100 ரூபாயில் ஒரு கலைப் பயணம்! - வியப்பூட்டிய தஞ்சை தந்தை-மகன் படைப்புகள் #MyVikatan

தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் ஒரே நாளில் பார்த்துவிடுவது என நானும் எனது நண்பர்களான ஜெயகாந்த், சந்திரபிரகாஷ், சேஷாவும் முடிவு செய்தோம். அப்போது நாங்கள் நால்வரும் எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தோம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அப்போது நான் பொன்னியின் செல்வன் படித்திருக்கவில்லை. ஆனாலும், செவி வழி செய்திகளாக, தஞ்சை பெரிய கோயிலைப் பற்றியும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்னுடைய கல்லூரி காலம். அப்போதுதான் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஐ.நாவின் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது. இக்கோயிலின் மீதான எதிர்பார்ப்பும் பிரமிப்பும் மேலோங்கியது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைப் புகைப்படங்களில் பார்க்கும்போதெல்லாம், இது தஞ்சை பெரியகோயிலின் நிழல் போலவே, எனக்கு தோன்றுவதுண்டு.
இந்த இரு கோயில்களின் அமைப்பும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதோடு, தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தைவிட, கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கோபுரம் சற்று சிறியதாக இருப்பதாலும், இத்தகைய எண்ணம் எனக்கு உருவானது.

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் நாவலை படித்த பிறகுதான், ராஜேந்திர சோழன் எதற்காக இக்கோயிலைக் கட்டினார் என ஒரு முடிவுக்கு வர முடிந்தது. தன் தந்தை ராஜராஜ சோழன் நிர்மாணித்த, அழியா புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை விஞ்சும் அளவுக்கு தானும் ஒரு கோயிலைக் கட்டமைக்க, ராஜேந்திர சோழன் விரும்பியிருக்கிறார்.
மாமன்னன் ராஜேந்திர சோழன், கடல் கடந்து சென்று கடாரத்தை வென்றவன். வலுவான கடற்படையைக் கட்டமைத்து கங்கை வரை படையெடுத்து, வங்காள தேசம் வரை வெற்றி கொண்டவன். இத்தனை சாதனைகளைச் செய்திருந்தாலும்கூட, தன் தந்தை, தஞ்சையில் கட்டியெழுப்பிய கற்றளியை விஞ்சும் அளவுக்கு, தானும் ஒரு கற்றளியை எழுப்ப வேண்டும் என ராஜேந்திர சோழனுக்கு தோன்றியிருக்கும் என எழுத்தாளர் பாலகுமாரன் தனது நாவலில் விவரித்திருப்பார்.

தஞ்சை பெரிய கோயிலையும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் ஒரே நாளில் பார்த்துவிடுவது என நானும் என் நண்பர்களான ஜெயகாந்த், சந்திரபிரகாஷ், சேஷாவும் முடிவு செய்தோம். அப்போது நாங்கள் நால்வரும் எம்.சி.ஏ படித்து கொண்டிருந்தோம். கையில் பெரிதாகப் பணமில்லை. எங்கள் ஒவ்வொருவரிடமும் அதிகபட்சம் 100 முதல் 150 ரூபாய்தான் இருந்திருக்கும்.
நாங்கள் நால்வரும் அன்றைய தினம் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பினோம். தஞ்சாவூர் செல்ல ஒரு மணிநேரம். அங்கிருந்து கும்பகோணம், ஒரு மணிநேரம். கும்பகோணத்தில் காலை உணவு அருந்திவிட்டு, கங்கைகொண்ட சோழபுரத்துக்குப் பயணப்பட்டோம். ஒரு மணிநேர பயணம். சுமார் 10.30 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். சுற்றி வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. கோயிலை நன்றாகப் புதுப்பித்து பராமரித்திருந்தார்கள். உள்ளே அழகான புல்வெளிகளுடன் பார்க்க கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.

12 மணி அளவில் கோயில் நடை சாத்திவிடுவார்கள் என்று கூறியதால் முதலில் பெருவுடையாரையும், உலக நாயகி அம்மையையும் தரிசித்துவிட்டு, பிறகு கோயிலின் வெளிப்புறம் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது கூட்டம் அதிகமில்லை. மிகுந்த மனநிறைவோடு, தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம். கோயிலின் வெளி பிராகாரத்தை, பொறுமையாகச் சுற்றி வந்தோம். 1,000 ஆண்டுகள் பழைமையான சிற்பக்கலை அற்புதத்தையும், இதன் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் வியந்துகொண்டே சுற்றி வந்தோம்.
அப்போது என் நண்பன் சேஷாத்திரி, ஒரு பாயின்ட் அண்ட் ஷூட் (Point and shoot) கேமரா வைத்திருந்தான். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். சிங்க வடிவிலுள்ள கிணற்றைப் பார்த்து வியந்து போனோம். வேறு எங்கும் இப்படி ஒரு தனித்துவமான கிணற்றை நான் பார்த்ததில்லை.
இந்த அற்புதக் கோயிலை முழுமையாகச் சுற்றிப் பார்த்துவிட்டு தஞ்சைக்குத் திரும்ப முடிவு செய்தோம். அதற்கு முன்பாக, இதே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேடு சென்றோம். அங்கு எந்த அரண்மனையும் இல்லை; ஒரே மண்குவியலாக இருந்தது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த அரண்மனையின் மதில் சுவர்களின் கற்களைக் கொண்டுதான், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அணை கட்டப்பட்டதாக ஏற்கெனவே கேள்விப்பட்ட நினைவு அலைமோதியது. தஞ்சை பெருவுடையாரை தரிசிக்க கிளம்பினோம். மதியம் 3 மணி அளவில் தஞ்சையை அடைந்து மதிய உணவு அருந்திவிட்டு, பெரிய கோயிலுக்கு நகரப் பேருந்தில் ஏறிச் சென்றோம்.
சில நேரங்களில் அசலைவிட நகல் மிக சிறப்பாக அமைந்து விடும். ஆனால், இந்த விஷயத்தில் தந்தை, மகன் இருவருடைய படைப்புகளுமே மிக அற்புதம். தஞ்சை பெருவுடையார் கோயிலின் கலை கட்டுமானமும், சிற்ப வேலைப்பாடுகளும் வெகு சிறப்பு.
அங்கிருந்த சிற்பங்களில் கைவிரல் நகங்களையும் அதனூடே ஒளி ஊடுருவி செல்வதையும் கண்டு வியந்துபோனோம். களிமண்ணால் செய்த பொம்மைகளில் எவ்வளவு மிருது தன்மை இருக்குமோ அத்தகைய ஒரு வழவழப்பு ஒவ்வொரு சிற்பத்திலும் பார்க்க முடியும். அங்குள்ள பெருவுடையாரின் தரிசனம் காண கண் கோடி வேண்டும்.
கால் நூற்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும், எனது கல்லூரிக் கால கலைப்பயணம் இப்போதும் எனது மனதுக்குள் பயணித்துக்கொண்டேதான் இருக்கிறது.

எனது மதிப்புக்குரிய எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலையும் கங்கை கொண்ட சோழன் நாவலையும் படித்த பிறகு, ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் பற்றிய மதிப்பு பலநூறு மடங்கு அதிகரித்தது. எனது கல்லூரிக் கால நண்பர்களோடு, மீண்டும் ஒருமுறை கங்கை கொண்ட சோழபுரமும் தஞ்சை பெரியகோயிலுக்கும் செல்ல வேண்டும். அணு அணுவாக ரசிக்க வேண்டும். அப்படி ஒரு சுகமான அனுபவம், எப்போது எனக்கு வாய்க்கும். ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.
- ஆனந்தகுமார் முத்துசாமி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.