Published:Updated:

மனிதனை இறப்பின்றி வாழச்சொல்லும் `UPLOAD' வெப் சீரிஸ்! - வாசகர் பார்வை #MyVikatan

Upload
Upload ( Amazon Prime )

தனது காதலி இங்க்ரிட்டின் (Allegra Edwards) ஆலோசனையை ஏற்று அவசரமாகத் தன்னை லேக்வியூ எனும் செயற்கை சொர்க்கத்தில் பதிவேற்றம் (Upload) செய்ய சம்மதிக்கிறார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமெரிக்க வெப் சீரிஸான 'Upload' குறித்த எனது பார்வை:

இறந்த பிறகும் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளார்ந்த விருப்பம். அந்த விருப்பத்தின் சாத்தியத்தை நகைச்சுவை கலந்த அறிவியல் புனைவாகத் தந்து அசத்தியிருக்கிறது அப்லோட்.

அப்லோடின் கதை:

2033 -ம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மென்பொருள் பொறியாளர் நாதன் பிரவுன் (Robbie Amell) ஒரு மோசமான சுய-ஓட்டுகை (Automatic Driving) கார் விபத்தில் சிக்கிவிடுகிறார். நாதன் உயிர்பிழைப்பது கடினம் எனும் சூழலில், இறந்து போவதா அல்லது உலகில் தனது இருப்பைத் தொடர்ந்து தக்கவைப்பதா எனும் குழப்பம் அவருக்கு ஏற்படுகிறது.

Upload
Upload
Amazon Prime

அச்சூழலில், தனது காதலி இங்க்ரிட்டின் (Allegra Edwards) ஆலோசனையை ஏற்று அவசரமாகத் தன்னை லேக்வியூ எனும் செயற்கை சொர்க்கத்தில் பதிவேற்றம் (Upload) செய்ய சம்மதிக்கிறார்.

லேக்வியூ என்பது மெய்நிகராக (Virtual) அமைக்கப்பட்ட ஒரு சொகுசு உலகம்.

செயற்கை சொர்க்கம். மனிதனாக உண்மை உலகில் வாழ்ந்தவர்களின் நினைவுகள் மெய்நிகர் உடலுடன் தொடர்ந்து அங்கு வாழும். இவ்வாறு நினைவுகளுடன் வாழ, இறப்பதற்கு முன்பு மனிதர்களின் நினைவுகளைப் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.

அதாவது, இறக்கும் நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படும். ஒன்று, பாரம்பர்ய முறைப்படி இறந்து போவது. இரண்டு, தனது நினைவுகளைப் பதிவேற்றம் செய்ய ஒப்புக்கொண்டு மெய்நிகர் சொர்க்கத்தில் தொடர்ந்து வாழ்வது! பதிவேற்றம் செய்த பிறகு உண்மை உலகில் வாழ இயலாது.

பதிவேற்றம் செய்யப்பட்ட நாதன், ஒரு ஆடம்பரமான பிற்பட்ட சொர்க்க வாழ்க்கைக்கு படிப்படியாகத் தயாராகிறார். விர்ச்சுவல் உலகத்திலிருந்து உண்மை உலகில் உள்ளவர்களை VR முறையில் அவரால் தொடர்புகொள்ள முடிகிறது.

பதிவேற்றம் செய்யப்பட்ட நாதனுக்கு உதவி செய்வதற்காக 'நோவா' (Andy Allo) எனப்படும் ஏஞ்சல் இருக்கிறார். நோவா, உண்மையான உலகில் இருந்துகொண்டு விர்ச்சுவல் உலகில் அவருக்கு உதவி புரிகிறார்.

மனிதர்களின் பதிவேற்றம் மற்றும் ஆடம்பர மெய்நிகர் வாழ்க்கை ஆகியவற்றிற்கு செல்போன் நிறுவன ரிசார்ஜ் திட்டங்கள் போல பல திட்டங்கள் இருக்கின்றன.

அவற்றிற்கு உண்மை உலகில் இருப்போர் கட்டணம் செலுத்த வேண்டும்!

லேக்வியூ முழுக்கவே செயற்கை நுண்ணறிவுகளின் (AI) ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. மனிதனாக வாழ்வதற்கும், மெய்நிகர் தோற்றத்தில் நினைவுகளாக வாழ்வதற்கும் உள்ள சிரமங்களை நாதன் கதாபாத்திரம் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

Upload
Upload
Aaron Epstein; Katie Yu

மெய்நிகர் மனிதர்கள் இடையிலான தொடர்புகள் மற்றும் மனிதனுக்கும், மெய்நிகர் மனிதனுக்கும் ஏற்படும் உறவுகள் ஆகியவை கதையின் போக்கை சரியான திசைக்கு நகர்த்துகின்றன.

மனிதனுக்கும் நினைவுகளுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வு கதையை சுவரஸ்யப்படுத்துகிறது.

திரைக்கதையில் அறிவியலின் ஊடே தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் நையாண்டி மற்றும் நகைச்சுவை வசனங்கள் நம்மை சிந்திக்கச் செய்கின்றன.

நாயகன் நாதன் விபத்தில் இறந்தாரா அல்லது ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா என துப்பறியும் நிகழ்வும், அதுசார்ந்த காட்சிகளும் இடையிடையே ரசனையூட்டுகின்றன. நோவா - ஏஞ்சலுக்கும், நாதனுக்கும் துளிர்க்கும் சிநேகமும் கதையின் போக்கை சுவாரஸ்யப்படுத்துவதாக உள்ளது.

தன்னுடைய இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தானே கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மனிதன், தன்னைப் பற்றிய பிறரின் மதிப்பீடுகளைக் கேட்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளை நாதன் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

லேக்வியூவிற்கு அப்லோட் செய்யப்பட்ட நினைவுகளை, உண்மை உலகில் உறையவைக்கப்பட்ட மனித உடலில் மறுபடியும் பதிவிறக்கம் (Download) செய்து, அழிவற்ற மனிதனை உருவாக்க முடியுமா எனும் ஆராய்ச்சிகள் குறித்த காட்சிகள் நமக்கு ஆச்சர்யமூட்டும்.

பதிலற்ற பல கேள்விகளுடன் முதல் சீசனின் அப்லோட் முடிந்து இரண்டாம் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கவைக்கிறது.

Greg Daniels இன் சிறப்பான இயக்கத்தில் Amazon prime -ல் ஒரே சீசனாக 10 எபிசோடுகளில் 'அப்லோட்' வெளிவந்துள்ளது. இரண்டாவது சீசன் விரைவில் வர உள்ளது.

Upload
Upload

அப்லோடின் தரமான பதிவேற்றங்கள்:

# விரலிடுக்கில் உருவாகும் செல்போன்,

தானியங்கி வாகனம், ட்ரோன் காவலர்,

மெய்நிகர் படைப்புகள் என எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில்நுட்பங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.

# இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கும் என்னும் மனிதனின் ஆதாரக் கேள்விக்கு அறிவியலுடன் நகைச்சுவை கலந்து விடையளிக்க முற்படுகிறது அப்லோட்.

# நைட்லி App மூலம் 2030 -களில் இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார், இயக்குநர்.

# வெறும் நினைவுகள் மட்டுமே ஒரு மனிதன் ஆகிவிடாது. அவ்வாறே உடல் மட்டுமே மனிதனும் கிடையாது. ஆன்மாவே மனிதன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது அப்லோட்.

# இறந்தவரும் கலந்துகொள்ளும் வருங்கால இறுதிச்சடங்குகளின் எதார்த்தம் முகத்தில் அறைவதாய் உள்ளது.

# முதலாளித்துவத்திற்கு எதிரான அறிவியல் ரீதியான நையாண்டித் தனமான கருத்துகள் சிறப்பு.

# அப்லோட் தொலைதூர எதிர்காலத்தை ஆராய்வதுடன்,மேம்பட்ட தொழில்நுட்பத் தகவல்களை ரசிகர்களுக்கு அவ்வப்போது வழங்குகிறது.

Upload
Upload

# சொர்க்கத்திற்குச் சென்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்கிறது கதை! லேக்வியூ மற்றும் அதற்கு நேரெதிரான குறைந்த விலைக்கு அப்லோடு செய்யப்பட்ட நபர்கள் இருக்கக் கூடிய இடம் ஆகியவை இந்த நிதர்சனத்தைத் தெளிவாக விளக்குகின்றன.

# ஒரு உண்மையான ஆண்மகனுக்கும், ஒரு மெய்நிகர் ஆண்மகனுக்கு இடையேயான வேறுபாடுகளையும், உளவியல் சிக்கல்களையும் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

# லேக்வியூவின் மெய்நிகர் தோற்ற அழகு சிறப்பு. மனிதனின் கனவான, விருப்பப்பட்ட பருவ நிலையைத் தான் விரும்பும்போது உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதன் நிஜமாகும் கற்பனை அப்லோட்.

# நினைவுகளுக்கு இடையேயான பிணைப்பைவிட, ஆன்மாவிற்கு இடையே உண்டாகும் பிணைப்பே உண்மையான காதல் என்பதை கவித்துவமாய் கதை வெளிப்படுத்துகிறது.

அப்லோடின் தரம் குறைந்த பதிவேற்றங்கள்:

# அனைத்திற்கும் ரேட்டிங், ரேட்டிங் எனும்போது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்படுகிறது.

# தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வசனங்களாக இல்லாமல் காட்சிகளாக நகர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

# கதையில் 'லேக்வியூ' ஒரு குறைகளற்ற சொர்க்கம் என்கிறார்கள். ஆனால், அதில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதேனும் ஒரு குறையுடனே வாழ்ந்துகொண்டிருப்பது முரணான ஒன்று.

Upload
Upload

# நோரா நாதனுடன் இணையாமல் நைட்லி ஆஃப் ஆணுடன் இணைவது ரசிகர்களின் ரசனைக்கு சற்று உறுத்தலான ஒன்று.

# அப்லோட் செய்யப்பட்டவர்களின் வயது கூடுவதில்லை. ஆனால் அவர்களின் நினைவுகள் தொடர்ந்து பெருகுகின்றன என்பதில் லாஜிக் உதைக்கிறது.

# செயற்கை சொர்க்கத்தில் வசிப்பவர்களின் தனிப்பட்ட மன உணர்வுகள் பெரும்பாலும் வெளிப்படுத்தப்படவில்லை.

மேலோட்டமான உணர்ச்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சிற்சில குறைகள் இருந்தாலும், 'அப்லோட்' அறிவியல் புனைவுகளின், செயற்கை நுண்ணறிவுகளின் அடுத்த கட்டம்.

நம் விருப்பப்படி உணவை அச்சிடுவது, சுயமாக இயக்கப்படும் கார், அடுத்தகட்ட ட்ரோன்,விருப்பப்படி மாற்றப்படும் பருவம் போன்ற பல காரணிகள் AI ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தளிக்கும்.

வருங்காலத்தில் இறந்துபோகும் நபர்களை நிஜ உலக மனிதர்கள் சந்திக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது இந்தப் புனைவு.

எதிர்காலத்தில் சாத்தியமான பல தொழில்நுட்பங்களுடன், நையாண்டியுடன்கூடிய அறிவியல் புனைகதையான அப்லோடை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு