Published:Updated:

ராகவன் சார்! - வாசகரின் நெகிழ்ச்சிப் பதிவு #MyVikatan

எனது அப்பாவும், ராகவன் சாரும் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே ஸ்கூலில் வேலை செய்கிறார்கள்.

Representational Image
Representational Image ( Image credits : Pixabay )

``நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க" கல்யாண மண்டபத்தில் பாடல் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நானும், என் அப்பாவும் ராகவன் சார் வீட்டு முன்னால் நின்று கதவைத் தட்டிக்கொண்டிருந்தோம். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டுக் கதவைத் திறந்தார். ``மண்டபத்துக்குப் பக்கத்துல வீடு புடிச்சது பெரிய தப்பாகிப் போச்சு, இரண்டு நாளைக்கு காதுல பஞ்சை வைச்சிகிட்டுதான் நடமாடணும், உள்ள வாங்க" என்றார்.

Representational Image
Representational Image

நானும் என் அப்பாவும் உள்ளே சென்றதுமே போய் சேர் எடுத்துப்போட்டார்.

"யார் கல்யாணம் என்னன்னு தெரியலை சார், காலைலருந்து பாட்டுச் சத்தம்தான்; தலைவலிக்குது" என்றார்.

"வீட்டைக்காலி பண்ணிட்டு வேற வீடு தேடுங்க" என்றார் என் அப்பா.

``அங், இதான் சார் எனக்கு சவுகர்யமா இருக்கு, ஸ்கூல் பக்கம், பஸ் ஸ்டாப் பக்கம், மார்க்கெட் பக்கம்" என்றார்.

அப்போது அவர் மனைவி "வாங்க" என்று சொல்லிவிட்டு டீ, மிக்சர் வைத்துவிட்டுப் போனார்.

எனது அப்பாவும், ராகவன் சாரும் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே ஸ்கூலில் வேலை செய்கிறார்கள். எனது அப்பாவுக்கு அவர் நல்ல நண்பரும் கூட. அடிக்கடி அவர் எங்கள் வீட்டுக்கு வருவார். நாட்டு நடப்புகள், அரசியல், விளையாட்டு, அன்றைக்கு ஸ்கூலில் நடந்த விஷயங்கள் என்று நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பேச்சின் இடையிடையே என்னைப் பார்த்தும், `எந்த ஸ்கூல்ல படிக்கிற, என்ன கிளாஸ்ல படிக்கிற, எத்தனாவது ரேங்க்' எல்லாம் கேட்பார்.

Representational Image
Representational Image

ராகவன் சார் எப்போதுமே பளிச்சென்ற வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார். வாயில் வெற்றிலையை மென்றுகொண்டே இருப்பார். ஏதாவது பாடல்களை முணுமுணுத்துக்கொண்டே இருப்பார். `ரிடையர்டு ஆன பிறகு கச்சேரிகள் பண்ண வேண்டும்' என்ற ஆசையில் இருந்தார். ராகவன் சாரின் ஒரே மகள் சென்னையில் படித்துக் கொண்டிருந்தாள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவாள். நான் ஒரே ஒரு முறைதான் அவளைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் எனது அப்பாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக ஸ்கூலுக்குப் போயிருந்தேன். Staff room ல் ராகவன் சார் மட்டுமே உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

"வாடா தம்பி" என்றார்.

"உங்கப்பா வர்றதுக்கு அரை மணி நேரத்துக்கு மேலாகும், இங்கேயே வச்சிட்டுப் போ" என்றார். வைத்துவிட்டு வந்தேன்.

எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் கோயிலுக்கு வந்துவிடுவார் ராகவன் சார். அவருக்கு எல்லா மந்திரங்களும் அத்துப்படி. கோளறு திருப்பதிகம், சிவபுராணம், தேவாரம் என்று எல்லாவற்றையும் மனப்பாடமாய்ப் பாடுவார். கோயிலில் வைத்து என்னைப் பார்த்தாலும் அதிகம் பேசியதில்லை. கொஞ்சமாய் சிரிப்பார்.

Representational Image
Representational Image

ஒரு நாள் கோவியில் வாசலில் ராகவன் சார் நின்றுகொண்டிருந்ததைக் கவனிக்காமல் நான் சிதறு தேங்காய் பொறுக்கிக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு, `இனிமேல் இதெல்லாம் பண்ணக்கூடாது' என்றவாறே நகன்றார்.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தார். எனது அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே ஊரில் எலக்சன் ட்யூட்டி போட்டிருந்தார்கள். தினமும் எங்கள் வீட்டிலிருந்து ஒண்ணாகக் கிளம்புவார்கள். ஒரு நாள் வந்தவுடன் என்னைப் பார்த்துக்கேட்டார்.

"எத்தனாவது ரேங்க்?"

"4th" என்றேன்.

"அடுத்து எப்படியாவது First Rank வாங்கணும்" என்றார்.

`சரி' என்று தலையாட்டினேன்.

கொஞ்ச நாள்களிலேயே அந்த வருடத்தின் சுதந்திர தினம் வந்தது. எனது அப்பாவின் ஸ்கூலுக்குப் போயிருந்தேன். கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது எனக்குப் பின்னாலேயே நின்று எனது சட்டைப்பைக்குள் சாக்லேட்களை சத்தம் வராதபடி ராகவன் சார் போட்டார். எனக்கு அவர் போட்டது தெரிந்து பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

Representational Image
Representational Image

`தெரியாம போடலான்னு பாத்தா கண்டுபிடிச்சிட்டியேடா" என்று சிரித்துக்கொண்டேயிருந்தார்.

முதலில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தவர், நாங்கள் வீடு மாறிய பிறகு என்றோ ஒரு நாள்தான் வந்தார். ஏதாவது முக்கியமான விஷயத்துக்கு மட்டும்தான் வருவார். கடைசியாக ஆறு மாதத்துக்கு முன்புதான் வந்திருந்தார். எதிர்பாராத விதமாய் Heart Attack வந்திருந்ததால் அதிகமாய் வெளியே போவதைக் குறைத்தார்.

தனது ஒரே மகளுக்கு எப்படியாவது சீக்கிரமாய் கல்யாணம் வைத்துவிட வேண்டும் என்று தீவிரமாய் வரன்கள் பார்க்கத் தொடங்கினார். அவர் நினைத்த மாதிரியே நல்லபடியாக வரன் கூடிவந்தது.

ஒரு நாள் காலையிலேயே பத்திரிகையோடு எங்கள் வீட்டுக்கு வந்தார். நான் அப்போது சின்னச் சின்ன இரும்புக் குண்டுகளை நடு வட்டத்துக்குள் போடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தேன். வெடுக்கென அதை என் கையிலிருந்து புடுங்கி எனது அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு, `படிக்கிற நேரத்துல இதெல்லாம் குடுக்காதீங்க' என்றார். பிறகு சேரில் உட்கார்ந்து விட்டு சொன்னார், ``ஆண்டவன் தயவுல நல்ல வரன் அமைஞ்சிருக்கு. மாப்பிள்ளை டாக்டரா இருக்கார். சொந்த ஊரு சென்னை. என்ன கொஞ்சம் நகையும், பணமும்தான் அதிகமா எதிர்பார்க்கிறாங்க. கடனைக்கிடனை வாங்கி எப்படியாவது இந்த சம்பந்தத்தையே முடிச்சிறவேண்டிதான். எல்லாரும் இரண்டு நாளைக்கு முன்னாலேயே வந்துருங்க" என்றார்.

Representational Image
Representational Image

பத்திரிகை ரொம்ப அழகாய் அச்சிடப்பட்டிருந்தது. கல்யாணம் சென்னையில் என்று போட்டிருந்தது. எனது அம்மாவுக்கு நீண்ட பயணங்கள் செய்து பழக்கமில்லாததால் அப்பா மட்டும் தனியாகப் போகலாம் என்று முடிவெடுத்தார்.

அப்போது எங்கள் பள்ளியில் ``கல்விச் சுற்றுலா" பற்றிய அறிவிப்பு வந்தது. எனக்கு நிறைய புது இடங்களைப் பார்க்கும் ஆசை இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். கன்னியாகுமரி, திற்பரப்பு, சுசீந்தரம், திருவனந்தபுரம் ட்ரிப் அடித்துவிட்டு 5 நாள்கள் கழித்துதான் எங்கள் ஊருக்கு வர முடிந்தது.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. ``மாப்பிள்ளை வீட்ல 100 பவுன், 3 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டிருக்காங்க. பாதியாவது கொடுத்தாதான் தாலி கட்டுவோம்னு சொல்லிருக்காங்க. இவரால புரட்ட முடியாதனால நிச்சயதார்த்தத்தோடேயே கல்யாணம் நின்னு போச்சு. ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுத்த பிறகு, ஒரே மகள் கல்யாணம் இப்பிடி ஆயிருச்சேன்னு சுவத்துல ஓங்கி ஓங்கி தலையை முட்டிருக்காரு. அதுல புத்தி பேதலிச்சுப்போச்சாம். நைட்டோட நைட்டா வீட்டை விட்டுப்போனவர்தான் எங்க தேடிப்பாத்தும் கிடைக்கல. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்டு குடுத்திருக்காங்க, கிடைக்கிறாரோ என்னமோ" என்று கலங்கியபடி சொல்லிக்கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

இதைக்கேட்டு ஒரு நிமிடம் நான் உறைந்துபோனேன். வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் பரிசுத்தமாய் அவர் வந்து போகும் காட்சி கண்ணில் மறைந்தது.

இப்போதும் என்றாவது ஒருநாள் அவர் வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம் அதே பாடல் ``நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் இல்லாமல் வளர்க" பாடல் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால், அவர் வீடு மட்டும் யாரும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.

-அருண்குமார் செல்லப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/