Published:Updated:

`கடைசி இலையில் துளிர்விடும் நம்பிக்கை!' - குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Noémi Macavei-Katócz on Unsplash )

சில சமயங்களில் மனதின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு ஒரு சில புறக்காரணிகள் தேவைப்படுகின்றன.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மருந்துகளைவிட நம்பிக்கையே நோய்களைக் குணப்படுத்தும் என்பார்கள். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதும் அல்லது நோயாளியாகத் தொடர்வதும் அவரது நம்பிக்கையைப் பொறுத்தே அமைகிறது.

`நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்' என்கின்றன தத்துவங்கள். கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டபோதும் ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமாயின், அந்த நோயிலிருந்து அவன் மீண்டுவருவது உறுதி.

ஒரு மனிதனின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதில் அகக் காரணியான மனம், முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சில சமயங்களில் மனதின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு ஒரு சில புறக்காரணிகள் தேவைப்படுகின்றன!

Representational Image
Representational Image
Ava Sol on Unsplash

சிறு புறக்காரணி ஒரு பெண்ணை எப்படி நோயிலிருந்து விடுவித்தது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.ஹென்றி (O. Henry) எழுதிய ``கடைசி இலை" (The Last Leaf) சிறுகதை கவித்துவமாக விளக்குகிறது.

ஜான்ஸி மற்றும் சூ இருவரும் தோழிகள். ஒரு வீட்டின் மாடியில் கலைக்கூடம் அமைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில், பெர்மான் என்னும் பெயருடைய வயதான முதிய ஓவியர் வசித்து வருகிறார். அவர் பெரும் குடிகாரர். தன் இறப்புக்கு முன்பு ஒரு மகத்தான ஓவியத்தை வரைய வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பனிக்காலம் ஆரம்பமான சில நாள்களுக்குப் பின் ஜான்ஸிக்கு கடுமையான சளி, காய்ச்சல் உண்டாகிறது.

காய்ச்சல் காரணமாய் அவளால் எழுந்து நடக்கவே முடியவில்லை. படுத்த படுக்கையாகவே இருக்கிறாள். அதைக் கண்ட தோழி சூ, மருத்துவரை அழைத்து வந்து காட்டுகிறாள். மருத்துவர் பலவகையான மருந்துகள் அளித்தும் நோய் குணமாகவில்லை. ஜான்ஸி, தன்னுடைய அறையில் ஜன்னலுக்கு வெளியே உள்ள சுவரையொட்டி படர்ந்து வளர்ந்திருக்கும் இவி கொடியிலுள்ள இலைகளையே பார்த்த வண்ணம் படுத்து இருக்கிறாள்.

Representational Image
Representational Image
Pixabay

அந்த வயதான கொடி, சுவருடன் ஒட்டிப் படர்ந்திருக்கிறது. அதில், உள்ள இலைகள் பனி காரணமாக ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே போகின்றன. கடும் பனியின் மூச்சுக்காற்று கொடியின் அநேக இலைகளை உதிர்த்திருந்தது. அந்தக் கொடியையே பார்த்த வண்ணம் படுக்கையில் படுத்திருக்கும் ஜான்ஸியின் மனதில் ஒரு எதிர்மறையான எண்ணம் ஆழமாகப் பதிந்து போய்விடுகிறது.

அந்த இவி கொடியின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும்போது, தான் இறந்துவிடுவோம் என அவள் தனக்குள் உறுதியாக நம்பத் தொடங்குகிறாள்.

ஒவ்வொரு நாளும் கொடியின் இலைகள் உதிர்வதை அவர் வேதனையுடன் பார்த்து, அவற்றை எண்ணிக்கொண்டே இருக்கிறாள். ஒரு ஆத்மா தன்னைத்தானே சாவுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் உலகிலேயே மிக வேதனைக்குரிய ஒரு செயலை அவளை அறியாமலே மேற்கொள்கிறாள் ஜான்ஸி. உயிர் மீதான பிடிமானத்தைத் தளர்த்திக்கொண்டு, உதிர்ந்து விழும் அந்த எளிய இலைகள்போல காற்றில் மிதந்து போக முடிவு செய்துவிடுகிறாள் அந்த இளம்பெண்!

Representational Image
Representational Image
gbarkz on Unsplash

இதையறிந்த தோழி சூ மிகவும் வேதனைப்படுகிறாள். தன்னுடைய தோழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறாள் சூ. எனவே, ஜான்ஸிக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்கள் பலவற்றையும் செய்கிறாள்.

ஜான்ஸிக்குப் பிடித்தமான ஓவியங்களை அவள் முன் அமர்ந்து வரைகிறாள். ஆனால், ஜான்ஸியின் எண்ணம் முழுக்க அந்த இவிக் கொடி கடைசி இலையை உதிர்த்துவிட்டால், தான் இறந்துவிடுவோம் என்பதாகவே இருக்கிறது.

அவர்களுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள ஓவியர் பெர்மான், சூ-வினுடைய ஓவியத்துக்கு மாடலாக இருக்க மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு ஒருநாள் ஒப்புக்கொள்கிறார். அவரைப் படம் வரைகையில் சூ, தன்னுடைய தோழி ஜான்ஸியின் நிலையை அவரிடம் விவரிக்கிறாள்.

Representational Image
Representational Image
Eddy Klaus on Unsplash

அந்த நாள் இரவு கடுமையான காற்றுடன் மழை பெய்கிறது. ஜான்ஸி வெளியே அந்தக் கொடியைப் பார்க்கிறாள். அதில் ஒரே ஒரு இலை மட்டுமே அப்போது இருக்கிறது. பெரும் காற்றிற்கு அந்த இலை தள்ளாடுகிறது. எந்த நொடியும் விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது, அந்த ஒற்றை இலை. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜான்ஸி. அதைப் பார்த்த சூ, பதற்றத்துடன் அவசரமாகச் சென்று ஜன்னலை மூடி திரைகளைப் போடுகிறாள்.

ஜான்ஸி மிகுந்த வேதனையுடன் கண்களை மூடிக்கொள்கிறாள். அந்த இரவு முழுக்க பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்க்கிறது. அடுத்த நாள் விடிந்ததும், அந்த ஜன்னல் திரையை விலக்கச் சொல்கிறாள் ஜான்ஸி. வேதனையுடன் ஜன்னலின் திரையினை விலக்குகிறாள் சூ. அந்தக் கொடியில் ஒற்றை இலை உதிராமல் அப்படியேதான் இருக்கிறது. ஜான்ஸிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

இலையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அதன் காம்புக்கருகில் பசுமையும், ஓரங்களில் மஞ்சள் நிறமுமாய் அழகாக இருக்கிறது இலை. இத்தனை காற்றுக்குப் பிறகும் அந்த இலை விழாதது, ஜான்ஸிக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அன்றைய பகல் பொழுது முடிந்து அந்த நாள் இரவு வருகிறது. அந்த மங்கிய ஒளியில், இலை கொடியை இறுக்கமாகப் பற்றியிருப்பதைப் பார்த்து வியப்படைகிறாள் ஜான்ஸி!

Representational Image
Representational Image
Borna Bevanda on Unsplash

அன்றும் பெரும் காற்றும், மழையுமாக இருக்கிறது. ஜன்னலை மூடி விடுகிறாள் சூ. அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது அந்த இலை இன்னும் கொடியில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒன்று அந்த இலையை, அங்கு தொடர்ந்து நீட்டிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

அதைப் பார்த்த ஜான்ஸிக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை பிறக்கிறது. உயிர் பிழைப்போம் என்று நம்ப ஆரம்பிக்கிறாள். நோயிலிருந்து விடுபட்டு படிப்படியாகப் பழைய நிலைக்குத் திரும்புகிறாள் ஜான்ஸி.

முதல் நாள் காற்று, மழையிலேயே அந்த ஒற்றை இலையும் விழுந்து விட்டதாகவும், கீழே குடியிருந்த முதிய ஓவியரான பெர்மான், அந்தக் கொடி படர்ந்திருக்கும் சுவரில் ஒரு இலையை வரைந்ததாகவும் ஜான்ஸி குணமாகி உணவருந்தும்போது இலை குறித்த உண்மையைக் கூறுகிறாள் சூ.

Representational Image
Representational Image
Faris Mohammed on Unsplash

அந்த இலை பார்ப்பதற்கு உண்மையான இலை போலவே இருந்த காரணத்தால் ஜான்ஸி அதை இவிக் கொடியின் கடைசி இலை என நம்பிவிடுகிறாள். அந்த நம்பிக்கையே அவளை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. ஓவியர் பெர்மான், ஜான்ஸியின் உயிரைக் காப்பாற்றிய அந்த இலையை வரைந்த அடுத்த நாள் அதே சளி-காய்ச்சல் நோயில் இறந்துவிடுகிறார். ஆனால், அந்தக் கடைசி இலை அவரது வாழ்வில் ஒரு மகத்தான ஓவியம் என முடிகிறது கதை.

இன்றைய காலகட்டத்தில் கடுமையான பொருளாதாரச் சூழல் காரணமாய் மக்கள் தொடர்ந்து தங்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். சிலர் ஆரோக்கியம் குறித்த பயம், கவலைகளையும் சுமந்து வாழ்கின்றனர். மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் எழுந்து வர வேண்டும். மருந்துகள் மட்டுமே உடலை குணப்படுத்திவிடாது. நம் நம்பிக்கை முக்கியம் என்பதை உணர வேண்டும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு