Published:Updated:

`மழையும் பஜ்ஜியும் பின்னே காகிதக் கப்பல்விட்ட நானும்!' - வாசகரின் `ஜில்' பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

காற்று சற்று குறைந்தது மழையின் வேகம் கூடியிருந்தது... குளிரும் சற்றே கூட எழுந்து இன்னுமொரு கப் டீ எடுத்து வரச் சென்றேன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ன்று விடுமுறை... அந்த இரண்டு மாடி வீட்டின் மாடியில் இருக்கும் எங்களுக்கு என்றுமே காற்றுக்குப் பஞ்சமில்லை. மனைவியின் கைப்பக்குவத்தில் மத்தியானம் சாப்பிட்ட சுவையான உணவும் கருணையாய் வரும் கடல்காற்றும் கண்களை அசத்தியது.

திடீரெனக் கேட்ட இடியோசை தூக்கத்தைக் கலைத்திருந்தது. இப்போதெல்லாம் மழையைப் பற்றி அறிந்துகொள்ள ஃபேஸ்புக்கே போதுமென்பதால் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு மொபைலில் ஃபேஸ்புக்கில் மழை நிச்சயம் பெய்யும் எனப் படித்தவுடன் மனைவியிடம் கெஞ்சி சூடாய் பஜ்ஜியும் இஞ்சி டீயும் கேட்டு பஜ்ஜியை நானும் டீயை அவரும் தயாரிப்பதாய் ஒப்பந்தம் போட்டோம்.

Representational Image
Representational Image

பஜ்ஜிக்கான பொருள்களை ரெடி செய்தேன்... டீத்தூள், இஞ்சி ஏலக்காய் எல்லாம் போட்டு.. நினைக்கும் போதே நாவில் சுவை பரவியது.

மேகம் சேர்ந்து சூரியனை மறைத்திருந்தது. இருளுடன் குளிர் சேர மழை பலத்த காற்றுடன் ஆரம்பித்திருந்தது.

கடலைமாவும் அதனுள் பொதிந்துள்ள வாழைக்காயும் மரச்செக்கில் ஆட்டி எடுத்த சூடான அந்தக் கடலையெண்ணையில் உள்நீச்சல் அடிக்கும்போது அந்த அருமையான முறுகும் மணம் அந்தக் குளிருக்கு யார் நாவிலும் மழை பொழியும்.

இந்தப் பக்க பர்னரில் டீ ஸ்பெஸலிஸ்ட்டின் சரியான அளவில் தட்டிப் போடப்பட்ட இஞ்சியும் ஏலக்காயும் பால் டீத்தூள் சர்க்கரை சேர்ந்த அந்த அமிர்த கரைசலின் மணம் சாதாரண மழையையும் பெருமழை ஆக்கிவிடும்.

வராண்டாவின் கம்பி வலைகளுக்கு அப்பால் ஆர்ப்பரிக்கும் மழையும் காற்றினால் வரும் அதன் பூஞ்சிதறல்களும் அருவிக்கரையிலோ அல்லது அலைச்சிதறல் பறக்கும் கடற்கரையையோ நினைவுப்படுத்தியது.

அளவாய் முறுகிய சூடான பஜ்ஜிகளும் கப் நிறைந்த இஞ்சி ஏலக்காய் டீயும் மேலும் சூழலை ரம்மியமாக்கியது.

`ஒரு கடி ஒரு குடி' என்ற சுவையான இலக்கணப்படி ருசித்துக்கொண்டிருந்தோம். இடையிடையே காதை எட்டும் இடியும் தூரமாய்த் தெரியும் மின்னலும் என்ன ஒரு அழகு.

Representational Image
Representational Image
Jonathan Kemper / Unsplash

காற்று சற்று குறைந்தது மழையின் வேகம் கூடியிருந்தது. குளிரும் சற்றே கூட எழுந்து இன்னுமொரு கப் டீ எடுத்து வரச் சென்றேன். மழைச்சாரலில் நானும் சற்றே நனைந்திருந்தேன்.

மொபைலில் பாரதியின் பாடல்களைப் போட்டு விட்டு டீயை சற்று சூடாக்கி கப்பில் நிறைத்தேன்.

வரும் வழியில் பெட்ரூம் நோக்கி பார்வை செல்லவே தண்ணீர் கண்ணில்பட்டது. சன்னல் திறந்திருக்குமோ என ஓடிச்சென்று பார்த்தேன், எல்லாம் மூடியேயிருந்தது.

சன்னலின் அருகே ஏற்பட்டிருந்த சிறு சிறு கீறல்களின் வழியாக நீர் கசிந்துகொண்டிருந்தது. கட்டிலைச் சுற்றி சிறிய குளமே உருவாகியிருந்தது.

"கேணி அருகினிலே" ....பாரதியின் வரிகள் காதில் விழுந்தது... "கட்டில் அருகினிலே சிறு கேணியைக் காணீரோ" .....

மனம் பாட ஆரம்பித்தது...

நீர்வரத்து அதிகமாக அது ரூமிலிருந்து ஹாலுக்குள் பிரவேசித்தது.... ஏதோ காவிரியே தமிழகத்திற்குள் நுழைந்தாற் போன்ற மகிழ்ச்சி.

Representational Image
Representational Image

பழைய நோட் ஒன்றிலிருந்து பேப்பரைக் கிழித்து ஆறேழு கப்பல் செய்து ரூமிலிருந்து ஹாலுக்கு ஓட்டி மகிழ்ந்தேன். இப்போது, ``மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" எனக் காதில் விழ நானும், "ஹாலின் கடல் முழுதும் கப்பல் விடுவேன்" எனச் சத்தமாகவே பாடினேன்.

பிறகென்ன.. கோல நோட்டைக் கிழித்து கப்பல் விட்டதற்காக அன்பாய்க் கிடைத்த பரிசு தனி ஒருவனாய் நான்கு பக்கெட் தண்ணீர் எடுத்தேன் (துடைத்தேன்!) அப்போதும், ``தனி ஒருவனுக்கு மாப் இல்லையெனில் துணியினில் துடைத்திடுவோம்" எனப் பாடிய மனதைத் திட்டிக்கொண்டே.!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு