Election bannerElection banner
Published:Updated:

எல்லாமே பெர்ஃபெக்ட்..! - லாக் டெளன் காலத்து அமெரிக்க அனுபவங்களை பகிரும் தமிழர் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

கொரோனா காலத்தில் அமெரிக்காவில் சிக்கிய அடியேனின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்வே...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நெஞ்சுயர்த்தும் விலங்குகள், ஆங்காங்கே அழகிய தடாகங்கள், அவற்றில் ஆட்சி செலுத்தும் வாத்துக் கூட்டங்கள். வியர்வையற்ற சீதோஷ்ணம். கொசுவில்லா வீடுகள். வாலிபர்கள் அமெரிக்கா நோக்கி ஓடுவதன் ரகசியம் புரிந்தது.

கொரோனா அலை.. அமெரிக்காவில் சிக்கிய தமிழரின்  பாசிடிவ் அனுபவங்கள் ..!    #MyVikatan

வீடுகள் - 1,2,3 படுக்கையறைகள் கொண்டவையென்று வகைப்படுத்தப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு வீடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வாடகை வீடுகள் பல மாடிகளைக் கொண்டவையாக உள்ளன. சொந்த வீடுகளோ விசாலமான அமைப்புடன் காணப்படுகின்றன. வீடுகளின் உள்ளே பெரும்பாலும் வெள்ளை வண்ணத்தை மட்டுமே பூசுகிறார்கள். அறைக் கதவுகள் கூட வெள்ளை நிறத்திலேயே உள்ளன. வீடு முழுவதும் ஏ.சி. அனைத்து ஜன்னல்களிலும் இரண்டு கண்ணாடிகள் - குளிரைக் கட்டுப்படுத்த மரத்தாலான தடுப்புச் சுவர்கள். வாசலின் அருகில் மிகச் சிறு அறை. காலணிகள் மற்றும் ரெயின்கோட், ஜெர்கின் போன்றவை வைக்க. அடுத்து ஹால். அதனையொட்டி கிச்சன். அதற்கு அருகிலேயே டைனிங்.

Representational Image
Representational Image

நாங்கள் இருந்த இரு படுக்கையறை கொண்ட வீட்டில், முதலில் சிறிய படுக்கை அறை. பின்னர் ‘மாஸ்டர் பெட்ரூம்’ என்றழைக்கப்படும் பெரிய படுக்கையறை. ரெஸ்ட் ரூம் ஒன்றென்றால், இரு பெட் ரூம்களுக்கும் இடையில். இரண்டென்றால், மாஸ்டர் பெட்ரூம் உள்ளேயே மற்றொன்று. எல்லா அறைகளிலும் ஜன்னல். காற்று தேவையென்றால் கண்ணாடிகளைத் திறந்து கொள்ளலாம். கொசுக்களோ, சிறு பூச்சிகளோ நுழைய முடியாதவாறு நிரந்தர வலைகள். ஸ்ப்ரிங்க்ளர் இணைப்புகள். பெரும்புகை வந்தாலே அபாய மணி அடிக்க ஆரம்பித்து விடும்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ப்ரிங்க்ளரிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும். மக்கள் உயிர்கள் மகத்தானதாக மதிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக ஆங்காங்கே தீயணைப்புத் துறை பயன்படுத்தவென்றே தண்ணீர் இணைப்புகளைத் தயாராக வைத்துள்ளார்கள். தண்ணீருக்கோ பஞ்சமேயில்லை. ஒரே குழாயில் வலது புறம் திருப்பினால் குளிர்ந்த நீர். இடது புறம் திருப்பினால் கொதிக்கும் நீர். பாத் ரூம், ரெஸ்ட் ரூம் என்று எல்லா இடத்திலும் இதே நிலை.

Representational Image
Representational Image
Pixabay

வீட்டுக்கு 2 கார்கள் சாதாரணம். அதிகமாகப் பெண்களே ஓட்டுகிறார்கள். சாலை விதிகளைச் சரியாக அனுசரிக்கிறார்கள். பாதசாரிகளுக்கே முன்னுரிமை. நாங்கள் சில சமயம் சாலையைக் கடக்கையில், எங்களுக்கு வழி விட்டு ஏழெட்டுக் கார்கள் நிற்கும். எங்களுக்கே வியப்பாகவும், சற்று வருத்தமாகக் கூட இருக்கும். நம்மூர் நிலை மனதில் நிழலாடும். அவசரமாக ரயிலையோ, பஸ்ஸையோ பிடிக்க, கையைக் காட்டி, ’நாங்கள் கடந்து விடுகிறோமே’ என்று கெஞ்சினால் கூட நம்மூர் ஓட்டுனர்கள் கண்டு கொள்வதில்லை.

நாங்கள் சென்ற பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்க, ஓட்டுனர் எழுந்து வந்து பிளாட் பாரத்தில் வீல் சேரில்அமர்ந்திருந்த ஒரு பெண்ணுக்கு உதவி, உள்ளே கொண்டு வந்து அமர வைத்த பிறகு பஸ்ஸை எடுத்த பாங்கினைக் கண்டு மலைத்துப் போனேன்.
ரெ.ஆத்மநாதன்

இவ்வளவு கார்கள் இருந்தாலும், பொதுப் போக்குவரத்திற்கும் பஞ்சமில்லை. பஸ்களும், ரயில்களும் அட்டவணைப்படி மிகச் சரியான நேரத்திற்கு வந்து செல்கின்றன. மிகக் குறைந்தவர்களே பயணித்தாலும், ஓட்டுனர்கள் கனிவு காட்டுகிறார்கள். எல்லா பஸ்களிலுமே ஓட்டுனர் மட்டுமே. அவரேதான் கண்டக்டரும்.

அன்று நாங்கள் சென்ற பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்க, ஓட்டுனர் எழுந்து வந்து பிளாட் பாரத்தில் வீல் சேரில்அமர்ந்திருந்த ஒரு பெண்ணுக்கு உதவி, உள்ளே கொண்டு வந்து அமர வைத்த பிறகு பஸ்ஸை எடுத்த பாங்கினைக் கண்டு மலைத்துப் போனேன். வீல் சேரை ஏற்றவும், இறக்கவும் பஸ்ஸில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன.

Representational Image
Representational Image

சாலைகளில் காவலர்களைக் காண்பது அரிது. நெடுஞ்சாலைகளில் மட்டும் தலையில் நீல வண்ண விளக்குகளுடன் போலீஸ் கார் நிற்கும். ஆனால், சிறு தவறிழைத்தாலும் காமிராக்கள் காட்டிக் கொடுக்க, விபரங்களுடன் வீட்டிற்கு நோட்டீஸ் வந்துவிடும். அல்லது இ- மெயிலில் இவ்வளவு ‘பைன்’ என்றும், உடன் கட்டச் சொல்லியும் அறிவிப்பு வந்துவிடும். நம்மூரைப்போல் தவறு செய்து விட்டு கையும், களவுமாகப் பிடிபட்டவுடன், ’நான் அரசு அதிகாரி என்றோ, அரசியல்வாதியின் உறவினர் என்றோ, காவல் துறை அதிகாரிகளின் உறவினர்/நண்பர் என்றோ கூறியும் தப்பிக்க முடியாத சூழலில், 50, 100 ஐக் கொடுத்துத் தப்பிக்கும் உபாயங்களெல்லாம் அங்கு எடுபடாது. அது மட்டுமல்ல, அவசர உதவிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்குப் போன் செய்தால், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நீங்கள் கூறிய இடத்திற்கு வாகனம் வந்து விடும்.

சமையல் பொருட்களாகட்டும், காய்கறிகள் மற்றும் சிக்கன், மட்டன், மீனாகட்டும். அவற்றின் விலையில் நம்மூரைப் போல் அடிக்கடி பெரு மாற்றங்களெல்லாம் நிகழ்வதில்லை. சில சமயங்களில் சில பொருட்கள் ‘ஸ்டாக்’ இல்லையென்பார்கள். இரண்டொரு நாட்களில் வந்து விடுமென்பார்கள். அவ்வாறே வந்தும் விடும். விலை? அதே பழைய விலைதான். 10 ரூபாய் தக்காளி 110 ரூபாய்க்குப் போவதும், அதன் பிறகு அந்த விலை உயர்வு காரணமாக விவசாயிகள் ஆசைப்பட்டு நிறைய விளைவிப்பதும், விளைவிக்கப்பட்ட தக்காளியை அறுவடை செய்யும் நேரத்தில் அடிமாட்டு விலைக்குக் கேட்பதால், விவசாயிகள் மனம் நொந்து சாலையில் தக்காளியைக் கொட்டுவதும் நம்மூர் தொடர்கதைகள். இவையெல்லாம் அங்கு நடைபெறுவதில்லை.

நம்மூரில் பழங்காலத்தில் வியாபாரத்திலும் நேர்மை இருந்தது! போர்க் களத்திலும் நியாயம் இருந்தது. என்ன? அவற்றையெல்லாம் கீழடியிலும், ஆதிச்ச நல்லூரிலும், இன்னுஞ் சில இடங்களிலும் புதைத்து விட்டு, இப்பொழுது தோண்டிக் கொண்டிருக்கிறோம். பழம் பெருமை பேசும் நாம், நமது வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்க முயலாததுதான் வேதனை.

Representational Image
Representational Image
Pixabay

அரசும் சரி, மக்களும் சரி, அமைதி வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்கள். மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்து சிரமப்பட, ஒரே அரசாணையில் ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் இருந்த அத்தனை திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டன.

கிண்டர் கார்டன் தொடங்கி உயர் நிலைப் பள்ளி வரை, கல்வி அரசின் பொறுப்பு. காலணா செலவில்லாமல் உயர்நிலைப் பள்ளி வரை படித்து விடலாம். அவரவர் வசிக்கும் பகுதியிலுள்ள பள்ளியில்தான் பயில வேண்டும்.

மாணவ, மாணவியரின் பயண நேரம் குறைவதுடன், தேவையற்ற போக்குவரத்துச் சிக்கல்களும் இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றன. பள்ளி பஸ் வந்தாலே, ஏனைய வாகனங்கள் ஓரங்கட்டிக் கொள்கின்றன. சிறுவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பதினெட்டு வயது வரை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். அரசாங்க ஊழியர்களுக்குள் பணியில் வித்தியாசம் இருந்தாலும், சம்பளத்தில் பெரும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இல்லை. துப்புரவு பணியாளர்கள் காரில் வந்திறங்கி, பணியை முடித்து விட்டுத் தங்கள் காரிலேயே ஏறிச் செல்கிறார்கள். எனவே, பொறாமை இல்லை. திருட்டு இல்லை. நாங்கள் பலமுறை, வீட்டைப் பூட்டாமலே வெளியில் சென்று வந்திருக்கிறோம்.

Representational Image
Representational Image

நம் நாட்டில் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் வாங்கும் சம்பளத்தில் 10% கூட சாமான்யர்கள் வாங்குவார்களா என்பது தெரியவில்லை. வெறும் 5க்கும் 10 க்கும் அள்ளாடுகிறார்கள். இஞ்சினீரிங் படித்தவர்கள்கூட வேலை கிடைக்காமல் திருடுகிறார்கள். வெளிநாடு சென்று வந்ததில் இருந்து ஏன் இந்தப் பொருந்தா நிலை என மனம் கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறது. மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒட்டு மொத்தமாகத் திருந்தினால்தான் உயர்வான இந்தியா உருவாகும். உருவாக்குவோம்!

-ரெ.ஆத்மநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு