Published:Updated:

இந்திய வரலாற்றில் மவுண்ட்பேட்டனின் பங்கு! -வாசகர் பகிர்வு #MyVikatan

Louis Mountbatten
Louis Mountbatten

கப்பற்படையில் பணியாற்றினாலும் படிப்பையும் கைவிடவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது கெல்லி என்ற போர்க்கப்பலின் தலைவரானார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்திய விடுதலையைப் படிக்கும்போது மவுண்ட்பேட்டன் பற்றிப் படிக்காமல் செல்ல முடியாது. இன்று அவரின் பிறந்தநாள். வரலாற்று மனிதர்கள் குறித்து தேடிப் படிப்பதில் ஆர்வமுடைய நான் மவுண்ட்பேட்டன் குறித்து படித்த தகவல்களை இங்கே பகிர்கிறேன்..

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார். ராணி எலிசபெத்தின் உறவினர். இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.

Louis Mountbatten
Louis Mountbatten

மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.

ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றபின் 1916-ல் பிரிட்டிஷ் கப்பற்படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றார்.

கேம்பிரிட்ஜ் க்ரைஸ்ட் கல்லூரியில் பொறியியலும் பயின்றது குறிப்பிடத்தக்கது. 1920-ல் கடற்படை தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

கப்பற்படையில் பணியாற்றினாலும் படிப்பையும் கைவிடவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது கெல்லி என்ற போர்க்கப்பலின் தலைவரானார். 1942-ல் டிப்பே தாக்குதலில் பங்குபெற்றார். 1943 முதல் 1946 வரை தென் கிழக்கு ஆசிய அமைப்பின் தளபதியாக விளங்கினார்.

#இந்தியாவின் வைஸ்ராய்

வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது இவரின் திறமை மற்றும் அறிவாற்றலைக் கண்டறிந்து ஊக்குவித்தார். இந்திய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டபோது இவர் 14-வது பிரிட்டிஷ் இம்பீரியல் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். சர்ச்சிலுக்குப் பின் வந்த தொழிற்கட்சி பிரதமரான கிளமண்ட் அட்லி இவரைப் பயன்படுத்திக்கொண்டார்.

Mountbatten speech during the nation’s first Independence Day celebration
Mountbatten speech during the nation’s first Independence Day celebration

இந்தியாவில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றபோது வேவல் வைஸ்ராயாக இருந்தார். அப்போது இடைக்கால அரசாங்கத்தில், `முஸ்லிம் லீக் நிர்வாக அவையில் சேரும், அரசியல் அமைப்பு அவையில் சேராது' என ஜின்னா அறிவித்தார். சமரசம் செய்து வைக்க வேவல் முயன்றும் நடைபெறவில்லை. பிரதமர் அட்லியின் நம்பிக்கையை இழந்ததால் வேவல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் மவுண்ட்பேட்டன் 1947 மார்ச் 22-ம் தேதி டெல்லிக்கு வந்து 24-ம் தேதி பிரமாணம் செய்து பதவியேற்று வருங்கால நடவடிக்கை குறித்து உரையாற்றினார்.

#சிறப்பு அதிகாரம்

வைஸ்ராய் பதவியேற்கும் முன் அட்லியிடம் மவுண்ட்பேட்டன் மூன்று சலுகையினைக் கேட்டார்..

அவை

1) பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு வெளியேறும் தேதி அறிவித்தல்

2) லண்டன் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தான் முடிவெடுக்கும் அதிகாரம்

3) உயர் அதிகாரி குறிக்கீடு இன்மை ஆகியவை முன்வைத்து அதிகாரம் பெற்று இந்தியா வந்தார்.

குழப்பமான நிலையில் இருந்தபோது நேரு, காந்தி, பட்டேல், ஜின்னா ஆகிய நால்வருடன் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். ஜின்னாவுடன் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தினார். 133 பேருடன் நேர்முக உரையாடல் நடத்தினார். அதன்பின் வி.பி.மேனனுடன் இணைந்து ஒரு திட்டத்தைத் தயாரித்தார். அதுவே `மவுண்ட்பேட்டன் திட்டம்’.

ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த நேரு.... அமெரிக்காவுக்கு அஞ்சாத பிரதமர்! #VikatanRewind

#பிரிவினை

பன்னிரண்டு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தினை லண்டன் சென்று ஒப்புதல் பெற்று வந்த பிறகு 1947-ம் ஆண்டு ஜூன் 3ம்- தேதி வானொலி மூலம் வைஸ்ராய் உரையாற்றினார்.

நேரு, பட்டேல், ஜின்னா, பல்தேவ்சிங் ஆகியோர் உடனிருந்தனர். இத்திட்டத்தை சோசலிஸ்ட்டுகள் எதிர்த்தனர். ஜூன் 15-ம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் பதிவாகின. எனவே ஆகஸ்ட் 15-ம் தேதியை முடிவு செய்தனர். விரைவாக வெளியேறிவிட்டால் பிரிவினையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்காது. எனவே ஆகஸ்ட் 14-ம் தேதி மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் பதவியிலிருந்து விலகினார். காங்கிரசின் கோரிக்கையை ஏற்று 1947 ஆகஸ்ட் 15-லிருந்து 1948 ஜூன் 21 வரை தலைமை ஆளுநராக இருக்கச் சம்மதித்தார். அதன்பின் ராஜாஜி 1950 வரை தலைமை ஆளுநராகப் பணியாற்றுனார். 1948-ம் ஆண்டு பிரிட்டன் திரும்பினார்.

 Jawaharlal Nehru,  Edwina and  Louis Mountbatten
Jawaharlal Nehru, Edwina and Louis Mountbatten

#கப்பல் படை தளபதி

1949-ம் ஆண்டு மவுண்ட்பேட்டன் இங்கிலாந்து கடற்படைக்குத் திரும்பினார். ஒரு புதிய நேட்டோ மத்திய தரைக்கடல் கட்டளையின் தளபதியாக ஆனார். 1954-ம் ஆண்டில் அவர் கடல் அதிபராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தையால் வகிக்கப்பட்டது. இறுதியாக, 1959-ல், அவர் பாதுகாப்பு ஊழியர்களின் தலைவரானார், பின்னர் கடற்படையில் இருந்து அட்மிரலாக ஓய்வு பெற்றார்.

1967 முதல் 1978 வரை யுனைடட் வேர்ல்ட் காலேஜஸ் ஆர்கனைசேஷன் தலைவராய்ப் பணியாற்றினார். ரைட் ஹானரபிள், பர்மாவின் முதல் கோமகன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

#இறுதி நாள்கள்

1978-ம் ஆண்டே மவுண்ட்பேட்டனைத் துப்பாக்கியால் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக இயலவில்லை. 1979-ல் அயர்லாந்தின் கவுண்டி ஸ்லிகோ கடற்கரையில் கிளாசிபான் கோட்டையில் குடும்ப விடுமுறையைக் கொண்டாட அவரது Shadow V மீன்பிடி படகில் ஒருநாள் குடும்பத்தாருடன் சென்றுகொண்டிருந்தபோது ரிமோட் கன்ட்ரோல் குண்டுகள் மூலம் ஐ.ஆர்.ஏ பயங்கரவாதிகள் அவரது படகை வெடிக்க வைத்தனர்.

Louis Mountbatten
Louis Mountbatten

மவுண்ட்பேட்டன் கொலை செய்யப்பட்டார். பேரன் நிக்கி நாட்ச்புல் உட்பட இரு உறவுகள் குண்டுவெடிப்பில் இறந்தனர். மவுண்ட்பேட்டனின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தன. அவர் பிராட்லாண்ட்ஸுக்கு அருகிலுள்ள ரோம்ஸி அபேயில் அடக்கம் செய்யப்பட்டார்.

இறுதிச்சடங்கில் பேசிய இளவரசர் சார்லஸ்,

``மவுண்ட்பேட்டனுக்குத் தொடர்ந்து செயல்படும் மூளை இருந்தது. அது ஒரு கணம் கூட ஓய்வெடுக்க அனுமதிக்கப்படவில்லை. எப்போதும் ஒரு புதிய சவாலைச் சமாளிக்க புதிய திட்டங்களை இயக்க, அதில் ஏற்படும் எதிர்ப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இடைவிடாது முயன்றவர்'' என்றார்.

அவரின் பிறந்தநாளில் இதனை நினைவுகூர்வோம்.

-மணிகண்டபிரபு

அடுத்த கட்டுரைக்கு