அரசன், நண்பர்கள் எல்லோரும் பத்தரைமாற்றுத் தங்கங்களாம்! எந்தக் கவலையும் தரவில்லையாம்! நமக்கு வாய்ந்த சுற்றமும் நட்பும் அப்படியா என்ன? நான் எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. ஏன், எந்த வேலையும் செய்யாத சோம்பேறி எனக்கூட வைத்துக்கொள்ளலாம். எனக்கு முடி கருப்பாக இருக்க வேண்டுமல்லவா?

அதனால், உற்றார் உறவினரைத் திருத்த முயற்சி செய்தேன். பாதிப் பேர் நல்லவர்களாக மாறினால் கூட பாதி பிசிராந்தையார் ஆகிவிடலாம் என்ற பேராசை! பொன்முடி! உன்முடி வெள்ளையாக இருக்க உரோமப் புரதத்தில் இயுமெலானின் சுரப்பு குறைவு, உன் இறப்பு வரை இதுதான்! ஒரு வேளை ஃபியோமெலானின் ஜாஸ்தியாக இருந்தால் பொன்முடி வளரும்| எனக்கூறிக் கிண்டல் செய்தனர். நரைமுடி முதுமையின் கீரிடம் என்கிறது பைபிள். அதை நினைத்து ஆறுதல் படுவேன்.

பிறகு, என்னை விட பத்து வயது மூத்தவர்கள் எல்லாம் கனக்கச்சிதமாக அலங்காரத்தில் அலைமோதுவதைப்பார்த்து நானும் தலைக்கு டை அடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். ஒரு நாள் வீசிக்கிடந்த டை பாக்கெட்டில் உள்ள விவரங்களை நுனிப்புல் மேய ஆரம்பித்தேன். பாராஃபினைலின் டையமின் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது எனப் படித்தேன். உடனே, கூகுள் ஆண்டவனிடம் இதைப்பற்றி முறையிட, அவனோ இது ஒரு புற்றுநோய்க்காரணி எனச் சொல்லிவிட்டான். அப்போது மட்டும் இனி மேல் டை அடிக்கக்கூடாது என நினைத்தேன்.

Representational Image
Representational Image

தலைக்கு டை அடித்து விட்டு அதைக் காய வைக்கக் குறைந்தது அரை மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும். அந்த சமயத்தில்தான் மறந்து போய் போனை காதில் வைப்பதும், கண்ணாடி போடுவது நடப்பது உண்டு. டை வறண்டத் தலையைக் கழுவப் பல பிராண்டு ஷாம்புகள் பயன்படுத்தி முடி உதிர்தலுக்கு எதிரான உச்சக்கட்டப்போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். என் தலை பார்க்காத பிராண்டு ஷாம்புகளே இல்லையென அடித்து என் வழுக்கைத் தலையில் அடித்து சத்தியமே செய்யலாம்.

அவ்வாறு கடைசியாக வாங்கிய வெளிநாட்டு ஷாம்பை தலைக்குப் பூசிக்கொண்டே, ஷாம்புக்குத் தமிழிலில் என்னவா இருக்குமுன்னு என யோசித்தேன். தலைமுடி நுரைப்பான்! ச்சீ! இப்படிக் கேட்டால் கடைக்காரன் முறைப்பான் எனச் சிரித்துக்கொண்டே கண்ணை மூடியவாறு குழாயைத்தேடிப்பிடித்துத் திருகினேன். தண்ணீர் வரவில்லை!

தலைக்கு ஷாம்பு போட்ட பின்னாடி பைப்பில தண்ணி வராது போறதும், நாம லீவு எடுத்த அண்ணிக்கு மேனேஜர் ஆபீஸ் வராத போறதும் அவனவன் செஞ்ச போன ஜென்மத்து பாவமாதான் இருக்கணும்! தண்ணீர்த்துளிகள் விழும் |டொக் டொக்| என்ற ஓசை என் காதில் செல்பி எடுக்கும் |க்ளிக் க்ளிக|; என்ற ஓசை போல விழுந்தது.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு