பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
அது ஒரு யானைக் காடு. அங்கே நிறைய நிறைய யானைகள் இருந்தன. அப்போது எல்லாம் யானைகள் ஒல்லியாக இருந்தன. அந்த யானைகளுக்கு திடீரென பறக்கும் சக்தி வந்தது.
பறவை போல யானைகள் வானில் பறந்தன. பெரிய காதுகளை சிறகுகளைப் போல வீசிக்கொண்டு பறந்து சென்றன. நடந்து கொண்டிருந்த யானைகள் திடீரென பறப்பதைப் பார்த்து, மற்ற காட்டு விலங்குகளுக்கு ஒரே ஆச்சர்யம். யானைகள் எங்க போனாலும் பறந்துதான் சென்றன. தண்ணீர் குடிக்கப் போனாலும், உணவு தேடிப் போனாலும் பறந்துதான் சென்றன. சும்மாவாது வானில் அங்குமிங்கும் எனப் பறந்துகொண்டிருந்தன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படி யானைகள் பறக்க காரணம், குருவிகள். குருவிகள்தான் யானைகளுக்கு பறக்கும் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தன. யானைகள் பறப்பதற்கு முன்பு, ஒரு நாள் குட்டி யானை ராஜா ஒரே அழுகை. எப்பவும் ஜாலியா ஜங்க், ஜங்க்னு ஆடிட்டே இருக்குற ராஜா, கண்ணீர் வழிய சோகத்தோடு தனியாக நின்றிருந்தது. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட குருவி ஒன்று ராஜா கிட்ட போயி,
``என்னாச்சு?... ஏன் அழுகுற?” எனக் கேட்டது.
``காட்டுல உணவே கிடைக்க மாட்டிங்குது. இன்னிக்கு ரொம்ப தூரம் நடந்து போயும் கிடைக்கல. ஓரிடத்தில இருந்த கரும்ப ஆசையா சாப்பிடலாம்னு போனப்பா, ஊர்க்காரங்க விரட்டுனதுல அடிபட்டு வலிக்குது… எனக்கு ரொம்ப பசிக்குது. நடக்கவே முடியல” என ராஜா அழுதிட்டே சொன்னது.
``பாவம்… ராஜா பசி தாங்க மாட்டானே” என நினைத்த குருவி, உணவு சேகரித்து வந்தது.
யானை பசிக்கு குருவி கொண்டு வருவது பத்துமா? எவ்வளவு போட்டும் ராஜாவுக்கு போதவில்லை. குருவி அதோட பிரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு, உணவு எடுத்து வந்தது. நூறு முறை நூறு குருவி எடுத்து போட்டும், ராஜாவுக்கு பசி அடங்கல. ஒரு கட்டத்தில் குருவிகள் பறக்க முடியாமல் சோர்ந்து போயின.

``நாங்க யாரு நெனச்சாலும் உன் பசியை போக்க முடியாது. ஆனா, நீ நெனச்சா எல்லோர் பசியையும் போக்கலாம்” என ராஜா யானைக்கு குருவி பறக்கும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்தது.
ராஜா மற்ற யானைகளுக்கு கற்றுத் தந்தது. அதில் இருந்துதான் யானைகள் பறக்க ஆரம்பித்தன. பறக்க ஆரம்பித்ததில் இருந்து யானைகளுக்கு நடப்பதே மறந்து போனது. யானைகள் பறந்து சென்று ருசியாகச் சாப்பிட்டு ஜாலியாகச் சுற்றின.
ஒல்லியா இருந்த யானைகள் குண்டு குண்டாக மாறின. யானைகள் பறந்து சென்று பசியாறியதும், மற்ற விலங்குகளுக்கும் உணவு கொண்டு வந்து கொடுக்கணும் எனக் குருவிகள் நிபந்தனை போட்டியிருந்தது. அதனால யானைகள் மற்றவைகளுக்கு உணவு கொண்டு வந்தது. அப்புறம் நாளாக நாளாக மற்ற விலங்குகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கவில்லை. தங்கள் வாக்கை மீறின. மற்ற விலங்குகள் பசியில் வாட, யானைகள் மட்டும் ருசியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. இதனால் மற்ற விலங்குகளுக்கு எல்லா கோபம். இதையறிந்த குருவிகள் யானைகளிடம் நியாயம் கேட்கச் சென்றன.
”நாங்க கஷ்டப்பட்டு பறந்து போயி அதுகளுக்கு எதுக்கு தரணும்?” என்று யானைகள் திருப்பிக் கேட்டன.
“இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் ஆனது. அதைப் புரிஞ்சுக்காம சுயநலமா இருக்குற உங்களுக்கு பறக்குற மந்திரம் மறந்து போகும். இனி ஒருவேளை உணவுக்கும் தேடி அலைந்து திரிவீங்க” எனக் குருவிகள் சாபமிட்டன. அப்போது இருந்து பெரிய உடம்போடு யானைகள் உணவு தேடி வெகு தூரம் அலைய ஆரம்பித்தன.
- பிரசாந்த் வே
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.