Published:Updated:

`என்னைப் பின்தொடர்ந்த அந்த உருவம்..!' - மதுரையில் ஒருநாள் #MyVikatan

Representational Image
Representational Image

'தூங்கா நகரம்' என்ற பெயருக்கேற்ப இரவிலும் பரபரப்பாகக் காணப்பட்டது நகரம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மதுரை சென்றடைந்தபோது, இரவு 10 மணியைக் கடந்திருந்தது.

'தூங்கா நகரம்' என்ற பெயருக்கேற்ப இரவிலும் பரபரப்பாகக் காணப்பட்டது நகரம்.

தள்ளுவண்டிக் கடை ஒன்று ஆவி பறக்கும் வேர்க் கடலையையும், பொன்னிற சோளத்தையும் வறுத்து விற்றுக்கொண்டிருந்தது.

தெருவெங்கிலும் மஞ்சள் சிவப்பு பச்சை என எல்லா நிறங்களிலும் மாறி மாறி மின்னிக்கொண்டிருந்தன 'மதுரை ஜிகர்தண்டா' எனப் பெயர் தாங்கிய பலகைகள்.

Representational Image
Representational Image

காதருகே வந்து கதறும் வண்டுகளைப்போல, ஓயாமல் ஒலி எழுப்பியபடியே பின்தொடர்ந்து வந்தனர் ஆட்டோக்காரர்கள்.

நாளை வெளியாகப்போகும் படத்தின் போஸ்டர்களை மும்முரமாக சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தனர் சிலர்.

சிறிது தூரம் நடந்து சென்ற எனக்கு மதுரை ஸ்பெஷல் 'பன் பரோட்டா' என்ற கடையைப் பார்த்தவுடன் ஈர்த்தது. இரவிலும் கூட்டம் அலை மோதியது.

இரண்டு பிரட்டை பொங்கும் எண்ணையில் வறுத்தெடுத்து, அதன் நடுவில் மசாலாவைத் திணித்து, தொட்டுக்கொள்ள தயிர் பச்சடியுடன் பிளேட்டை நீட்டினர். நாவில் வைத்ததும், குழந்தைகள் சறுக்கு மரம் விளையாடுவதைப் போல டபக் என வயிற்றினுள் சென்றடைந்து மதுரை ஸ்பெஷல் 'பன் பரோட்டா'.

மதுரையை முழுவதுமாக ருசித்த நிறைவோடு அங்கிருந்து சென்ற நான், மீதமுள்ள இரவைக் கழிக்க விடுதி ஒன்றை தேடிக்கொண்டிருந்தேன்.

சிறிது தூரம் நடந்து சென்ற நான், யாரோ என்னை பின்தொடர்வதைப்போல உணர்ந்தேன்.

5 அடி உயரம்.

கலைந்த குருவிக்கூடு போன்ற தலைமுடி.

ஆங்காங்கே உடைகள் கிழிந்த நிலையில்

அரை நிர்வாணத் தோற்றம்.

தெரு விளக்கின் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது அவன் உருவம்.

அதுவரை ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருந்த நான், மெல்ல மெல்ல நடையின் வேகத்தைக் கூட்டினேன்.

Representational Image
Representational Image

கைகள் நடுங்கின.

உடல் உஷ்ணம் கண்டது.

இதயம் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடத் தயார் ஆனது.

கலங்கரை விளக்கம் ஒளியைப்போல கண்கள் சுற்றிலும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

பதற்றத்துடன் அரை மைல் தூரம் கடந்து வந்த எனக்கு அப்போதுதான் சிலர் கண்ணில் பட்டனர். போர்வையை வீடாக்கிக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.

பெருமூச்சை இழுத்து விட்ட நான், திரும்பிப் பார்த்தேன். அவன் இல்லை.

நிம்மதியடைந்தவனாக அருகில் இருந்த விடுதி ஒன்றில் நுழைந்தேன்.

உட்கார்ந்தபடியே பாதி தூக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த அவரைக் கை வைத்து நிறுத்த முயன்றேன். தூக்கத்தை மறைக்கும்விதமாக 'எத்தன ரூம்? எனச் சத்தமாகக் கேட்டார் அவர். சிங்கிள்தான் என்றபடியே பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்ட எனக்கு அதிர்ச்சி. ஐந்தாயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு, வேளாங்கண்ணி மாதா படம் உள்ளடங்கிய என் பர்ஸைக் காணவில்லை.

செய்வதறியாது விழித்திருந்த நான், விடுதியில் இருந்த அவரைத் தயக்கத்துடன் பார்த்தேன். பேனாவால் நோட்புக்கில் கோலம் போட்டபடியே மறுபடியும் சொர்க்கம் பார்க்கச் சென்றிருந்தார் அவர்.

அதையே நல்ல சந்தர்ப்பமாக நினைத்துக்கொண்டு அங்கிருந்து மெல்ல நடையைக் கட்டினேன்.

'இன்றிரவு மதுரை வீதிதான் நம் வீடு' என நினைத்துக்கொண்டு தெருவில் உறங்கிக்கொண்டிருத்தவர்களை ஒரு நிமிடம் பாரத்தேன். அப்போது அவன் மீண்டும் என் நினைவுக்கு வந்தான்.

அவன்தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் எனக் கடிந்து கொண்ட நான், வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

ஆனால், வழியில் அவன் தென்படவில்லை.

Representational Image
Representational Image

வந்திறங்கிய அதே மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா கடையை நெருங்கும்போது, பிளேட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்த கடைக்காரரின் குரல் ஒலித்தது.

'என்ன சார் பர்ஸை குடுத்து அனுப்பலாம்னு பாத்தா வேகமா நடந்து போய்ட்டீங்களே. இங்க பாருங்க, உங்க வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாம இந்தப் பய திரும்பி வந்து படுத்துட்டான்'.

ஆம் அது அவன்தான்.

'பின்னாடி தான வந்தாரு. கூப்பிட்டுச் சொல்லிருக்கலாமே' என்றேன் நான்.

'சார் அவனுக்கு பேச்சு வராது. இந்தத் தெருலதான் ரெண்டு வருசமா சுத்திட்டு இருக்கான். ஏதாவது வேலை குடுத்தா செய்வான். பதிலுக்கு நாங்க சாப்பாடு போடுவோம். சரி இந்தாங்க சார் உங்க பர்ஸ். இனிமே போன் நம்பர் எழுதி வைங்க சார் பர்ஸ் உள்ள'.

மீனாட்சி அம்மனுக்கு அடுத்தநாள் செலுத்த வேண்டிய 2,000 பணத்தை அவரிடம் கொடுத்து, ``அவனுக்கு நல்ல சட்டை பேன்ட் எடுத்து கொடுங்க சார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் நான்.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு