Election bannerElection banner
Published:Updated:

செவ்வாய்,வெள்ளி,சூரியன்..! - மலைக்க வைக்கும் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் #MyVikatan

Representational Image
Representational Image

விண்வெளி ஆய்வுகள் தொடரத் தொடர ஆச்சர்யங்களும் தொடர்கின்றன.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விண்வெளி... மனிதனுக்கு ஆச்சர்யங்களைத் தொடர்ந்து அள்ளித்தெளித்துக் கொண்டே இருக்கும் அட்சயபாத்திரம். விண்வெளி ஆய்வுகள் தொடரத் தொடர ஆச்சர்யங்களும் தொடர்கின்றன.

1969-ல் விக்ரம் சாராபாயின் கடின முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ(ISRO - The Indian Space Research Organisation), தற்போது கம்பீரமாக நாலு கால் பாய்ச்சலில், ராக்கெட் வேகத்தில் பயணித்து வருகிறது.

இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் இருப்பது, தமிழர்களுக்குக் கூடுதல் பெருமை அளிக்கக்கூடிய ஒன்று.

இஸ்ரோவின் எதிர்கால விண்வெளிப் பயணத்திட்டங்கள் நமக்கு மலைப்பைத் தரக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றுள் சில...

Solar Family
Solar Family
Pixabay

மங்கள்யான் - 2 (Mangalyaan-2)

மங்கள்யான் - 2 செயல்திட்டம் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மறுபடியும் ஒரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மங்கல்யான் -1-ன் அபார வெற்றி காரணமாக 2024 இறுதிக்குள் மங்கள்யான் - 2 விண்கலம் செவ்வாய் நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கள்யான் - 2 பூமியின் அண்டை கிரகமான செவ்வாய் பற்றி ஆழமாக ஆய்வு செய்து, சிவப்பு கிரகத்தின் ஆழ்மனதின் ரகசியங்களையும், பரிணாமத்தையும் நன்கு புரிந்துகொள்ள முயலும்.

செவ்வாயில் மீத்தேன் இருப்பதை உறுதிப்படுத்தும் சோதனைகள், வளிமண்டலம், நீர் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு குறித்த ஆய்வுகள், செவ்வாயின் மேற்பரப்பு ஆய்வு உள்ளிட்டவை மங்கள்யான் - 2 விண்கலத்தின் மிக முக்கியமான பணிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகப் பரிணாம செயல்முறைகள், சூரிய மண்டலத்தில் வேறு எங்கேனும் உயிரினங்கள் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள், புவியியல் மற்றும் சாத்தியமான உயிரியல் வரலாற்றிற்கு இடையிலான இடைவெளி ஆகியவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பை மங்கள்யான் -2 இஸ்ரோவிற்கு வழங்க வாய்ப்புண்டு.

மேலும், புவியியல், உயிரியல் துறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் தீர்வுகாண மங்கள்யான் - 2 முயலும். ஆர்பிட்டர் மட்டுமல்லாது, செவ்வாயில் லேண்டர் மற்றும் ரோவரை இறக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட வாய்ப்புண்டு.

GSAT-4 with one of its solar arrays deployed
GSAT-4 with one of its solar arrays deployed
ISRO

சுக்ரயான்-1 (Shukrayaan-1)

பூமியின் இரட்டை சகோதரியான வெள்ளியை ஆய்வு செய்ய இஸ்ரோ சுக்ரயான்-1 என்னும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. பூமி மற்றும் வெள்ளி இரண்டும் அளவு, நிறை, அடர்த்தி, மொத்தக் கலவை மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றில் மேம்பட்ட சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. எனவேதான், இவை இரட்டை சகோதரிகள் எனப்படுகின்றன.

குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வெள்ளியைச் சுற்றிவரும் வகையில் சுக்ரயான்-1 விண்கலத்தைப் பறக்கவிட்டு வெள்ளி குறித்து இஸ்ரோ ஆராய உள்ளது. வெள்ளிக்கோளின் உருவாக்கம், அதன் வளிமண்டலம் மற்றும் சூரியக் காற்றோடு அதன் தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள சுக்ரயான்-1 முயலும்.

வெள்ளியின் மேற்பரப்பு அம்சங்கள், வளிமண்டல வேதியியல், இயக்கவியல் மற்றும் தொகுப்பு மாறுபாடுகள், சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் காற்றோடு வளிமண்டலத் தொடர்புகள் குறித்தும் சுக்ரயான்-1 ஆராய வாய்ப்புண்டு. சுக்ரயான்-1, 2023 காலகட்டத்தில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் - 3 (Chandrayaan-3)

சந்திரயான் பற்றி அறியும் முன் இவற்றைப் பற்றி ஓர் எளிய விளக்கம்...

ஆர்பிட்டர்: கோள்களைச் சுற்றிய வண்ணம் ஆய்வு செய்யும்.

லேண்டர்: அயல் கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாகத் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ரோவர்: அயல்கிரகத் தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும்.

சந்திரயான் - 3 என்பது சந்திரயான் - 2 மிஷனின் ரிப்பீட். சந்திரயான் - 3-ன் உள்ளமைவு, அதன் முன்னோடி சந்திரயான் -2ஐ ஒத்திருக்கும். சந்திரயான் - 2-ஐப் போன்றே ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மட்டுமே சந்திரயான் - 3ல் இருக்கும். ஆர்பிட்டர் இருக்காது.

ISRO
ISRO

ஏனெனில் சந்திரயான் -2-ன் ஆர்பிட்டர் தற்போது நல்ல நிலையில் சந்திரனைச் சுற்றி வந்து ஆய்வு செய்தவண்ணம் உள்ளது. இது தொடர்ந்து பல ஆண்டுகள் செயல்படக்கூடியது. எனவே சந்திரயான்- 3ன் இணைப்பிற்கும் இந்த ஆர்பிட்டரே போதுமானதாக இருக்கும்.

சந்திரயான் - 2 லேண்டர் மற்றும் ரோவரின் எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, சந்திரயான் - 3ன் மூலம் சந்திரனில் ஒரு வெற்றிகரமான, மென்மையான தரையிறங்கலுக்கு இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பரில் சந்திரயான்- 3 ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"நம்முடைய இலக்கு வலிமையாக இருப்பின் தோல்விகளை முற்றிலும் தவிர்க்க முடியாது" என்று சொன்ன ஐயா அப்துல்கலாம் வரிகளுக்கு ஏற்ப, வலிமையான இலக்கு கொண்ட சந்திரயான்-2ன் செப்டம்பர் 2019 பின்னடைவு அனுபவத்திலிருந்து, இஸ்ரோ பல தரையிறங்குதல் நுட்பங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. எனவே சந்திரயான் - 3 நிச்சயமாக சாஃப்ட் லேண்டிங்காகத்தான் இருக்கும்!

ஆதித்யா - L1(Aditya-L1)

ஆதித்யா... சூரியனை அறிவதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கலம். இதன்மூலம் சூரியனின் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய SUIT (Solar Ultraviolet Imaging Telescope) எனப்படும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் நிறுவப்பபடும்.

சூரிய ஒளிக்கதிர், குரோமோஸ்பியர் மற்றும் நமது சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் குறித்த ஆய்வுகளை ஆதித்யா - L1 மேற்கொள்ளும் என நம்பப்படுகிறது. விண்வெளி வானிலை பற்றிய நுண்ணறிவுகளை வளர்ப்பதும், சூரியனின் வெப்பம் மற்றும் வெப்ப அடுக்குகள் பற்றி அறிந்துகொள்வதும் ஆதித்யா - L1 விண்கலத்தின் நோக்கமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் ஆதித்யா - L1 ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Representational Image
Representational Image
Bryan Goff on Unsplash

ககன்யான் (Gaganyaan)

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம், ககன்யான்.

(இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா 1984-ல் விண்வெளிக்குச் சென்றது சோவியத் யூனியனின் விண்கலத்தில்)

2022-ம் ஆண்டில் இப்பயணத்தைச் சாத்தியப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ககன்யான் பயணத்தில் மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பயணத்திற்கான வீரர்கள் பயிற்சி மற்றும் விண்வெளி உடைகள் உள்ளிட்டவற்றிற்கு ரஷ்யா உதவுகிறது. விண்வெளி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு ஒரு விண்வெளி காப்ஸ்யூலில் வாழ வேண்டும். சந்திரயான் -2 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் எம்.கே - 3(GSLV Mark 3) மூலமாக இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்திய விமானப்படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 போர் விமானிகள் இந்தப் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேர் விண்வெளியில் சென்று ஒரு வாரம் பூமியைச் சுற்றி வந்து மைக்ரோ ஈர்ப்பு மற்றும் உயிர் அறிவியலில் சோதனைகளை மேற்கொள்வார்கள்.

GSLV-F10 / GISAT-1
GSLV-F10 / GISAT-1
ISRO

விண்வெளித் துறைக்குச் செய்யப்படுபவை செலவுகள் அல்ல! இவை எதிர்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முதலீடுகள்.

விண்வெளித் துறையின் சாதனையை, பணத்தின் மதிப்பைக் கொண்டு மட்டுமே அளவிட முடியாது. விண்வெளி குறித்து நாம் அறிந்துகொண்ட பதில்களைக் கொண்டே விண்வெளித் துறையின் வெற்றி எப்போதும் கணக்கிடப்படும். அந்த வகையில் விண்வெளி குறித்த பல கேள்விகளுக்கும் ஆச்சர்யமும், சுவாரஸ்யமும் நிறைந்த பதில்களை இஸ்ரோ தொடர்ந்து கண்டறிந்து வருகிறது!

ஆய்வுகள் தொடரட்டும்! ஆச்சர்யங்கள் பெருகட்டும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு