Published:Updated:

அரைகுறையாகக் காய்ந்த வடகத்தை உள்ளே தள்ளிய நாள்கள்...! - பாட்டி வீட்டு நினைவலை #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan )

`ஒவ்வொரு தடவையும் அழுதுகொண்டே பிரியாவிடை கொடுப்போம். வரும்போது ஒரு சின்ன பையில் 4 செட் உடை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்திருப்போம் ஆனால் திரும்பிச்செல்லும்போது...'

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முன்பெல்லாம் பள்ளி விடுமுறைவிட்ட உடன் அப்பா என்னையும் தம்பியையும் ரயில் அல்லது பேருந்துபிடித்து பாட்டி வீட்டில் கொண்டுபோய் விடுவார். பாட்டி வீட்டிற்கு சித்தி மற்றும் பெரியம்மா பிள்ளைகளும் வந்திருப்பார்கள், வீடே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

Kids Playing
Kids Playing
Vikatan

காலையில் பாட்டி சீக்கிரமே எழுப்பி விடுவாள் எல்லாரும் குளித்த பிறகு காலை உணவு பரிமாறப்படும் . அந்தக் காலத்தில் தொலைக்காட்சியில் ஒரே சேனல் தூர்தர்ஷன் மட்டும்தான் ஒளிபரப்பாகும். அதனால், உணவுக்குப்பின் தொடங்கும் விளையாட்டு, பிற்பகல் வரை தொடரும்.வெயில் அடிக்கும் என்ற காரணத்தினால் திண்ணையில் பல்லாங்குழியும், பல்பம் கொண்டு கட்டம் போட்டு தாயக்கட்டமும் விளையாடுவோம்.

சொப்பு சாமான் எடுத்தால் நேரம் போவதே தெரியாது. அதற்காகக் கொஞ்சம் அரிசி, புளி, காரப்பொடி, உப்பு என எல்லாமே பாட்டி கொடுப்பாள். சோறு பொங்கி, ரசம் வைத்து சின்ன சமையலே செய்து முடிப்போம். இதற்கு நடுவில் தாத்தா இளநீர் பறித்துக் கொண்டுவந்து கொடுப்பார். மதிய நேரம் உணவு அருந்துவதற்காக பாட்டி எங்களை அழைப்பாள்.

வாழை இலை விருந்து
வாழை இலை விருந்து
Balasubramanian.C

தலைவாழை இலையில்தான் சாப்பாடு போடுவாள். எங்களுக்காக வேண்டி ஒரு விருந்தே தயார் செய்து வைத்திருப்பாள். வடை,பாயசம் என்று தடபுடலாகச் சாப்பிட்ட பிறகு திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் நல்ல தூக்கம் போட்டு எழுவோம். சாயங்காலத்தில் தூங்கினால், `விளக்கு வைக்கிற வரைக்கும், என்ன தூக்கம்?’ என்று செல்லமாக அதட்டுவாள். ஒவ்வொரு நாளும் விதவிதமான சமையல் செய்து அசத்துவாள். தினமும் ஏதேனும் ஒரு வாழ்க்கைப் பாடமும் கற்றுக்கொடுப்பாள். கடைக்கு அனுப்பி கணக்கு கற்றுக்கொடுப்பாள் , கோலம்போடுதல், வீடு கூட்டுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்பாள்.

`என்கூட ஒரு நாளாச்சும் வாழ்ந்திருக்கலாம்ல பாட்டி!’ - பெண்ணின் வாழ்நாள் ஏக்கம்  #MyVikatan

பின்பு முகம் கழுவி தலை சீவி தினமும் பூவைத்து அழகு பார்ப்பாள். அதைத் தொடர்ந்து கல்லா மண்ணா , கண்ணாமூச்சி, ஓடிப்பிடித்தல் எல்லாம் விளையாடுவோம். இரவு தினமும் மொட்டைமாடியில் நிலாச்சோறு, பெரிய ஏனத்தில் சாம்பார் சாதமும் தயிர் சாதமும் பிசைந்துகொண்டு வந்து எங்களைச் சுற்றி உட்காரவைத்து, கையில் உருண்டை பிடித்துப்போடுவாள். சாப்பாடு உள்ளே போகும் வேகமே தனி தான் , எனக்கு உனக்கு என்று அடித்துக்கொள்வோம். இரவு தூங்கும்முன்பு தினம் ஏதேனும் ஒரு புதிய கதை சொல்லி உறங்கவைப்பாள்.

Representational Image
Representational Image
Pixabay

சில நாள்கள் பாட்டி வடகம் போட்டு அதை காக்கா குருவிகளிடமிருந்து பத்திரமாகப் பார்த்துக் கொள்வதற்காக எங்களைக் காவல் இருக்கச் சொல்வாள். ஆனால் நாங்களோ அரைகுறையாகக் காய்ந்த வடகத்தைப் பிய்த்துப் பிய்த்து உள்ளே தள்ளுவோம். வெய்யில் தாழ வந்து பார்த்தால் வேஷ்டியில் பாதி வடகம் காணாமல் போயிருக்கும். எங்களை பாட்டி கோபித்துக் கொள்ளவே மாட்டாள். அதே போன்று மருதாணி செடியில் இருந்து இலைகளைப் பறித்து மருதாணி அரைத்து அழகாய் இரு கைகளிலும் வைத்து விடுவாள்.

எப்போதும் விடுமுறையின்போது தான் ஊர்த் திருவிழா வரும், புதுத் துணி உடுத்தி குஞ்சலம் வைத்து தலைசீவி எங்களை அலங்கரித்து கூட்டிச்செல்வாள் பாட்டி. அங்கு சென்றபின் பஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய், இலந்தை வடை, குச்சி ஐஸ் என எல்லா தின்பண்டங்களையும் வாங்கிக் கொடுப்பாள். கை நிறைய கண்ணாடி வளையல் வாங்கி அடுக்குவாள். அதேபோல், விளையாட்டுச் சாமான்களையும் வாங்கிக்குவிப்பாள்.

திருவிழா
திருவிழா
Sai_Dharmaraj.S

பாட்டி எங்களை ராஜா, ராணியைப் போல் பார்த்துக் கொள்வாள் . இங்கிருந்து விடுமுறை முடிந்து வீட்டிற்குச் செல்லவே மனம் இருக்காது. ஒவ்வொரு தடவையும் அழுதுகொண்டே பிரியாவிடை கொடுப்போம். வரும்போது ஒரு சின்ன பையில் 4 செட் உடை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்திருப்போம் ஆனால் திரும்பிச்செல்லும்போது பாட்டி இரண்டு கட்டைப்பை முழுவதும் பட்சணங்களும் விளையாட்டுச் சாமான்களும் நிரப்பி அனுப்பி வைப்பாள். நாங்கள் அந்த வீட்டில் ஒரு சின்ன சொர்க்கத்தையே பார்த்திருக்கிறோம். பாட்டி, தாத்தாவின் அன்புக்கு ஏது அடைக்கும் தாழ்.

இப்போது என் பிள்ளைக்கோ இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறுவதே இல்லை. அவன் உலகம் மிகவும் சிறியது, பள்ளி விட்டால் வீடு. விடுமுறை வந்தால் சம்மர் கேம்ப், டிவி, விளையாட்டு என்று கழிகின்றன, அவன் பொழுதுகள். நான் பாட்டி வீட்டிற்குச் சென்ற விடுமுறை நாள்கள் என்றுமே என் வாழ்வில் மறக்க முடியாதவை, அந்த நினைவுகளை இன்றும் அசை போடுவதில் ஓர் அலாதி இன்பம்...!

-அகிலா ராஜ்மஹாதேவ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு